காவேரி மருத்துவமனை சாதனை!

ஆணும் பெண்ணும் சமம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை‌.ஆனால், உடல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உண்டு. அதில் ஆணை விட பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களும் சோதனைகளும் அதிகம்.

பெருங்குடலுக்கும் பெண் உறுப்புக்கும் இடையே அசாதாரண துளை ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த ஏறத்தாழ 70 வயது பெண்ணுக்கு இதயத்தில் ஏற்படும் துளைகளை அடக்க பயன்படுத்தப்படும் கருவியைக் கொண்டு வெற்றிகரமாக சிகிச்சை அளித்திருக்கிறார்கள் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்.

2018 ஆம் ஆண்டு முதல் மலக்குடலில் ஏற்பட்ட கசிவு காரணமாக பெண் உறுப்பு வழியாக மலம் வெளியேறி வந்ததால் மிகவும் துன்பத்திற்கு ஆளாகி செய்வதறியாது வேதனையில் இருந்திருக்கிறார்.

இதனால் அந்த பெண்மணிக்கு அடிக்கடி சிறுநீரக தொற்று, தொடர்ச்சியான உடல் உபாதைகள் ஏற்பட்டு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு… இதற்கு ஒரு முடிவு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்து வந்திருக்கிறார்.

சவாலான சிக்கலுக்கு புரட்சிகர தீர்வு!

இந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு இருந்த முதல் சவாலே,அந்தத் துளை எந்த இடத்தில் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவதுதான். ஏனெனில்,முந்தைய அறுவை சிகிச்சைகளால் அந்த இடத்திலிருந்த திசுக்கள் முற்றிலும் மாறிப்போயிருந்தன. இருப்பினும், விரிவான பரிசோதனைகள் மற்றும் அதிநவீன எண்டோஸ்கோப்பி முறை மூலம் இரைப்பை குடல் மருத்துவக் குழுவினர்,யோனிப் பகுதியில் மலம் வெளியேறும் துளையையும்,அதன் பாதையையும் சரியாகக் கண்டறிந்தனர்.

இந்த பாதிப்பின் சிக்கல்களைக் கருத்தில் கொண்ட இரைப்பை குடலியல் துறை மருத்துவர்கள், இதயச் சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து, இப்பெண்ணுக்காக ஒரு புதிய சிகிச்சை திட்டத்தை உருவாக்கினர். அதன்படி, இதயத்தின் சுவர்களில் உள்ள துளையை மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய அடைப்புக் கருவியை (cardiac occlusion device), பெருங்குடல் மற்றும் யோனிக்கு இடையே உள்ள துளையை மூடுவதற்குப் பயன்படுத்த முடிவு செய்தனர்.

இதயத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியை, உடலின் முற்றிலும் வேறுபட்ட ஒரு பகுதியில் பொருத்துவது சாதாரண விஷயமல்ல;இதற்கு மிகத் துல்லியமான திட்டமிடலும்,இரு துறை மருத்துவர்களின் சிறந்த ஒருங்கிணைப்பும் தேவைப்பட்டது. இந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், நோயாளி எவ்விதப் பக்கவிளைவுகளும் இன்றி நலமாகத் தேறி வருகிறார். இந்த கூட்டு மருத்துவக் குழுவிற்கு முதுநிலை இரைப்பை குடலியல் மற்றும் எண்டோஸ்கோப்பி சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.கே. ஆனந்த் மற்றும் முதுநிலை இதய சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பி. மனோகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

டாக்டர் டி.கே. ஆனந்த் இச்சிகிச்சை குறித்து கூறியதாவது “முந்தைய பல அறுவை சிகிச்சைகளால் உடற்கூறியல் அமைப்பு மாறியிருந்ததால், இந்தத் துளையைக் கண்டறிவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. நோயாளி பல ஆண்டுகளாக இந்த வேதனையான பாதிப்புடன் வாழ்ந்து வந்தார்.அந்தத் துளையை அடைப்பது மட்டுமல்லாமல், அவருக்கு நிம்மதியையும், கண்ணியத்தையும் மீட்டெடுத்து,தரமான வாழ்க்கையை வழங்குவதும் எங்களது நோக்கமாக இருந்தது. அத்துளையையும், அதன் வழித்தடத்தையும் மிகத்துல்லியமாக கண்டறிந்ததே இச்சிகிச்சையில் வெற்றிகரமான விளைவை சாத்தியமாக்கியிருக்கிறது” என்றார்.

இடையீட்டு இதயவியல் சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் பேராசிரியர் பி. மனோகர் கூறியதாவது:

“இதயத்திலுள்ள துளையை அடைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியை, இதயத்திற்கு வெளியே பயன்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களைக் கொண்டது. இதற்குத் துளையின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டு,சரியான இடத்தில் பொருத்துவது அவசியமாக இருந்தது. மருத்துவத் துறையில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்து சிந்தித்து,சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் ஒரு துறையில் பயன்படுத்தப்படும் உத்தியையும், கண்டுபிடிப்பு கருவிகளையும் மற்றொரு துறையின் சிக்கலான நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்த முடியும் என்பதற்கு இப்பெண்ணுக்கு செய்யப்பட்டிருக்கும் அறுவைசிகிச்சை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.

காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்,

“இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை” என்றார்.

பெண் உறுப்பு வழியாக மலம் வெளியேறியது என்பது சாதாரண விஷயம் அல்ல. மிகவும் துன்பத்திற்கு ஆளாகி இருப்பார்.முதிய வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவரை சிகிச்சை அளித்து காப்பாற்றியது மிகவும் பாராட்டுக்குரியது.

-பவித்ரன்.
ஹெல்த் அண்ட் பியூட்டி.