
– டாக்டர் நா.கங்கா
பிஸ்கட், பிரெட், பன் போன்றவை மைதா மாவில் செய்யப்படுவதால் குழந்தைக்கு இவை பசியின்மையை ஏற்படுத்தும். மலச்சிக்கல் உண்டாகலாம். மொறு மொறுப்பு ருசி, மணம் போன்றவற்றுக்காக பிஸ்கட்டில் சேர்க்கப்படும் பலவிதமான வேதிப்பொருட்கள் குழந்தைகளுக்கு நல்லதல்ல. பல் முளைக்கும் பருவத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட் தருகிறார்கள். கரமுற என்று தன் பல்லில் கடித்து சாப்பிடுவது குழந்தைக்கு புது அனுபவம். பிஸ்கட் சுவையை ருசித்த பிறகு இட்லி, சாப்பாடு போன்றவற்றை குழந்தை ஒதுக்கிவிடும். ஒரு வயது முடிவதற்குள் வீட்டில் சாதாரணமாக சமைக்கப்படும் எல்லாவிதமான உணவு வகைகளையும் பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு இரவில் தாய்ப்பால் தரலாம். எந்த வயது வரை குழந்தை தாயிடம் பால் அருந்துகிறதோ அதுவரை இரவிலும் பால் தரலாம். வேறு பால் வகைகளை குடிக்கும் குழந்தைகளுக்கு இரவில் பால் தருவதை ஒன்றரை வயதிற்குள் நிறுத்த வேண்டும்.
ஒரு வயதிற்குப் பிறகு குழந்தையை தானே சாப்பிட, டம்ளரில் பால், தண்ணீர் அருந்த பழக்க வேண்டும். அதிக வயதுவரை சாப்பாட்டை ஊட்டிவிட்டு வளர்ப்பதால் பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்கு தன்னம்பிக்கை, முடிவு எடுக்கும் திறன் தானே பிரச்னைகளை சமாளிக்கும் திறன் ஆகியவை குறைவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. தானே எடுத்து சாப்பிடும் குழந்தைக்கு பிற்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் இருக்காது என்றும், நல்ல உணவு முறை, பழக்க வழக்கங்கள் வேரூன்றுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தைகளுக்கு அடிக்கடி ஊட்டச்சத்து நிறைந்த இடை உணவு வகைகளைத் தர வேண்டும். பல வகை சுண்டல்கள், புட்டு, களி, கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை, பொரி உருண்டை, பழங்கள், காய்கறி சாலட்கள், பொரி, அவல், சோளப்பொரி, வறுத்த நிலக்கடலை, பட்டாணி, உப்புக்கடலை போன்றவற்றை வயதிற்கு ஏற்ப தரலாம்.
கடைகளில் விற்கப்படும் பிஸ்கட், ரொட்டி, கேக், சாக்லேட், நூடுல்ஸ், வறுவல்கள், மிக்சரில் பல வகையான வேதிப் பொருட்கள், நச்சுப் பொருட்கள் உள்ளன. அவற்றை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். துரித உணவு வகைகள் குழந்தைகளுக்கு என்றுமே ஏற்றதல்ல.

