
டீன் ஏஜ் வயதினர் செய்யும் மிகப் பெரிய தவறு நொறுக்குத் தீனிகளுக்கு அடிமை ஆவது.பசிக்கும் நேரத்தில் ரொட்டி,கேக், பலகாரம் என்று நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட்டு விடுவார்கள். குளிர்பானம் குடித்து விடுவார்கள். இதனால் பசி குறைந்துவிடும். அடுத்து,சத்துள்ள உணவு சாப்பிடுவது விட்டுப்போகும். இவர்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் இவர்களுக்குத் தேவையான சத்து இருந்தால் பரவாயில்லை. பெரும்பாலான நொறுக்குத்
தீனிகளில் சத்து இருப்பதில்லை. அவை சக்கை உணவுகளாகத்தான் இருக்கின்றன. அவற்றில் செறிவுற்ற கொழுப்பு(Saturated fat)அதிகமாக இருப்பதால், கலோரிகள் கூடுதலாக கிடைக்குமே தவிர, வைட்டமின்களும் தாதுக்களும் அவ்வளவாக இருக்காது.இதனால் டீன் ஏஜ் பருவத்திலேயே உடற்பருமன் வந்துவிடுகிறது.இது சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம், இதயநோய் எனப் பல ஆரோக்கியக் கேடுகளுக்குப் பாதை அமைக்கிறது.
இவர்கள் சமோசா, பஜ்ஜி,வடை, போண்டா,கேக், சிப்ஸ்,சாக்லேட், பிஸ்ஸா,பர்கர், எண்ணெயில் வறுத்த,பொரித்த இறைச்சிகள் அடங்கிய பப்ஸ் முதலான நொறுக்குத் தீனிகளை அதிகம் விரும்பிச் சாப்பிடும் அளவுக்குக் காய்கறி, பழங்களைச் சேர்க்கத் தவறிவிடுகின்றனர்.இதனால் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடென்ட் முதலானவை கிடைப்பது குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது. சருமக் கோளாறுகளும் பார்வைக் குறைபாடுகளும் விரைவிலேயே வந்துவிடுகின்றன.
குறைவாகத்தான் இவர்கள் தண்ணீர் குடிப்பதுகூடக் இருக்கும்.ஆனால், மென்பானங்களையும் செயற்கை குளிர்பானங்களையும் அளவில்லாமல் குடிப்பதுண்டு. மேலும்,இவர்கள் சாப்பிடும் துரித உணவுகளில் நார்ச் சத்து போதுமான அளவு இருப்பதில்லை.இந்த இரண்டு காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுவது இவர்களுக்கு இயல்பான விஷயமாக இருக்கிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் இளம் வயதினர் காலை உணவை சரியாக சாப்பிடுவதில்லை. மதிய உணவும் அரைகுறை தான். இதனால் அவர்களுக்கு படிப்பில் போதிய கவனம் செலுத்த இயலாது.உடலும் பாதிக்கப்படும். பெற்றவர்களே எச்சரிக்கையாக இருங்கள்.
உங்கள் பிள்ளைகள் தரமான,சத்தான சாப்பாடு சாப்பிடுகிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள்.படிப்பு முக்கியம்...அதைவிட உடல் நலம் முக்கியம். உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள்.
ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)

