படுக்கை யுத்தத்திற்கு தயாராகுங்கள்

– டாக்டர் என்.என்.கண்ணப்பன், பாலியல் நிபுணர்

தாம்பத்ய உறவு.. செக்ஸ்.. கணவன்&மனைவி இருவரின் அடிப்படைத் தேவை. இந்த தேவை முறையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதால்தான் திருமணம் என்பது இங்கு கட்டாயத் தேவையாக இருக்கிறது. திருமண உறவில் மட்டுமே ஆணும், பெண்ணும் எவ்வித உடல் நலக்கோளாறு பயமின்றி நிம்மதியாக உறவு கொள்ள முடியும். பெண்ணுக்கு திருப்தி ஏற்படுகிறதா என்பது வேறு விஷயம். ஆனால், இன உற்பத்திக்காக மட்டுமே இங்கு ஏனோதானோவென்று தாம்பத்ய உறவு கொள்ளப்படுகிறது. திருமணமான புதிதில் இருக்கும் வேகம், ஆர்வம் போகப்போக குறைந்து விடுகிறது.

அப்போதும், தாம்பத்ய உறவில் ஆண் உச்ச கட்டத்தை எட்டுவதோடு நின்று விடுகிறது. பெண் உச்சம் அடைவது பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை. அப்படியே தெரிந்தாலும் அந்த ஆண் ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போதும் இதனை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. கணவன்&மனைவி இருவருமே முழு இன்பம் பெறுவதுதான் தாம்பத்ய உறவின் சிறப்பம்சம். ஆண் மட்டுமே உச்சகட்டத்தை அடைந்தால் அது சுயஇன்பம். கணவன்&மனைவி இருவருமே உச்சகட்டத்தை அடைந்தால் அதுதான் பேரின்பம்.

உடல் ரீதியாக பார்த்தோமானால் ஆண் இனப்பெருக்க உறுப்பில், சிறுநீரை வெளியேற்றுவதும், விந்து வெளியேற்றமும் ஒரே பாதையில் நடக்கிறது. ஆனால், பெண்களுக்கு சிறுநீர் கழிக்க தனிப்பாதை, தாம்பத்ய உறவு கொள்ளத் தனிப்பாதையும் உள்ளது.
தாம்பத்ய உறவில் பெண் எப்படியெல்லாம், எப்போதெல்லாம் திருப்தி அடைகிறாள் என்பது பற்றி ஆண் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்ணின் யோனிப்பாதையில் ஆணுறுப்பைச் செலுத்தி இயக்குவதால் மட்டும் அவள் முழுமையான திருப்தியடைவதில்லை.

தாம்பத்ய உறவில் ஆண்&பெண் இருவருக்கும் உச்ச கட்டம் என்பது வெவ்வேறு நேரத்தில் நிகழ்கிறது. உச்ச கட்டம் என்பது ஆணுக்கு விரைவாகவும், பெண்களுக்கு கொஞ்ச நேரம் கழித்தும் நிகழ்கிறது. அதை ஒரே நேரத்தில் நிகழ வைப்பதுதான் பேரின்பம். அதிலும் விந்து முந்துதல் பிரச்னை உள்ள ஆண்களால் அவ்வளவு சீக்கிரம் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியாது. விந்து முந்துதல் பிரச்னையைச் சரி செய்து இதற்கான தீர்வு காண முடியும்.

தாம்பத்யம் நீண்ட நேரம் தொடர்ந்து இன்பத்தில் மூழ்க முன் விளையாட்டுகள் மிக முக்கியம். தொடுதல், தடவுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல் என பல முன் விளையாட்டுக்கள் உண்டு. இந்த விளையாட்டுக்களால் பெண், கொஞ்சம், கொஞ்சமாக உச்சநிலையை அடைகிறாள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆண், முன்விளையாட்டுக்களுக்கான எந்த முயற்சியை எடுக்காமல் கடமையே என சில நிமிடங்களில் தன் வேலையை முடித்து விடுகிறான்.
அந்த உறவில் அவனுக்கான இன்பம் கிடைத்து விடுகிறது. ஆனால், பெண் மனதில், தனக்குள் என்ன நடந்தது? அவன் என்ன செய்தான்? அவ்வளவுதானா? என்று பல கேள்விகள் எழுகிறது. இந்தச் செயல் சம்பந்தப்பட்ட ஆணின் மீதான வெறுப்பாக கூட வளர்கிறது.

தாம்பத்ய உறவுக்கு முன்பு, அன்பாய், அரவணைப்பாய் ஆண் ரொமான்ஸ் செய்ய வேண்டும். லவ் மூட்ஐ கொண்டு வரும் வேலையை பல ஆண்கள் செய்வதில்லை. மனைவியுடன் இது போன்ற செல்லப் பகிர்வுகள் நிறைந்த பலன் தரும். காதல் நெருக்கம் கூட்ட ரொமான்ஸ் பயன்படுவது போல காமம் பற்ற வைக்கவும் ரொமான்ஸ் முக்கியம். வயது 16 ஆனாலும் சரி, 60 ஆனாலும் சரி காதல் கலந்த குழந்தைத் தனத்துடன் உங்கள் மனைவியுடன் எப்போதும் ரொமான்ஸை வெளிப்படுத்துங்கள்.

ஆண் விரைவாக தாம்பத்ய உறவை முடித்துக் கொண்டால் காமம் சிறக்காது. உறவில் தனக்குத் தேவையான சுகம் கிடைக்கும் வரை மட்டுமே பெண்ணைப் பயன்படுத்திக் கொண்டு காமத்தின் முழுமையை அப்பெண் உணரச் செய்யாமல் பெண்ணின் உணர்வுகளைத் திருப்திப்படுத்தாமல் ஆண் விலகுவது எப்படி முழுமையடையும். இப்படியான நேரங்களில் பெண் வஞ்சிக்கப்படுகிறாள்.
பெண்ணின் மனதை, உணர்வுகளின் ஆழத்தை புரிந்துகொண்டு ஓர் ஆண் செயல்படும்போது வெற்றி கிடைக்கும். உடலுறவில் ஆண் அடையும் வெற்றி அவனுக்கு மட்டும் சொந்தமானதில்லை. தனது இணைக்கும் அந்த வெற்றி இன்பம் அளிக்கும். பரஸ்பர புரிதலை உண்டாக்கும்.

காமத்தில் பெண்கள் எதிர்பார்ப்பது தாம்பத்ய உறவு கொள்வது மட்டுமல்ல; உடலுறவில் ஆண் திருப்தி அடைந்த நிலையில் தன்னை விட்டு விலகாமல் ஆரத்தழுவி, கட்டியணைத்து அன்பாக வார்த்தைகளில் விளையாடுதல், முத்தமிடுதல் போன்ற செயல்களையும் எதிர்பார்க்கிறாள். பெண்ணுக்கு அந்தரங்க உறுப்புகளின் செயல்பாட்டால் கிடைத்ததை விட பல மடங்கு இன்பத்தை இது அளிக்கிறது.

இதை தாம்பத்ய உறவுக்கு பிந்தைய விளையாட்டு எனலாம். தாம்பத்ய உறவில் முன் விளையாட்டும் முக்கியம்; பின் விளையாட்டும் முக்கியம்.
பொறுமை, நேசம், காதல், முன் விளையாட்டு, பின் விளையாட்டு அத்தனையும் காம வித்தைகள். இந்த வித்தைகள் ஒன்றும் கடினமானதல்ல. இதைக் கற்றுக் கொண்டால் படுக்கையறையில் எப்போதுமே வெற்றிதான். இந்த வெற்றி ஆணுக்கு மட்டுமல்ல.. பெண்ணுக்கும்தான். யாருமே தோல்வியடையாத படுக்கை யுத்தத்துக்கு தயாராகுங்கள்.