தீபாவளிக்கு எல்லோரும் எண்ணெய் தேய்த்து குளித்திருப்பீர்கள். அன்றைய தினம் குளிப்பதை ‘கங்கா ஸ்நானம்’ என்கிறோம். கங்கையில் குளித்தால் மட்டும்தான் ‘கங்கா ஸ்நானம்’. ஆனால், தீபாவளியன்று வீட்டில் குளித்தாலும் ‘கங்கா ஸ்நானம்’தான். குறிப்பிட்ட இடைவெளியில் உடலைப் பராமரிப்பதற்கு எண்ணெய்க் குளியல் ஒரு சிறந்த வழிமுறை. ஆனால், அதை பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் இருக்க வேண்டிய சரியான மாத்திரை அளவில் வைப்பதற்கு உதவுகிறது. எண்ணெய் குளியல், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள சூட்டை நல்ல நிலையில் வைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் நன்கு செயல்படும்.

‘சிரசாசனம்’ செய்யும்போது தலைப் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் எடுத்துச் செல்லப்பட்டு மூளைப் பகுதி எவ்வாறு பலப்படுகிறதோ, அதேபோல எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீர் செய்யப்பட்டு உடல் உறுப்புகள் நன்கு செயல்பட உதவுகிறது. உடல் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கும் பண்பு எண்ணெய்க்கு உண்டு. இதனால் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.

தற்போதைய அவசர உலகில், பலருக்கும் மன அழுத்தம், பரபரப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இவற்றால் உடல் வெப்பமடையும். மூளையும் வெப்பமடையும் என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மேற்கூறியவற்றால் ஏற்படும் நோய்கள், தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை மலம் கழித்தல்; வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தல்; மாதம் இரண்டு முறை தாம்பத்யம் கொள்ளுதல்; வருடம் இரண்டு முறை பேதி மருந்து அருந்துதல் எல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இது முன்னோர்கள் சொல்லி வைத்த முத்தான அறிவுரை. இந்த இரண்டுகளில் எதையுமே நாம் ஒழுங்காக கடைப்பிடிப்பதில்லை.

எண்ணெய் குளியல் எப்படி?

எண்ணெய் தேய்த்து வெகு நேரம் காத்திருக்கக் கூடாது. கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம்வரை, காலை இளம் வெயிலில் நின்ற பிறகு குளிக்கலாம். தலை முதல் உள்ளங்கால்வரை நன்கு பரவலாக எண்ணெயைத் தேய்க்க வேண்டும். உடல் உறுப்புகள், மூட்டு இருக்கும் இடங்களில் சற்றுப் பொறுமையாக வட்ட வடிவில் தேய்த்தால், உள்ளுறுப்புகள் வெப்பத்தைச் சரிவரப் பராமரிக்கப்படும். மேலும் மூட்டுகளுக்கு நெய்ப்புத் தன்மையையும் கொடுக்கும். எண்ணெய் தேய்த்த பிறகு மிதமான சூடுடைய வெந்நீரில் குளிக்கவும்.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று பகல் உறக்கம் கூடவே கூடாது. ஏனென்றால் உடலில் உள்ள நவதுவாரங்களின் வழியாக அதிகரித்த உடல் சூடு வெளிவரும், முக்கியமாகக் கண்களின் வழியாக வரும். இதைப் பகல் தூக்கம் தொந்தரவு செய்யும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று குளிர்மையான உணவு வகைகளான தயிர், குளிர்பானம், நீர் காய்கறிகள் போன்றவற்றைத் தவிர்க்கவும். பதிலாக மிளகு ரசம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களின் குளிர்மை சிலருக்கு ஒத்துவரவில்லை என்றால், மேற்படி எண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக இருக்கும்.

நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காகப் பயப்படத் தேவையில்லை. எண்ணெய் குளியலை முறையாகப் பின்பற்றினால், உடல் பழகிவிடும். மேற்கூறிய தொந்தரவுகள் விலகிவிடும்.

இனி வாரம் இருமுறை தீபாவளி கொண்டாடுங்கள்.. அதாவது எண்ணெய் குளியல்  (கங்கா ஸ்நானம்) செய்யுங்கள்.

எண்ணெய் குளியல் நன்மைகள்

  • முடி உதிர்தலைக் குறைக்கும்
  • பார்வை பலப்படும்
  • முதுமையைத் தாமதப்படுத்தும்
  • ஆயுட்காலத்தைக் கூட்டும்
  • தோலைப் பளபளப்புடன் வைத்திருக்க உதவும்
  • உடலில் உண்டாகும் கழிவை வெளித்தள்ளும்
  • உள்ளுறுப்புகள் தங்களுடைய செயல்களைச் சிறப்பாகச் செய்யும்
  • முறையான தூக்கத்தைத் தரும்