-முனைவர் சாரா மாணிக்கராஜ், உளவியல் நிபுணர்.

ணவன் மனைவி இருவரும் இணைந்து நடத்தும் குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாக, ஆனந்தம் விளையாடும் வீடாக இருக்க வேண்டும். திருமண பந்தம் என்பது புரிதல், அன்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு அழகான பிணைப்பு ஆகும்.இது ஒரு புனிதமான உறவு, இதில் இருவரும் ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடனும், ஆதரவாகவும் இருக்க வேண்டும்.

ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது இந்த உறவின் அடிப்படை.கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை பேசி தீர்த்துக்கொள்வதன் மூலம் உறவை வலுப்படுத்தலாம்.

அன்பு என்பது இந்த உறவை நிலைநிறுத்தும் ஒரு முக்கிய காரணி. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும், அதை வெளிப்படுத்துவதும் உறவை இனிமையாக்கும்.

திருமண வாழ்க்கையில், விட்டுக்கொடுத்து செல்வது என்பது மிகவும் அவசியமானது.சில நேரங்களில், நம்முடைய விருப்பங்களை விட, வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது வரும். இது உறவை பலப்படுத்தும்.

கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் எல்லா சூழ்நிலைகளிலும் ஆதரவாக இருக்க வேண்டும்.ஒருவரின் வெற்றிக்கு மற்றவர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்த உறவில் இருவரும் சமம். இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து, ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்.

இந்த அம்சங்களை கடைபிடிப்பதன் மூலம்,கணவன் மனைவி பந்தம் என்றென்றும் நிலைத்திருக்கும். 

விட வேண்டிய பழக்கங்கள் 

கணவனிடம் மனைவிக்குப் பிடிக்காத சில விஷயங்கள் இருக்குமானால் அதை என்ன விலை கொடுத்தாவது நிறுத்திவிட வேண்டும்.அதிகமாக மது அருந்துவது, அடிக்கடி புகைப்பது, போதை மருந்து பயன்படுத்துவது, பெருந்தீனி உண்பது,  உடற்பயிற்சி செய்யாமல் சோம்பலாக இருப்பது , தொப்பையை வளர்த்துக் கொள்வது, மற்றவர்கள் மத்தியில் மிடுக்காக இல்லாமல் இருப்பது, பிறருடைய ஏவலைக் கேட்டு நடப்பது, எதிர்பாலினரிடத்தில் குழைந்து குழைந்து பேசுவது, எதற்கெடுத்தாலும் பயப்படுவது, துணிவில்லாமல் கோழைத்தனமாக இருப்பது,பேசுவது, கூட்டத்தைக் கண்டால் ஒதுங்குவது,தன் உடலைப் பற்றியோ மனைவியின் உடல் நிலை பற்றியோ அக்கறை காட்டாதது,

நேர்மையில்லாமல் நடந்துகொள்வது, அடிக்கடி நகம் கடிப்பது, சூழ்நிலை தெரியாமல் நடந்துகொள்வது, அடிக்கடி சூதாடுவது, வெட்டித்தனமாக பொழுது போக்குவது, இரவு நேரத்தில் உறங்காமல் அல்லது மனைவியுடன் நேரத்தைக் கழிக்காமல் டி.வி. பார்ப்பது, எப்போதும் செல்போனில் மூழ்கிக் கிடப்பது, வெளியில் சுற்றுவது,எதையும் தீர்மானிக்க முடியாமல் தவிப்பது, பாலுறவு நேரங்களைத் தவிர்ப்பது, மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாவது அல்லது விமர்சனத்திற்கு ஆளாகும்போது நிலை குலைவது, பணம் சம்பாதிக்கும் திறமையில்லாது இருத்தல் அல்லது பணத்தை கையாளத் தெரியாமல் இருத்தல்…

இப்படி நிறைய விஷயங்களை உங்கள் மனைவி வெறுக்கக் கூடும். அவளுக்கு என்ன பிடிக்குமோ அதை தெரிந்துகொண்டு, ஏற்கனவே இருக்கும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். மனைவிக்குப் பிடித்தமானதை கவனத்தில் வைத்துக்கொண்டு செயல்பட்டுவிட்டால்குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

இப்படித்தான் மனைவியிடம் கணவனுக்குப் பிடிக்காத விஷயங்களும் இருக்கும். மனைவியும் கணவனுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். 

பிறர் குறைகூறாத வகையில் நடந்து கொள்வதும், கணவன் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்வதும் முக்கியம். பெண்களுடைய பெற்றோர், உறவினர்களிடம் எவ்வாறு கணவன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ, அப்படி நீங்களும் நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு கணவனும் மனைவியும் நடந்து கொள்ளும்போது உங்களுக்குள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருக்கிற பிறர் கண்களுக்கும் நீங்கள் உயர்வான காதலர்களாகத் தெரிவீர்கள்.

சொர்க்கத்தை வேறு எங்கும் தேட வேண்டியது இல்லை. நல்ல குடும்பத்தில் சொர்க்கம் தானாக வந்து சேரும். குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாக  வீடாக திகழும்.அன்பு நிறைந்த குடும்பத்தில் நோய் நொடிகள், மனக்கசப்புகள் வராது.எந்நாளும் வசந்த காலமாக மலரும்.