சென்னையில் இயங்கி வருகிறது எம்.ஜி.எம்.புற்றுநோய் இன்ஸ்டிடியூட்.
சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் 33 வயது பெண்ணுக்கு,ஒரே மார்பகத்தில் இருந்த இரண்டு தீங்கற்ற கட்டிகளை அகற்றி வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளது. மார்பகத்தின் இயற்கையான தோற்றம் மாறாமல் பாதுகாக்க,ஒரு கட்டிக்கு வழக்கமான திறந்தநிலை அறுவை சிகிச்சையும், இன்னொரு கட்டிக்கு தழும்புகளை ஏற்படுத்தாத அதிநவீன( வாக்குவம் அசிஸ்டட் எக்சிசன் ) VAE முறையும் பயன்படுத்தப்பட்டது. முதல் அறுவை சிகிச்சையின் தழும்பு மிகச் சிறியதாக இருப்பதால் காலப்போக்கில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும். அதே சமயம் இரண்டாவது VAE முறையில் பெரிய வெட்டுக் காயங்கள் ஏதுமில்லாததால் கண்ணுக்கு தெரிகிற எந்தவொரு தழும்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வலியோடு சேர்த்து அப்பெண்ணின் மார்பகத்தில் இருந்த கட்டியின் அளவும் வடிவமும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது;இதன் காரணமாக எழுந்த அச்சமே அவரை மருத்துவ பரிசோதனையையும், சிகிச்சையையும் பெறுவதற்காக மருத்துவமனையை அணுகுமாறு தூண்டியது.

இந்த அறுவைசிகிச்சையை செய்த மருத்துவக் குழுவிற்கு தலைமையேற்ற மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் கீர்த்தி கேத்தரின் கபீர் கூறுகையில், “இளம் பெண்களிடையே ஃபைப்ரோஅடினோமா கட்டிகள் ஏற்படுவது மிகவும் சாதாரண ஒன்றுதான்.சுமார் 55% முதல் 70% வரையிலான பெண்களுக்கு இத்தகைய கட்டிகள் உருவாகின்றன. இது புற்றுநோயாக மாறாது என்றாலும், தொடர்ந்து வளர்ந்து மார்பகத்தில் வலியையும், அசௌகரியத்தையும் உருமாற்றத்தையும் ஏற்படுத்தும்.

இந்த நோயாளிக்கு ஒரே மார்பகத்தில் இருந்த இரண்டு கட்டிகளுக்கும் தனித்தனியாக வேறுபட்ட சிகிச்சை முறைகள் தேவைப்பட்டன. ஒரு கட்டிக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சையை செய்த நாங்கள், மற்றொரு கட்டிக்கு காயதழும்புகளைத் தவிர்க்கும் VAE என்ற நவீன உத்தியைப் பயன்படுத்தினோம். சிகிச்சை நடைபெற்ற அதே நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், சில நாட்களிலேயே தனது வழக்கமான பணிகளைச் செய்வது சாத்தியமானது; இது இந்த சிகிச்சையின் வெற்றிகரமான பலனை சுட்டிக்காட்டுகிறது” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இளம் பெண்களின் மார்பகக் கட்டிகளை அகற்றுவதில் குறிப்பாக அவர்களின் அழகியல் தோற்றத்தைப் பாதுகாப்பதில் VAE சிகிச்சை உத்தியை ஒரு சிறந்த வரம் என்றே கூற வேண்டும்.இதில் அல்ட்ராசவுண்டு சோதனை மூலம் கட்டியிருக்கும் இடத்தை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து,சிறிய துளை வழியே பிரத்யேகக் கருவியை உட்செலுத்துவதன் வழியாக மார்பக கட்டியைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெற்றிட உறிஞ்சல் முறை மூலம் வெளியேற்றிவிடும்.கட்டி முழுமையாக அகற்றப்படும் வரை இந்த செயல்முறை தொடரும். வழக்கமாக அறுவைசிகிச்சையில் ஏற்படும் பெரிய வெட்டுக்காயமோ, தையலோ இதில் இல்லையென்பதால்,மார்பகத்தின் இயற்கையான தோற்றம் தக்கவைக்கப்படுகிறது” என்று விளக்கினார்.

மூத்த மருத்துவர் டாக்டர் எம்.ஏ.ராஜா பேசினார்…

“மார்பகத்தில் வரும் கட்டிகள் எல்லாம் புற்றுநோய் கட்டி என்று அச்சப்படத் தேவையில்லை.
சாதாரண கட்டிகளாகவும் இருக்கலாம். எந்த கட்டியாக இருந்தாலும் சிகிச்சை முக்கியம்.
பெண்கள் அவ்வப்போது தவறாமல் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அலட்சியமாக இருக்கக்கூடாது. மார்பக தோற்றத்தை இழக்காமல் சிறந்த சிகிச்சை பெற முடியும்” என்று கூறினார்.

-ஷைலஜா. ஹெல்த் அண்ட் பியூட்டி.