
டாக்டர் சிவபாலன் இளங்கோவன். மன நல மருத்துவர்
உலகம் முழுக்க குழந்தைகளின் டிஜிட்டல் பயன்பாடுகள் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இது வரை நடந்திருக்கும் அத்தனை ஆராய்ச்சிகளும் ஒரு விஷயத்தில் ஒருமித்த ஒரு கருத்தை முன்வைக்கின்றன.அதாவது குழந்தைகளின் இந்த டிஜிட்டல் சாதனங்களை இளம் வயதிலேயே உபயோகிப்பதால் அவர்களின் சரளமான பேச்சு பாதிக்கப்படுகிறது.
மூன்று வயதிற்கு முன்பே டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்யப்படும் குழத்தைகளுக்கு பேச்சு மிக தாமதமாகவே வருகிறது.மேலும் இந்த டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வெகுவாகப் பாதிக்கின்றன என்பதே பெரும்பாலான ஆராய்ச்சிகளின் முடிவாக இருக்கிறது.
குழந்தைகளின் அறிவு என்பது சிந்தனையின் வழியாகவே வளரும்.உதாரணத்திற்கு குழந்தைகளின் சிந்தனை என்பது பெரும்பாலும் ஃபேன்டஸி வகை சிந்தனைகளே. குழந்தைகள் தங்களுக் குள்ளே ஒரு மாய உலகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அங்கே சிங்கங்கள் பேசும், குயில்கள் பாடும், அணில்கள் ஆடும் என தங்களின் கற்பனையை வைத்து ஏராளமான சிந்தனைகள் அவர்களுக்குள் ஓடும்.அப்படிப்பட்ட சிந்தனைகள்தான் மூளை யில் ஏராளமான நியூரான்களையும், நியூரான்களுக் கிடையேயான இணைப்புகளையும் உருவாக்கும். இந்த நியூரான்களும் அது சார்ந்த இணைப்புகளுமே குழந்தைகளின் அறிவு என சொல்லலாம்.
ஒரு குழந்தை எவ்வளவு சிந்திக்கிறதோ அதே அளவுக்கு அதன் அறிவும் வளர்ச்சியடையும். ஆனால் இந்த டிஜிட்டல் சாதனங்களைப் பயன் படுத்தும்போது குழந்தைகள் தங்களுக்குள் இந்த ஃபேண்டசி கதைகளை உருவாக்கிக் கொள்வதில்லை. ஏனென்றால் ஏராளமான ஃபேண்டஸி கதைகள் வீடியோக்களாக செல்போனிலும்; ஐபேடுகளிலும் இருக்கின்றன.
அந்த வீடியோக்களைப் பார்க்கும் குழந்தைகள் அந்தக் கதையை மட்டுமே உள்வாங்குகின்றன. அதனால் அந்தக் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் என்பது குறைகிறது.அதனால் அதன் மூளையில் இந்த நியூரான்களின் இணைப்பும் மந்தமடை கிறது. அதனால் கூடுமானவரை இந்த டிஜிட்டல் சாதனங்களைக் குழந்தைகளிடம் கொடுப்பதை நாம் தவிர்க்க வேண்டும். எவ்வளவு தாமதமாக இந்த டிஜிட்டல் சாதனங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறோமோ அவ்வளவு இயல்பான வளர்ச்சியை நமது குழந்தைகள் பெறும் என்பதை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர்கள் சாப்பிட வைப்பதற்காகக் குழந்தைகளிடம் இந்த டிஜிட்டல் சாதனங்களைக் கொடுத்துப் பழக்குகின்றனர். சமீபத்தில் நண்பர் ஒருவர் அவருக்குத் தெரிந்த நண்பரின் குழந்தைக்கு பேச்சு சரியாக வரவில்லையென்று என்னிடம் அனுப்பியிருந்தார். அந்தக் குழந்தைக்கு நான்கு வயது இருக்கும். ஆண் குழந்தை. அப்போது அவர்களிடம் கேட்டேன். “சரி, இன்னும் பேசல, ஆனால் காது நன்றாகக் கேட்கிறதா?”
“அய்யோ டாக்டர், அதெல்லாம் ஷார்ப். போன் சத்தம் பக்கத்து ரூம்ல கேட்டா கூட கரெக்டா போய் எடுத்து வந்துடுவான்.”
“அப்படியா? சரி, நல்லா விளையாடுறானா?” “அவன் ஆங்ரி பேர்ட் விளையாண்டு நீங்க பார்த்ததில்லையே, நாம கூட அப்படி விளையாட முடியாது.”
“நீங்க சொல்றத புரிஞ்சிக்கிறானா?”
“ம்ம், சாப்ட மாட்டேன்னு அடம் பிடிப்பான், போன காமிச்சி சாப்டுடா போன் தர்றேன்னு சொன்னா போதும், அப்படியே சாப்பிட உட் கார்ந்துடுவான்.”
“சரி, இந்த வயசுப் பிள்ளைங்களோட விளை
யாடறானா?”
“யெஸ் டாக்டர், டாக்கிங் டாம்தான் அவனோட பெஸ்ட் ஃபிரண்ட்” அவனது அப்பா அத்தனை
பெருமையா சொன்னார்.
அத்தனையும் கேட்டு விட்டு, அவனது பெற்றோர்களுக்கு விளக்கமாக போன் பயன்படுத்துவதால் அவனது பேச்சு தாமதமாகிறது. அதனால் அவனுக்கு போன் கொடுப்பதை நிறுத்துமாறும், மற்ற குழந்தைகளுடன் விளையாட விடுமாறும் பொறுமையாகச் சொன்னேன். அவனது அம்மா “அது மட்டும் முடியாது டாக்டர்”என்றார். ஏன் என கேட்டால் “போன கொடுக்கலனா அவன் சரியா சாப்பிட மாட்டான் டாக்டர். சாப்பிட லனா புள்ள இளைச்சி போயிடுவான் டாக்டர்” என்றார் பரிதாபமாக. நம்ம ஊர் அம்மாக்களுக்குக் குழந்தை சாப்பிடுவது மட்டுமே பிரதான பிரச்சினை.
குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்தும்போது(செல்போன்)முடிந்தவரை அது நமது மேற்பார்வையில்தான் இருக்க வேண்டும். மேலும் அதற்கு கட்டாயம் ஒரு கால அளவு கொடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அந்த அளவை நீட்டிக்கக் கூடாது. முக்கியமாக, குழந்தைகளின் எதிர்மறை குணங்கள் வெளிப்படும்போது அதைக் குறைப்பதின் பொருட்டு எந்த டிஜிட்டல் சாதனங்களையும் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்துப் பழக்கினால் எதிர்மறை குணங்களும் அதிகமாகும், டிஜிட்டல் பயன்பாடும் அதிகமாகும்.
உதாரணத்திற்கு நண்பர் ஒருவர் அவருடைய குழந்தை கோபப்படும்போதெல்லாம் தனது செல்போனைக் கொடுத்து அமைதிப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். இப்போது அந்தக் குழந்தை செல்போன் கொடுக்கவில்லையென்றால் மட்டுமே கோபப்படுகிறது. கோபமும் அதிகமாகிவிட்டது. செல்போன் உபயோகமும் அதிகமாகிவிட்டது.
குழந்தைப் பருவத்தில்தான் மனிதர்கள்மீதான ஒரு எமோஷனல் பிணைப்பு ஏற்படும். மேலும் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் சக குழந்தைகள் மீதான கரிசனம், அன்பு, நட்பு என அத்தனையும் தான் பின்னால் அந்தக் குழந்தையின் சமூக பிணைப்பிற்கும், சமூகம் மீதான அக்கறைக்கும், பொறுப்பிற்கும் அடிப்படை. டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளின் இந்த நுண்ணுணர்வுகளை எல்லாம் தட்டையாக்கிவிடும் ஆபத்து நிறைந்தது. அதனால் மிக கவனமாகவும், மிக நிதானமாகவும் குழந்தைகளின் இந்த டிஜிட்டல் உபயோகத்தை அணுக வேண்டியது நமது பொறுப்பு.

