
– டாக்டர் முத்துச்செல்லக்குமார்
டீயில் ஈ இருந்தால் அமெரிக்காகாரன் அந்த டீயையேக் குடிக்கமாட்டான். இந்தியாகாரன் டீயில் இருந்த ஈயை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு குடிப்பான். சீனாக்காரனோ ஈ விழுந்த டீயை அப்படியே குடித்து விடுவான் என்று கிண்டலாக காலம் காலமாக கதைத்துக் கொண்டிருந்தவர்கள் கரோனா வைரஸ் பிரச்னையிலும் அப்படியே வம்படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனவரி தொடக்கத்தில் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட பதிவு இது: ‘இந்த கரோனாவைரஸின்ஆயுட்காலம்குறைவாகத்தான் இருக்கும். ஏனெனில், இதுசீனாவில்தயாரிக்கப்பட்டது.’
இன்னொருபதிவு:
‘சீனர்கள் கண்டதையும் தின்றதால் தான்அங்கே கரோனா வைரஸ் பரவியது என்கிறார்கள். சீனர்கள் கண்டதையும் தின்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் நான்கு கால்கள் உள்ளவற்றில் ஒன்றையும் பறப்பனவற்றில் ஒன்றையும் தின்பதில்லை. அவைமுறையே நாற்காலி, விமானம்.’ இப்படி நையாண்டிகளும் நக்கல்களும் ஏராளம்.
ஆனால், சீன அரசு கரோனா வைரஸுக்கு எதிராக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரக்கெடு விதித்துக் கொண்டு 2,300 படுக்கைகள் கொண்ட இரண்டு பெரிய மருத்துவமனைகளை வூகான் நகரில் கட்டி முடித்திருக்கிறது சீன அரசு.
இந்த யுத்தத்தில் எதிரியோடு முகங்கொடுத்துப் போராடும் மருத்துவர்களும் தாதியர்களும் களப்பலி ஆகிறார்கள்.
நோயாளிகளும் அவர்தம் குடும்பத்தினரும் துப்புரவுப் பணியாளர்களும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் ராணுவ வீரர்களும் விஞ்ஞானிகளும் பத்திரிகையாளர்களும் மருத்துவர்களும் தாதியர்களும் அரசு ஊழியர்களும் ஒன்று திரண்டு போராடுகிறார்கள். இந்த வேளையில் தான் சீனாவுக்கு எதிரான வன்மமும் வதந்தியும் பரப்பப்படுகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவே சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் வேளையில், கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சீனாவை மேலும் சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிறார்கள். உதவி செய்யத் தெரியாத இவர்கள் உபத்திரவம் மட்டுமே செய்யத் தெரியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் சீனாவின் துயரம் மஞ்சள் ஆறை அழைத்தார்கள். தற்போது சீனாவின் துயரமாக கரோனா மாறிவிட்டது. மஞ்சள் ஆற்றை மடை மாற்றியவர்கள், கரோனாவையும் வென்றெடுப்பார்கள்.
இனி கரோனா வைரஸ் கதையைப் பார்ப்போம்..
கரோனா வைரஸ் சீனாவை மட்டுமல்ல.. உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், 99 சதவீத பாதிப்பு சீனாவில்தான் ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூகான். அந்தநகரின் மக்கள் தொகை 1 கோடியே 10 லட்சம். டிசம்பர் மத்தியில் சீனாவின் வூகான் நகரின் மீன்களும் விலங்கு இறைச்சியும் விற்கிற பிரதானச்சந்தையிலிருந்து நோய்த்தொற்று தொடங்கியிருக்க வேண்டும் என்று கணித்திருக்கிறார்கள்.
தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சந்தைக்கு வந்து போகிறவர்களாக இருந்தார்கள். விரைவில், இந்த வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றக் கற்றுக் கொண்டிருந்தது. ஜனவரி முதல் வாரத்தில் நேர்ந்த மரணங்களுக்கு இந்த வைரஸே காரணம் என்று கண்டறியப்பட்டது. ஜனவரி மூன்றாம் வாரத்தில் வூகான், புறவுலகிலிருந்து துண்டிக்கப்பட்டது.
வைரஸ் பரவுவதைத் தடுக்கவூ கான்நகரில் பள்ளி, கல்லூரி, அரசுஅலுவலகங்கள், வர்த்தக வளாகங்கள், தனியார்நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டது. சாலைகளில் ஆம்புலன்ஸ் ராணுவ, போலீஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதையும் மீறி வைரஸ் பரவியதால் வூகான் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 29 நகரங்களுக்கு சீல்வைக்கப்பட்டது. சீனாவின் இதர பகுதிகளில் இருந்து 30 நகரங்களும் துண்டிக்கப்பட்டன. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வூகான் சீல்வைக்கப்படுவதற்கு முன்பாக அந்த நகரை சேர்ந்தசுமார் 50 லட்சம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். விரைவில், வூகானைச் சுற்றியுள்ள பல நகரங்களுக்கான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சுமார் 6 கோடி மக்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இதன் காரணமாக வூகானை மையம் கொண்டிருந்த கரோனா வைரஸ் தற்போது சீனா முழுவதும் வியாபித்து பரவி வருகிறது. சீனத்தலை நகர் பெய்ஜிங்கிலும் வைரஸ்பாதிப்பு அதிகரித்துள்ளது.

பாம்பிலிருந்துபரவியதா?
சீனாவில் கரோனாவைரஸ் வேகமாக பரவுவதற்கு அந்த நாட்டு மக்களின் உணவுப் பழக்கமும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
சீனமக்கள் அனைத்து வகையான இறைச்சி உணவுகளையும் சாப்பிடுகின்றனர். வூகான் பகுதி வவ்வால்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. வைரஸ் பாதிக்கப் பட்ட வவ்வால்களை பாம்புகள் விழுங்கியுள்ளன.
அந்த பாம்புகளை மனிதர்கள் உணவாக உட்கொண்டதால் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று சீன டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை உறுதி செய்யும் வகையில் பாம்பு அல்லது வவ்வால் இறைச்சியில் இருந்து மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று மெடிக்கல் வைராலஜி என்ற மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
வூகான் நகரில் மிகப்பெரிய மீன்சந்தை உள்ளது. இங்குமீன்கள், பறவைகள், பாம்புகள், வவ்வால் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது.
அந்த சந்தையில் வாங்கப்பட்ட பாம்பில் இருந்துதான் மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே சீனாவில் 112 வகையான இறைச்சி விற்பனைக்கு அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
ஹாங்காங், தாய்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், தைவான்,கனடா, வியட்நாம்,நேபாளம், ஜெர்மன், இந்தியா (கேரளா) உள்ளிட்ட 25 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சீனாவில் இருந்து வந்தவர்கள் அல்லது ஏதாவது ஒரு வகையில் சீனாவோடு தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண காய்ச்சலை போன்றே கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளும் உள்ளன. நோயாளிக்கு மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தும்மல், இருமல், தொண்டையில்வறட்சி, காய்ச்சல்ஏற்படுகிறது. ரத்த பரிசோதனை மூலம் மட்டுமே கரோனாவைரஸ் பாதிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வைரஸின்வரலாறு
கடந்த 1960-ம்ஆண்டில்விலங்குகள், பறவைகள், கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. லத்தீன் மொழியிலிருந்து கரோனா (கிரீடம்) என்று இந்த வைரஸுக்கு பெயர் சூட்டப்பட்டது. அதாவது நுண்ணோக்கி மூலம் வைரஸை உற்று நோக்கினால் கிரீடம் போல தெரிவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
தற்போது உலகை அச்சுறுத்தி வரும் புதிய கொரோனோ வைரஸால் தற்போது உருவாகியுள்ள நோய்க்கு கோவிட்-19 என அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளதாக உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
”கொரோனா”, ”வைரஸ்” மற்றும் ”நோய்” ஆகிய வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புதிய பெயருடன் இணைந்துள்ள 19 என்ற எண், இந்த வைரஸ் பரவதொடங்கிய 2019 என்ற ஆண்டை குறிப்பதாகும்.
கொரோனாவைரஸ் அறிகுறிகள்
கொரோனாவைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதையும் சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது.
முதலில் காய்ச்சலில் தொடங்கும். அதாவது உடல் வெப்பத்தை காட்டிலும் அதிக வெப்ப நிலையை கொண்டிருக்கும். தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக் கோளாறு உண்டாகும். அதைத்தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும். இவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இவை காற்றில் பரவும் தன்மை கொண்டது, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்துவிடும். இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். இந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு.

