– கே.விஜயசாரதி மோகனசுந்தர், சோழிங்கநல்லூர்.

குடும்பம் ஒரு கதம்பம் என்பதை விட குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்.குடும்ப நிர்வாகத்தில் பெண்களின் பங்கு முதன்மையானது.பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருகிறார்கள்.

பெண்கள் சுவையாக சமைப்பார்கள்,குழந்தைகளை வளர்ப்பார்கள்,வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்கள் என்பதோடு குடும்பப் பொருளாதார முன்னேற்றத்தையும் கவனமாக திட்டமிடுவார்கள்.கஷ்டமோ,நஷ்டமோ பெண்கள் முயற்சியால்  வீட்டில் நிச்சயமாக சேமிப்பு என்று ஒன்று இருக்கும்.

தன்னுடைய முடிவு மட்டும் தான் சிறந்தது என்று நினைக்காமல் கணவனின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்வார்கள்.

வீட்டுக்கு வீடு பொருளாதார சூழ்நிலை,பழக்கவழக்கங்கள் மாறலாம்.அக்கம் பக்கத்தினர் ஆயிரம் யோசனைகளை சொல்லலாம்;அவற்றைக் காது கொடுத்து கேட்கலாம்.ஆனால், கணவனின் ஆலோசனைகளை கேட்டு,வீட்டு சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் தான் செயல்பட வேண்டும்.

சிலர் நமக்கு ஆலோசனை கூறுவதற்கு முன் வரலாம்.அவர்கள் சொல்வதை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.ஆனால்,நமக்கு ஏற்றார் போல் தான் நாம் முடிவு எடுக்க வேண்டும்.அடுத்தவர்கள் இதை, இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்க அனுமதிக்கக் கூடாது.நாம் நாமாக இருக்க விட மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து தள்ளியே இருங்கள்.

தற்போது சமூகத்தில் ட்ரெண்டிங்காக இருப்பது உடல் எடை குறைப்பு…(Weight loss).டயட் என்ற பெயரில் அவரவர் விருப்பங்களை வீடியோவாக எடுத்து வெளியிடுவார்கள். நம்மையும் பின்பற்றச் சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்.நாம் குண்டாக இருப்பது…நமக்கோ, நமது குடும்பத்திற்கோ கஷ்டமாக இருக்கிறதா என்று யோசிக்க விட மாட்டார்கள்.ஸ்லிம்மாக இருந்தால் தான் அழகு என்று நம்மை நம்ப வைப்பார்கள்.

நாமும் நமது உடல் நலனுக்கு ஏற்றதா,நமக்கு அவசியமா என்று யோசிக்காமல்,அவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி பின்பற்ற தொடங்குவோம்.உடல்  எடை குறைப்பைப் பற்றி குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை கேட்பதே சிறந்தது.நமது குடும்பத்தில் உள்ளவர்களிடமும் கலந்து பேச வேண்டும்.

நமது தனிப்பட்ட உடம்பிற்கு இவ்வளவு யோசிக்க வேண்டும் என்றால்… குடும்பம் பற்றிய முடிவு என்றால் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எனது உறவினர் ஒருவர் நன்றாக சம்பாதிக்கிறார்.வருமானத்தை வங்கியில்,அஞ்சல் அலுவலகத்தில் சேமிக்கிறார்.   நானும் அவர்களைப் போலவே சேமிக்கத் தொடங்கினேன். கணவரின் வருமானத்தை சேமிப்புக்கு, செலவுக்கு, அத்தியாவசியத்திற்கு என்று பிரித்தேன்.அதில் எந்த பிரச்னையும் இல்லை.

சில நேரங்களில் உற்சாகமாக வெளியே போய் ஹோட்டல்களில் சாப்பிடத் தோன்றும்.எங்கே அந்த மாதிரி வெளியே போய் சாப்பிட்டால் கூடுதலாக செலவாகிவிடுமோ என்று எண்ணி தவிர்த்து விடுவேன்.வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் கூடுதலாக செலவாகுமே என்று நினைக்கிற அளவுக்கு நிலைமை மோசமானது.ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன.அதன் பிறகு தான் எதார்த்தத்தை புரிந்து கொண்டேன்.சேமிப்பு முக்கியம்… அதே நேரத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையும் முக்கியம்.சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்றாமல்  சேமிப்பதில் அர்த்தமில்லை.

பணம்,பணம் என்று அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டால்…அது நம்மை ஆளத் தொடங்கி விடும். பின்னர் நம்மை, நமது மகிழ்ச்சியைஅழித்துவிடும். தற்போது தேவையான செலவுகளை  தாராளமாக செய்கிறேன்.கணவனையும் பிள்ளைகளையும் குடும்பத்தையும் சரியாக நடத்த கற்றுக் கொண்டேன்.அவர்களின் மனம் நோகாமல் சேமிக்கவும் செய்கிறேன்.

பணம் தேவை தான்… அதற்காக பணத்தின் பின்னாலயே போய்க் கொண்டே இருந்தால் …ஒரு நாள் நம் பின்னால் யாரும் இருக்க மாட்டார்கள். மிக முக்கியமானது நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதே கேள்விக்குறியாகி விடக்கூடாது. பின்னோக்கிப் பார்த்தால் நாம் அடைந்த மகிழ்ச்சி,மன நிறைவு, முயற்சிகள், போராட்டங்கள், சின்னச் சின்ன சண்டைகள்… அதனால் நமக்கு கிடைத்த அனுபவங்கள் எல்லாம் முக்கியம்.