சென்னை, வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளை செயற்கையாகப் பூர்த்தி செய்யும் அதிநவீன ‘எக்மோ’ கருவிகளைக் கொண்ட பிரத்யேகப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.இப்பிரிவு, சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் பிற உறுப்பு செயலிழப்புகளுக்கும் விரிவான அவசர சிகிச்சைகளை வழங்கும்.

எக்மோ (ECMO – Extracorporeal Membrane Oxygenation)கருவி என்பது இதயம் மற்றும் நுரையீரல்கள் இரண்டும் செயலிழக்கும் போது, தற்காலிகமாக அவற்றின் பணியைச் செய்து மனித உயிரைக் காக்கும் ஒரு நவீன மருத்துவக் கருவியாகும்.

நோயாளியின் உடலில் இருந்து ஆக்சிஜன் இல்லாத அசுத்த இரத்தம் குழாய்கள் மூலம் எக்மோ கருவிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கருவி இரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடை நீக்கி, அதற்குத் தேவையான ஆக்சிஜனைச் சேர்க்கிறது.(இது நுரையீரல் செய்யும் வேலை)

இரத்தம் உடலுக்குத் தேவையான சரியான வெப்பநிலைக்கு மாற்றப்படுகிறது.
ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சுத்தமான இரத்தம் ஒரு பம்ப் மூலம் மீண்டும் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.(இது இதயம் செய்யும் வேலை).

புதிதாக தொடங்கப்பட்டுள்ள எக்மோ மற்றும் பல்லுறுப்பு உயிர் காக்கும் பிரிவில் கடுமையான சுவாச செயலிழப்புக்கான விவி-எக்மோ,இதய செயலிழப்புக்கான விஏ-எக்மோ, இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழக்கும் நிலையில் பயன்படுத்தப்படும் வி-ஏவி எக்மோ, நோயாளியை விழித்திருக்கும் நிலையில் வைத்திருக்கும் அவேக் எக்மோ மற்றும் சாலை மற்றும் வான்வழியில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது பொருத்துவதற்கான எக்மோ போன்ற பல்வேறு சிறப்பு எக்மோ கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விவி-எக்மோ, முக்கியமாக இரத்தத்தில் ஆக்சிஜனைச் சேர்த்து,கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதன் மூலம் நுரையீரலுக்கு சிகிச்சையளிக்கிறது;அதே வேளையில், இதயம் இரத்தத்தை திறம்பட உடலுக்கு அனுப்ப முடியாத போது விஏ-எக்மோ சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் ஆகிய இரண்டிற்கும் ஆதரவை வழங்குகிறது. வி-ஏவி எக்மோ இதயம் மற்றும் நுரையீரல் இரண்டிலும் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிக்கிறது. தகுதியான நோயாளிகளுக்கு, ‘விழித்திருக்கும்
நிலையிலான எக்மோ மூலம் அவர்கள் சுயநினைவோடு இருக்கும்போதே தேவையான உயிர் காக்கும் சிகிச்சையை வழங்க முடியும்.

எக்மோ வசதி இல்லாத மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை வான் மற்றும் தரை வழியில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது பொருத்தப்படும் சிறப்பு எக்மோ சேவைகளும் உள்ளன.

காவேரி மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் குழு,நோயாளி இருக்கும் மருத்துவமனைக்கே நேரடியாகச் சென்று நோயாளியின் நிலையை ஆய்வு செய்து தேவைப்படும் பட்சத்தில் எக்மோ சிகிச்சையைத் தொடங்கும்.அதன் பிறகு,நோயாளி தொடர்ச்சியான எக்மோ கண்காணிப்புடன் வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பல்நோக்கு மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

இந்த பிரிவை இந்திய எக்மோ சங்கத்தின் தலைவரும், காவேரி மருத்துவமனையின் எக்மோ பிரிவின் இயக்குநருமான டாக்டர் கே.மதன் குமார் வழி நடத்துகிறார்.

சென்னை, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று சொல்லலாம்.

-பவித்ரன், ஹெல்த் அண்ட் பியூட்டி.