
தொடர் 2
-செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர்
(உங்கள் வாழ்வை இனிமையாக்கும் அறிவியல், உளவியல் தொடர்)
இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திற்கு நீங்கள் தந்துள்ள பெரும் ஆதரவிற்கு மிகப் பெரிய நன்றி!
தனது உடல் சார்ந்த விஷயங்களில், ஒவ்வொரு வயதிலும் தன் உடலில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களைப் பற்றியும், ஹார்மோன் மாற்றங்களைப் பற்றியும் நம் சமுதாயத்தில் ஆண்களுக்கு யாருமே சொல்லித்தருவதில்லை என்பதுதான் மிகவும் பரிதாபத்திற்குரியஒரு விஷயம்.இந்த விஷயத்தில், பெண்களின் நிலைமை கொஞ்சம் பராவாயில்லை என்றே சொல்லலாம்.

ஒரு பெண் வயதிற்கு வரும் முன் பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பெண் குழந்தைகளுக்கு அந்த விஷயத்தைப் பற்றியும், திடீரென ஏற்படும் இரத்தப்போக்கினால், நீ பயந்து விடாதே என்றும் சொல்லித்தருவதில்லை. வயதிற்கு வந்த பிறகு, அவள் உடலிலும், மனதிலும் ஏற்படப்போகும் மாற்றங்களைப் பற்றியும் யாரும் சொல்லித்தருவதேயில்லை.என்னென்ன ஹார்மோன் மாற்றங்கள் அவளுக்கு ஏற்படும், அதன் விளைவுகளென்ன என்பதைப் பற்றியும் யாரும் பெரும்பாலும் அவளுக்குக் கற்றுக்கொடுப்பதில்லைதான்.
ஆனால், குறைந்தபட்சம் அவள் வயதிற்கு வரும் சம்பவமாவது வெளிப்படையாகத் தெரிந்துவிடுவதால், அதன்பிறகாவது அவளுக்குப் போதிய கவனிப்பையும், அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் தருகிறார்கள்.புட்டு சுட்டு, சாப்பிடக் கொடுப்பதிலிருந்து, முட்டையில் நல்லெண்ணெய் கலந்து குடிக்கச் செய்வது, உளுந்தங்களியைச் சாப்பிடக் கொடுப்பது, நல்ல போஷாக்கான, சத்து மிகுந்த பழங்களை “சீர்” என்னும் பெயரில் தினமும் ஒருவர் வந்து கொடுப்பது என்று அவளது உடல் ஆரோக்கியம் மிக நன்றாகவே கவனித்துக்கொள்ளப் படுகிறது.
அவளது உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல்,புதிய ஆடைகளை அவளுக்கு வாங்கிக் கொடுப்பது, “சடங்கு” என்னும் பெயரில் புதிய நகைகள், அவளுக்குப் பிடித்தமான்அழகு சாதனப் பொருள்கள் எனப்பலவற்றை வாங்கிக்கொடுத்து அவளது மனநிலையையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறார்கள்.
“ பெண்கள் வயதிற்கு வந்தவுடனேயே நீ உன்னை அழகாக்கிக் கொள்வதுதான் உன் வாழ்க்கையின் முதன்மையான விஷயம்” என்று அவளுக்குக் குறிப்பிட்டுக்காட்டுவதைப் போல் இந்த அழகு சாதனப் பொருள்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கித்தரும் செயல்கள் அமைந்து விடுகின்றன என்று சிலர் எதிர்த்தாலும்கூட, இதனால் அந்தப் பெண்குழைந்தைகளின் மனம் குதூகலப்படுகிறது என்பதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு தனது தோழிகளின் வீடுகளிலும், குடும்பங்களில் எல்லாம் அவர்களைக் கொண்டாடிவிட்டு, தனது வீட்டில் இப்படியொரு பழக்கம் இல்லை என்ற நிலையிலிருக்கும் பல பெண்குழந்தைகள் என்னிடமே அது குறித்து மிகவும் வருத்தமாகப் பேசியிருக்கிறர்கள்.ஒருவேளை சில குடும்பங்களிலுள்ள பெரியவர்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்குமே கூட இவ்வாறு ஊரை அழைத்து வைத்துக் கொண்டாட,பறைசாற்ற விருப்பமிருக்காது.அந்தச் சூழலில்கூட, தங்கள் வீட்டிற்குள் மட்டுமாவது இத்தகையக் கவனிப்புக்களை தாராளமாகச் செய்ய வேண்டும்.பல குடும்பங்கள் தந்து கொண்டுதானிருக்கின்றன.
அதனால், இப்படிக் கவனிக்கப்படுவதால், கொண்டாடப்படுவதால் எந்தக் குழந்தையும் படிப்பதை விட்டு விட்டு அல்லது பிற்காலத்தில் வேலைக்குச் செல்வதை விட்டு விட்டு அழகிற்குப் பின்னாலும், ஆடை ஆபரணங்களுக்குப் பின்னாலும் அப்படியே சென்று விடுவதில்லை.
“ நீ இனிமேலும் சிறுமி இல்லை, அந்த நிலையைக் கடந்து வந்து விட்டாய். இப்போது நீ ஒரு பெண்”என்ற விஷயத்தை அவளுக்கு வலுயுறுத்துகிறார்கள்.
மேலும், தன் பெண் குழந்தை இப்போது வயதிற்கு வந்து விட்டாள். அவள் ஏதாவது தெரியாமல் பிற ஆண்களுடன் நெருக்கமாக நடந்து கொண்டு அதனால், அவள் வயிற்றில் குழந்தை உருவாகி விடக் கூடாது என்ற பயத்திலாவது அவளுக்கு சில “பாலியல் ஆரோக்கியம் மற்றும் எச்சரிக்கை” சார்ந்த அறிவுரைகளைக் கூறத் தொடங்குகிறார்கள்.
பெற்றொர்களுக்குத் தாங்களே அவளிடம் பேசுவதற்குக் கூச்சமாயிருந்தாலும் கூட, தங்களது உறவுக்காரப் பெண்களை விட்டோ அல்லது அவளது தோழிகள் மூலமாகவோ இந்த விஷயங்களை ஜாடை மாடையாகவாவது அவளுக்குத் தெரிவிக்கிறார்கள்.எந்த வழியிலாவது கற்றுக்கொடுத்து விடுகிறார்கள்.
ஒரு பெண் வயதிற்கு வந்து விட்டாள் என்பது எளிதாகப் பிறருக்கு, குறிப்பாக அவளது பெண்தோழிகளுக்குத் தெரிந்து விடுவதால், அதன் பிறகாவது சில விஷயங்களைப் பற்றி அவளுடன் கலந்துரையாடுகிறார்கள்.மாதவிடாய் காலத்தில் தங்களுக்கு ஏற்படும் உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிலை மாற்றம் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாகப் பேசிக்கொள்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் “மூட் ஸ்விங்க்ஸ்” ( Mood swings) எனப்படும் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் மனநிலைத் தடுமாற்றங்களைப் பற்றியும், Food cravings எனப்படும் அந்த சமயங்களில் ஏற்படும் உணவுப்பொருள் சுவைமாற்றங்கள்,மற்றும் வித விதமான உணவு வகைகளைச் சுவைக்க வேண்டும் என்ற ஏக்கத்தையும் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்.
இன்னும், சில நெருக்கமான, நம்பிக்கையான தோழிகளைப் பெற்றிருக்கும் பெண்கள், தங்கள் மனதில் மொட்டு விடத் தொடங்கும் “ காதல்” பற்றியும், “காமம் மற்றும் மற்ற ஆண்கள் மீது தோன்றும் உடலீர்ப்புக்களைக்” குறித்த விஷயங்களையும் கூடப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.தங்கள் வயதை ஒத்த பிறப் பெண் குழந்தைகளுடன் பேசுவதால் ஒரு தெளிவு கிடைக்கிறதோ இல்லையோ, இப்படி மனம் விட்டு வெளிப்படையாகப் பேசுவதே அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய வடிகாலாக அமைந்துவிடுகிறது.
ஆனால், ஆண் குழந்தைகளுக்கு “அவர்கள் வயதிற்கு வருவது எப்போது என்று அவர்களுக்கே தெரிவதில்லை என்பதுதான் கொடுமை.” இதில் எங்கிருந்து பிறர் அவர்களைக் கொண்டாடுவது? முதன் முதலில் தனது உடலிலிருந்து விந்து வெளியேறும் போது அவன் , தான் பெரியவனாகிவிட்டோம், வயதிற்கு வந்து விட்டோம்” என்று கொண்டாடுவதை விட்டு விட்டு, “ஐயையோ… இது ஏன் இப்படி நிகழ்கிறது? தனக்கு ஏதாவதுஉடல் பிரச்னையா?” என்று பதறித்தான் போகிறான்.
பெண் குழந்தைகள் வயதிற்கு வந்தவுடன் தங்கள் வீட்டிலுள்ள பிறப் பெண்களிடம், அல்லது அம்மாவிடம் அந்த விஷயத்தைச் சொல்வதைப் போல, ஆண்கள் அதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஏனெனில், பிற பெண் குழந்தைகளுக்கு நடக்கும் , “சடங்கு அல்லது பூப்பெய்துதல்” விழாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அதைப் பார்த்து அந்தப் பெண் குழந்தைகள் வளர்ந்திருப்பதால், அவளால் அதை மிக இயல்பாக எதிர்கொள்ள முடிகிறது.ஆனால், ஒரு ஆண் குழந்தையால் அப்படி இயல்பாக “தான் பெரியவானாகி விட்ட விஷயத்தை” தன் குடும்பத்தினரிடம் சொல்ல முடிவதில்லை. ஏனெனில், அப்படிச் சொல்ல வேண்டும் என்று அவன் பெற்றோர் அவனுக்கு அதற்குமுன் சொல்லிக் கொடுப்பதில்லை.அப்படி எந்த ஆணும் அதை வெளிப்படையாகச் சொல்லி, அதை அவனது குடும்பத்தினர் விழா எடுத்துக் கொண்டாடிய நிகழ்ச்சிகளை அவன் அதுவரை பார்த்ததேயில்லை.
எனவே பெண் குழந்தைகளுக்கிருப்பது போல் இது “அனைத்துப் பெண்களுக்கும் நிகழக் கூடிய ஒரு விஷயம்தான்” என்ற தெளிவு அவளுக்கிருப்பதைப் போல், ஆண் குழைந்தைகளுக்கு, “இது அனைத்து ஆண்களுக்கும் நிகழ்வதுதான்” என்ற தெளிவு இருப்பதில்லை.பெண்கள் தங்கள் தோழிகளுடன் இதைப் பற்றி வெளிப்படையாக உரையாடிக்கொள்வதைப்போல, சக தோழர்களுடன் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி இயல்பாகப் பேசும் வழக்கம் பெரும்பாலான ஆண்களுக்கு இல்லை. அதனால், அவர்கள் தவறான மனிதர்களிடம் அல்லது சமூக வலைதளங்களில் தங்கள் உடல் மாற்றங்களைக் குறித்து விடை தேடத் தொடங்குகிறார்கள்.
அதனால், இந்த முயற்சிகளினால்அவர்களுக்கு சரியான விளக்கங்கள் கிடைத்துவிட்டால் பரவாயில்லை.மாறாக, அவர்கள் எந்த விஷயத்திற்கு விளக்கம் தேட முயற்சி செய்தார்களோ,அதைத் தவிர பிற விஷயங்களையெல்லாமே, அதுவும் மிகத் தவறான முறைகளில் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆண் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு பதினோரு வயது ஆனவுடனேயே, அவர்கள் உடலில் ஏற்படப்போகும் மாற்றங்களைப் பற்றிப் பெற்றோர் கட்டாயமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.நீங்கள் அந்த வயதிலேயே அவர்களை உட்கார வைத்துஆதி முதல் அந்தம் வரைப் பாடம் எடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்களுக்குப் புரியும் வகையில் மிக மிக எளிதான வகையில், எளிமையான வார்த்தைகளில் அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.
பெண் குழந்தைகளுக்கு எப்படி, “பாப்பா…நீ சுச்சூ போற இடத்திலிருந்து, உனக்கு இரத்தம் வரும்… அப்படி வந்தா பயந்து விடாதே. அது எல்லாப் பெண் குழந்தைகளுக்குமே ஏற்படும் ஒரு விஷயம்தான். நீ பெரிய பொண்ணாயிட்டேன்னு அர்த்தம். பள்ளிக்கூடத்துல உனக்கு ஒருவேளை அப்படி நடந்தா, உன் வகுப்பு அசிரியர் கிட்ட சொல்லிரு” எனக் கற்றுக் கொடுக்கிறோமோ அதே போல் ஆண்குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.
“செல்லம். உனக்கு யூரின் போற இடத்திலிருந்து சளி மாதிரி வந்தா, நீ பயப்படாதே.அது எல்லா ஆண்குழந்தைகளுக்கும் நடப்பதுதான்.நீ பெரியவனாயிட்டன்னு அர்த்தம்.தண்ணீர் வெச்சு, அந்த இடத்தை நன்றாக சுத்தப்படுத்திக் கொள். அம்மாவிடமோ , அப்பாவிடமோ வந்து சொல்”என்று கற்றுக்கொடுங்கள்.
இந்த வார்த்தைகள் மிக எளிமையாகவும் இருப்பதால், அவர்களுக்கு அவை மிக சுலபமாகப் புரியும். இதற்கு உங்களுக்கு மிகப்பெரிய அறிவியலோ, மருத்துவமோ தெரிந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை.
உங்கள் குழந்தைகள் தாங்கள் வயதிற்கு வரும் போது, அந்த நிகழ்வினால், அவர்கள் பயந்துவிடக்கூடாது. அந்தப் பயத்தைப் போக்குவதுதான் நாம் ஏன் அவர்களுக்கு இந்த விஷயத்தைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும், என்பதற்கான மிக முக்கியமாஅன காரணம்.அவர்களுக்கு ஏற்படப்போகும் உடல்நிலை மாற்றங்களைப்பற்றி, ஹார்மோன் மாற்றங்களைப்பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்கான மிகப் பெரியக் காரணம். அந்த இளம் வயதிலேயே, அவர்கள் மனதில் தங்கள் உடல் பற்றிய, தங்கள் உடலிலேற்படக் கூடிய மாற்றங்களைப் பற்றிய பயம் ஏற்பட்டு விட்டால், அதனால் அவர்கள் தவறான விஷயங்களைக் கற்றுக்கொண்டு விட்டால், அவற்றைப் பிற்காலத்தில் மாற்றியமைக்க முடிவது என்பது மிக மிகக் கடினமானதாயிருக்கும்.
அதே போல், ஆண் குழந்தைகள் , பெண் குழந்தைகள் இருவருமே வயதிற்கு வந்தவுடன், “ நீ உன் எதிர்பாலினத்தினரின் அந்தரங்க உறுப்புக்களைத் தொட்டால் அல்லது தொட அனுமதித்தால், பெண்ணுக்கு குழந்தை வந்துவிடும்.இந்த வயதில் அந்த நிலை ஏற்பட்டு விட்டால், பிறகு படிப்பது, வேலைக்குச் செல்வதெல்லாம் எவ்வளவு கஷ்டம் என்பதைப் பற்றி அவர்களிடம் பேசி புரிய வையுங்கள்.
அவர்களிடமே அப்படியொருச் சூழலை விவரித்து அதற்கான பதில்களைக் கேளுங்கள். அப்படி அவர்கள் ஒரு விளையாட்டு போல் அந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லும் போது , அதைப் பற்றி, அந்தச் சூழலைப் பற்றி யோசிப்பார்கள்.இப்படி அவர்களாகவே தங்கள் சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்வதும், ஒரு பிரச்னைக்கான தீர்வுகளைப் பற்றி அலசுவதும் ஒரு மிகச் சிறந்த மனப் பயிற்சியாக அமையும்.தாங்கள் வளர்ந்த பிறகும், ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்பும் அதனால் ஏற்படப் போகும் பின்விளைவுகளைப்பற்றி நன்றாக யோசித்து, அவற்றைச் செய்யலாமா வேண்டாமா என்பதைக் குறித்த முடிவுகளை எடுப்பார்கள்.
பெற்றோர்,அவர்களது குழந்தைகளை பயமுறுத்துவதை விட்டு விட்டு இப்படி கேள்விகளைக் கேட்பதன் மூலமும்,ஒரிரு சூழல்களுக்கான தீர்வுகளைத் கண்டுபிடிப்பதற்கான வழிகளை அவர்களிடமே கேட்பதன் மூலமும்,தகுந்த பாலியல் கல்வியையும், வாழ்க்கைக் கல்வியையும் எளிமையான முறையில் அவர்களுக்குப் புகட்டிவிடலாம்.
“இப்படித்தான் ஒரு குழந்தைக்கு நடந்துச்சாம். அந்தப் பெண் வயிற்றில் வளர்ந்த குழந்தையைக் கலைக்க முயற்சி செய்ததில்,அந்தப் பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகி விட்டதாம்” என்று மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைப் பய்ன்படுத்தி அவர்களுக்கு நிதர்சன வாழ்க்கையில் நிகழும் உண்மை நிலவரங்களை எடுத்துச் சொல்லி, எச்சரியுங்கள்.
வலை வீசித் தேடிப்பார்த்து,ஆபாசமாக இல்லாமல், பாலியல் உணர்வுகளைப் பார்வையாளர்களின் மனதில் தோற்றுவிக்கும் விதத்திலில்லாமல், குழந்தைகளுக்கு எளிய வகையில் கற்றுத்தரும்படியான எந்தத் தமிழ்ப்படங்களும் இணையத்தில் காணப்படவில்லை. அப்படிப்பட்ட ஆங்கிலப்படங்களையும் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருவேளை இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள்
யாருக்காவது அப்படிப்பட்ட திரைபடங்களைப் பற்றியோ அல்லது ஆவணப் படங்களைப் (Documentary films) பற்றியோ விவரங்கள் தெரிந்திருந்தால் எனக்குத் தெரிவியுங்கள்.
-செலின் ராய்
9381019353
(தொடரும்)

