
தலையங்கம்
ஒருவர், என் மகனுக்கு 40 வயதாகி விட்டது. திருமணமே வேண்டாம் என்கிறான் என்று சொன்னார். இன்னொருவர், என் மகளுக்கு 35 வயது. கல்யாணம் எனப் பேச்செடுத்தாலே எரிந்து விழுகிறாள் என்றார். மற்றொரு இளைஞன், எனக்கு ஒருபால் உணர்வே மேலோங்கி இருக்கிறது. பெண்களிடம் உறவு கொள்ளவே அச்சமும், இயலாமையும் உள்ளது என்கிறான். பெண்களும் இப்படி மாறுபட்ட இயற்கைக்கு எதிரான உடலுறவு கொள்ள விரும்பும் ஆண்களும், காதலர்களாலும், கணவர்களாலும் இம்சைகளுக்கு உள்ளாகி மனச்சோர்வினாலும் விரக்தியினாலும், பாதிப்படைந்து ஆலோசனைக்கு வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் பள்ளி மாணவிகள், பதின் பருவ இளைஞர்கள், புறனான, இயல்புக்கு மாறுபட்ட உடல் உறவு கொள்ளும் வீடியோக்கள் அதிகம் உலா வருகின்றன. இதற்காகவே காவல்துறையில் திரு. ரவி ஐபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவு செயல்படுவதாக சமூக நலத்துறை செயலாளர் திருமதி எஸ்.மதுமதி ஐஏஎஸ் கூறினார்கள். போர்னோ வீடியோக்கள் கண்காணிக்கப்படுவதாகவும் அறிகிறோம்.
இதுதவிர பாலுறவு பற்றிய பெரும் அச்சம் பெண்களிடம் பரவி வருகிறது. VAGIANISMUS DYSPAREUNIA என்பதும், ஆண்களிடம் CASTRATION COMPLEX என்பதும் அதிகமாகி உள்ளது. மலரினும் மெல்லியது காமம் என்பதை உணர வேண்டும். பாலியல் கல்வியின் தேவை உணரப்பட்டாலும், அதனை எவ்வாறு கற்பிப்பது என்கிற உளவியல் நுணுக்கத்தை அறியாதவர்களே பெருமளவில் உள்ளனர். குடும்பநல அமைப்பு வெளியிட்டுள்ள சில நூல்களை அவர்கள் படிக்க வேண்டும். HUMAN SEXUALITY பற்றிய விழிப்புணர்வு தேவை. பூப்பு பருவ பெண்கள் பல்வேறு பேராசைகளால் கவரப்பட்டு தங்களின் உடலை விற்று பணம் சேர்க்கும் உத்தியும் அதிகரித்து வருகிறது. அண்மையில் கருத்தடை, கருவழிப்பு மருந்துகள் அதிகளவில் விற்பனையாவதை அரசு கட்டுப்படுத்தி உள்ளது. இளம்வயது பெண்கள் கருக்கலைப்புக்கு பயிற்சியில்லா மருத்துவ உதவியாளர்களை நாடிச் சென்று பாதிப்புக்குள்ளாவதை செய்தித்தாள்கள் மூலம் அறிகிறோம்.
வளர்ந்து வரும் பாலியல் சார்ந்த விபத்துக்களை கண்காணித்து கட்டுப்படுத்துவது மிக மிக அவசியமான ஒன்று. திருமணம் செய்து கொள்ளவே அச்சப்படும் இளைஞர்களை வழிநடத்த வேண்டும். பாலியல் ஆலோசனை மையங்கள் அவசியம் தேவை. உளநல ஆலோசகர்கள் தேவை. பெரும்பாலும் உளநல ஆலோசனை என்றவுடன் மனநோய் மருத்துவர்களையே கணக்கில்.. கவனத்தில் கொள்கிறார்கள். இது தவறு. சைகாலஜிஸ்ட், சைக்கோ தெரபிஸ்ட் மட்டுமே இதற்கு உதவ முடியும்.
அன்புடன்
ஜி.ராஜமோகன்

