
-டாக்டர்.ஜி.ராஜமோகன்
பெற்றோர்களை சுமையாக கருதும் நிலை இருக்கிறது.குடும்பத் தூண்களை பாதுகாப்பது நமது கடமை.
இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா. அதேநேரம், மருத்துவ வசதிகள் மேம்பட்டுள்ளதால் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முந்தைய தலைமுறை வரை நிலவிவந்த கூட்டுக்குடும்ப முறை மறைந்து, இன்றைக்குத் தனிக்குடும்பங்கள் பெருகிவிட்டன. நகர்ப்பகுதிகளில் தனிக்குடும்பங்களாக வாழ்பவர்களே அதிகம். இதனால் சொந்த ஊரிலும் கிராமங்களிலும் முதிய வயதில் பெற்றோர் தனித்து வாழ நேரிடுகிறது.

மற்றொருபுறம் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போவதால் வீட்டிலுள்ள பெரியவர்களை நேரம் செலவழித்து கவனித்துக்கொள்ள முடிவதில்லை. இந்தப் பின்னணியில் உடல் நலிவடையும் வயதில் முதியவர்களால் உரிய கவனிப்பைப் பெற முடியாமல் போகிறது. வயது ஏறஏற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். உரிய முறையில் கவனித்து சிகிச்சை பெற்றால்தான் பெரிய நோய்களை முன்கூட்டியே தடுக்கவும், தீவிரமடையாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும். எனவே, முதியோர் நலம் என்பது இந்தக் காலத்தில் மிக முக்கியமாகிறது.
எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி,சீரான உடல்நலம்,ஆன்மீக ஈடுபாடு,தொண்டு, தியானம்,மற்றும் உண்மையான உறவுகள் இவற்றோடு சற்றே பொருளாதார வசதியும் இருந்தால் முதுமை பருவம் வசந்த காலம் தான்.
ஆனால் முதுமையில் வறுமை கொடியது, தனிமை கொடியது,பல நோய்களின் தாக்கம் அதைவிட கொடியது.
இவற்றில் எல்லாவற்றையும் விட மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் இயலாமை. அதாவது வயதான காலத்தில் தனது தேவைகளுக்காக மற்றவர்களை சார்ந்து இருப்பது கொடுமையிலும் கொடுமை.
விசாலமான வீடுகள் இருந்தாலும் இளைய தலைமுறை நெஞ்சங்களில் இடம் இல்லாமல் நிராகரிக்கப்படும் முதியோர்களின் எண்ணிக்கை இன்று அதிகம். தங்கள் வாழ்க்கை முறைக்கு ஒத்துவராக பெற்றோர்களை சுமையாக பலரும் நினைக்கிறார்கள். இப்படி நிராகரிக்கப்படும் பல முதியவர்கள் இதையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ வேண்டுமா…? இந்த வாழ்க்கை தேவையா…?உயிரோடு இருக்க வேண்டுமா…?என்று மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
பெற்றவர்கள் சுமையல்ல…!
அவர்களால் வந்தது தான் உங்கள் வாழ்க்கை.
நன்றி மறவாமல் வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை.
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
கெட்டுப் போக வேண்டுமா? பெரியாரைக் கலக்காமல் செயலாற்று. ஒருவன் அழிவுற வேண்டுமாயின் ஆற்றல்மிக்க வலியாரிடம் பெரியாரிடம் பிழை பட நடந்து கொண்டால் போதும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து உள்ளார் திருவள்ளுவர்.
பெரியவர்களை கெளரவமாக நடத்துவோம்,அவர்களை பாதுகாப்போம்.
-டாக்டர்.ஜி.ராஜமோகன்

