மது உடல் கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் நிறைந்தது. ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வினாடியும் அற்புதமாக, நமக்காக,நம்மை ஆரோக்கியமாக வாழ வைப்பதற்காக,ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

அரிது…அரிது…மானிடராய் பிறத்தல் அரிது!என்ற முதியோர் மொழி நோபல் பரிசு தரத் தக்க அனுபவ பதிவு.இந்த உலகத்திலேயே அதி உன்னதமாகவும் நுட்பமாகவும் சிக்கலானதாகவும் படைக்கப்பட்ட ஒரு எந்திரம் மனித உடல் தான்.விசித்திரம் என்னவென்றால்,மனித உடலில் ஒரு சின்ன தசை கூட காரணம் இல்லாமல் இல்லை.உடலின் சம நிலையில் ஒவ்வொரு சிறு செல்லிற்கும் பங்கிருக்கிறது.மனித உடலில் அத்தனை செல்களுக்கும் நோக்கம் இருக்கிறது.ஒருங்கிணைந்த இந்த ஒட்டு மொத்த செல்களின் தொகுப்பு தான்,மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.

இந்த உயிர் எந்திரத்தின் இயக்கத்தில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால்,அதை சரி செய்யும் விதத்தில் தன்னைத்தானே முடிந்தவரை சீர்படுத்திக் கொண்டு இயங்குவது இன்னும் ஒரு புதுமையாகும்.

இவ்வளவு அற்புதம் நிறைந்த மனித உடலை யாரும் நினைப்பதும் இல்லை;ரசிப்பதும் இல்லை.இருந்தாலும் அறிவியல் பூர்வமாக இந்த அதிசய உண்மைகளை நாம் உணரும்போது ஒரு கணமேனும் சிலிர்ப்பும்,மலைப்பும் நமக்கு ஏற்படவே செய்யும்.

இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் அதிசய பிறவிதான்.ஒருவரைப்போல் இன்னொருவர் இல்லை. சிந்திப்பது,சிரிப்பது,பார்ப்பது, கேட்பது,ரசிப்பது,மகிழ்வது, செயல்படுவது,ஓடுவது,காதல்,காமம்… எல்லாமே அற்புதமான உணர்வுகள்.

நாம் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக இதயம் ஒரு நிமிடம் கூட ஓய்வெடுத்துக் கொள்ளாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது.
இதயத்தைப் போல மூளை,சிறுநீரகம், நுரையீரல்,கண்,நரம்பு மண்டலம்,வயிறு,குடல் பகுதி என எல்லாமே நமக்காக,எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாக, நேர்த்தியாக இயங்குகின்றன.

இவ்வளவு அற்புதங்கள், அதிசயங்கள் நிறைந்த உடலை பாதுகாக்க நாம் என்ன செய்கின்றோம்?

இந்த உயிர் எந்திரத்தின் இயக்கத்தில் எந்த கோளாறும் வராமல் பார்த்துக் கொள்வது தான் நாம் நமது உடலுக்குச் செய்யும் மரியாதையாகும்.
சத்தான உணவு,மகிழ்ச்சியான வாழ்க்கை,தேவையான ஓய்வு, முறையான தூக்கம்,பாதுகாப்பான பாலுறவு,உடலுக்கு வலு சேர்க்கும் உடற்பயிற்சி,யோகா,தியானம்…எல்லாம் உடலை காப்பதாக இருக்கட்டும்.

உடலை பாதுகாப்போம்… ஆரோக்கியமாக வாழ்வோம்!