கூட்டுக்குடும்பம் சிதைந்து விட்டது. தனிக்குடும்பம்தான். அதனால், ஒற்றை குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அதையும் கிரீச்சில் விட்டுவிட்டு கணவன்&மனைவி இருவரும் வேலைக்குச் சென்று வருகிறார்கள். இருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை, தனியார் பள்ளியில் குழந்தையை சேர்த்து எல்.கே.ஜி.க்கே ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என்று கொட்டி அழுகிறார்கள்.
ஒற்றைக் குழந்தைகள் குடும்பம் ஏராளமாய் பெருகி விட்டது. அண்ணன், தங்கை, அக்கா, தம்பி என்ற உறவு முறைகள் எல்லாம் அற்று வருகிறது. ஆண் குழந்தை மட்டுமே என்றால், பெண் வாடை இல்லாமல் வளர்கிறது. பெண் குழந்தை என்றால் ஆண் வாடை இல்லாமலே வளர்கிறது. இப்படி வளரும், ஆணும், பெண்ணும் பருவ வயதில் இயல்பான பாலினக் கவர்ச்சிக்கு ஆளாகி விடுகிறார்கள். கூடவே, வீட்டுக்குள்ளேயே இருக்கும் டிவி, இன்டர்நெட் இணைப்புடன் இருக்கும் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போன்கள் இளைய தலைமுறையை தடுமாற வைக்கிறது. தடம் மாற வைக்கிறது. திரைப்படங்களுக்கும் இந்த வரிசையில் முக்கிய இடமுண்டு.
பார்த்தவுடன் காதல், பார்க்காமலே காதல், ஃபேஸ் புக் காதல் என்று காதல் என்ற பெயரில் கண்ராவிகள் நீக்கமற நிறைந்து விட்டது. இப்படிப்பட்ட காதலால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இங்கு ‘தேவதாஸ்’களை விரல்விட்டு எண்ணி விடலாம். ‘பார்வதி’களின் எண்ணிக்கை, எண்ணி மாளாது. போதாக்குறைக்கு விரும்பாத பெண் மீது ஆசிட் வீசுவது, கொலை செய்வது என்று கொடுந்தொழில் புரியும் கொடூரர்களும் பெருகிவிட்டார்கள்.
‘‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பினிலே’’ என்பதை பெற்றோர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் பதின்ம வயதை எட்டி விடுவதற்கு முன்பே எல்லாவற்றையும் பற்றி பெற்றோர் பக்குவமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக பெண்குழந்தைகளைப் பற்றி ஆண் குழந்தைகளுக்கு உயர்வாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த விஷயமானாலும் பெற்றோரிடம் சொல்லலாம் என்ற ஒரு அன்னியோன்யத்தை குழந்தையின் மனதில் விதைக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பதின்ம வயதுக்கு வந்து விட்டால் அவர்களுடன் சில மணித்துளிகளாவது செலவிட வேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொடுத்து விட்டு கடமை தீர்ந்தது என்று விடக் கூடாது. அவர்களின் நண்பர்கள், பொழுது போக்குகள், அவர்கள் செல்லுமிடங்கள் என்று அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகளோடும், அவர்களின் நண்பர்களோடும் நட்புடன் பழகுங்கள். இணையத்தில் அவர்கள் நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள் எனத் தெரிந்தால் கண்காணியுங்கள். ஒற்றைப் பிள்ளையாயிற்றே என்று அதீத செல்லமும் வேண்டாம். தண்டிக்கவும் வேண்டாம். கண்டிப்பதில் ஏதும் தவறில்லை. நம் குழந்தைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை வேண்டாம். அதே போல அவர்கள் தவறு செய்து விட்டால் மூடி மறைத்து அதற்கு நியாயம் கற்பித்தலும் வேண்டாம்.
இப்போதெல்லாம் பிள்ளைகளை வளரிளம்பருவத்தில் ரெசிடென்ஷியல் ஸ்கூலில் சேர்த்து விட்டுப் பெற்றோர்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள். இந்தப் பருவம்தான் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆண்,பெண் நட்பு, இனக் கவர்ச்சிக்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடு இவற்றைக் கற்றுக் கொடுக்கக் வேண்டிய உரியதருணம். ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன் பிரச்சினைகள் எல்லாவற்றைப் பற்றியும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டிய இந்த நேரத்தில் அவர்களை விடுதியில் சேர்த்தால் அவர்கள் தங்கள் மனதில் எழும் சந்தேகங்களை எங்கு யாரிடம் கேட்டுத் தெளிவார்கள்? இதனால் தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. உடன்பிறப்புகளோடு வளரும் குழந்தை எதையும் பகிர்ந்துண்ண, விட்டுக் கொடுக்க கற்றுக் கொள்கிறது. ஒற்றைப் பிள்ளையாய் இருந்தால், பெற்றோரின் செல்லமும் அதிகமாக இருக்கும். குழந்தையின் பிடிவாதமும் அதிகமாக இருக்கும்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கியமாகத் தந்தைதான் குழந்தைகளுக்குத் தலை சிறந்த முன்மாதிரி. குழந்தைகளை செய்ய வேண்டாம் எனத் தடுத்து விட்டு அவர்கள் கண் முன்பாகவே நாம் அந்தச் செயலைச் செய்தால் குழந்தைகள் எதிரில் நாம் தரம் தாழ்ந்து விடுவோம். குறிப்பாகப் பொய் பேசுதல் வேண்டாத வார்த்தைகளைப் பேசுதல் கூடவே கூடாது. பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு எதிரில் எதைப் பேசுவது என்றாலும், யோசித்துப் பேச வேண்டும். பேசுவதையே யோசித்துப் பேச வேண்டும் என்றால், புகை பிடிப்பது, மது அருந்துவதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பெண்கள் வீட்டில் எப்போது பார்த்தாலும் சீரியல் பார்ப்பது அண்டை வீட்டுப் பெண்களுடன் பிறரைப் பற்றிப் புறம் பேசுவது என்றிருக்க வேண்டாம். இப்படி இருப்பது நல்லறமாகாது. நம் பெண்களுக்கு நாமே தவறான வழிகாட்டியாக அமைந்து விடக் கூடாது. பிறகு அவர்களைக் கண்டித்தால் நீயே அப்படித்தானே செய்தாய் என்று நம்மைத் திருப்பிக் கேட்டு விடுவார்கள். முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதிரில் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்.
அப்படி தினமும் சண்டை சச்சரவுகளைப் பார்த்து கொண்டே வளரும் குழந்தைகள் தான் மனதில் மென்மையான உணர்வுகளைத் தொலைத்து விட்டு இப்படி ஒருதலைக் காதலிலும் காதல் கைகூடவில்லையெனில் கொலைகாரர்களாகவும் மாறி விடுகிறார்களாம்.
ஆயிரம் கனவுகளுடன் குழந்தைகளைப் பெற்று வளர்க்கிறோம். அவர்களின் எதிர்காலத்திற்காக இரவும் பகலும் உழைக்கிறோம். அது மட்டும் போதுமா? மேலே சொன்ன விஷயங்களை கடைப் பிடித்தால் மட்டுமே நம் பிள்ளை நல்லவனாக வளர முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். குழந்தைகளை வல்லவர்களாக வளர்ப்பதை விட நல்லவர்களாக வளர்ப்பதே இன்றைய காலகட்டத்திற்கு அத்தியாவசியமானது.
நீங்கள் உங்கள் குழந்தையை நல்லவனாக வளர்த்தால், அடுத்த தலைமுறையை உங்கள் மகனோ, மகளோ நல்லவர்களாக வளர்ப்பார்கள். இப்படி நல்ல தலைமுறை பரம்பரை பரம்பரையாகத் தொடரும்.
சிறு வயதுப் பையன்கள் முதல், கிழவர்கள் வரை பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற சிந்தனை சிறுகச் சிறுக மறையும். பெண்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான பிரசாரத்தை வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம். வளரும் தலைமுறையை வாழ வைப்போம். நல்லவர்களாக இருப்போம்; மற்றவர்களையும் நல்லவர்களாக இருக்க வைப்போம்.

