
உளவியல்- சைக்காலஜி கல்வியை பரவலாக எல்லா தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தணியாத தாகத்தோடு அயராது பாடுபட்டு வரும் டாக்டர் பரமேஸ்வரன்.. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருபவர்.
படிப்பதை தனது உயிர் மூச்சாகக் கொண்டவர்.
50க்கும் மேற்பட்ட பட்டங்களை வாங்கி தேசிய அளவில் சாதனை படைத்தவர். உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் தொலைதூர கல்வி மூலம் தான் நூறு சதம் கல்வி அறிவை எட்ட முடியும் என்று தொலைநோக்கோடு கல்விப் பணி செய்து வருபவர்..

உலக மனநல தினத்தையொட்டி
ஹெல்த் அன்ட் பியூட்டி இதழ் சார்பாக சந்தித்து பேசினோம்..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உடல் நலத்தை பாதுகாப்பது போலவே மன நலத்தையும் பாதுகாக்க வேண்டும். உடல் நலமும் மனநலமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது ..ஒரு நாணயத்தின் இரு பக்கத்தைப் போல.
மனம் இருந்தால் மார்க்கமுண்டு. கொரோனா எனும் கொடிய வைரஸ் பாதிப்பால் உலகமே பொருளாதார வீழ்ச்சியை கண்டது.
பல மாதங்கள் வீட்டுக்குள் முடங்கிப் போனார்கள் கோடிக்கணக்கான மக்கள் வருமானம் இல்லாமல் நோய் பாதிப்பு ஏற்படுமோ என்ற மன பீதியில் செய்வதறியாது திக்கு திசை தெரியாமல் உளன்று கொண்டு இருந்தார்கள் .அந்த நேரத்தில் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்தது.
உளவியல் பார்வையில் சொல்வதென்றால்

தமிழக முதல்வர் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறார் .
நான் இருக்கிறேன் கவலைப்பட வேண்டாம்… என்று ஆறுதல் தந்து ஊக்கம் அளிப்பவராக.. தலைமை பண்பு உள்ளவராக.. மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்.
இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மன நலம் காக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
ஒரு நாட்டிற்கு நல்ல தலைமை அமைந்துவிட்டால்.. இனி நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கையோடு இழந்த தொழில்- வியாபாரத்தை சிறப்பாக நடத்துவார்கள். வருமானம் பெருகும். மனவளமும் அதிகரிக்கும் .தமிழக முதல்வருக்கு எனது வாழ்த்துகள்.
நமது பாரம்பரிய இதிகாசங்களே மனநலம் காக்க உதவும் வாழ்வியல் பொக்கிஷங்கள். மகாபாரதம் கவுன்சிலிங் தத்துவத்தின் அடிப்படையில் ஆனது என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
புத்தர் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித்தள்ளி ..மன அமைதியை மேம்படுத்தக் கூடிய ஆழமான எளிய வாழ்வியல் முறையை போதித்தார்; பரப்பினார் ;அவரும் வாழ்ந்து காட்டினார்.
இந்த உலகத்தில் அன்புதான் கடவுள். அன்பு நிறைந்தவன் மனிதன். அன்பை விதைத்துக்கொண்டே போனால்.. எதிரி என்று யாரும் இருக்க மாட்டார்கள் .யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப்பக்குவம் வந்துவிட்டால் உலகமே நமக்கு சொந்தக்காரர்களாக நண்பர்களாக மாறிப் போவார்கள். மனமாற்றம் மனப்பக்குவத்தை அடையும்போது மிகச்சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். சுயநலம் இல்லாத உலகம் உருவாகும். சுயநலம் துளிர் விட்டால் குற்றமும் வன்முறையும் பல்கிப் பெருகும்.
தமிழில் இல்லற வாழ்வின் இன்பத்தை கொண்டாடி மகிழ்வதற்காக நம் முன்னோர்கள் கொக்கோகம் எனும் பாலியல் இலக்கணத்தை தந்தார்கள். ஆணும் பெண்ணும் இல்லறத்தில் இணைவது ஈடு இணையற்ற இன்பத்தை அளவில்லாமல் பெற உதவும். மனநலம் காக்க இல்லற இன்பம் மிக முக்கியம். இந்த இன்பம் முதுமையிலும் தொடரும்.
நமது வாழ்வில் கூட்டுக்குடும்ப முறை சிதைந்து வருவது வேதனை அளிக்கிறது. முதியோர்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும். அவர்களை கௌரவப்படுத்த வேண்டும்.
இளம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு போதிய காலம் தாய்ப்பால் தருவதில்லை. தாய்ப்பாலுக்கு இணையான நோய் எதிர்ப்பு தடுப்பூசியை நம்மால் தயாரிக்க முடியாது .போதுமான காலத்திற்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும்.
வேலைக்குப் போகும் பெற்றோர் குழந்தைகளோடு நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளை செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகளோடு அதிக நேரம் விளையாட அனுமதித்து விட்டால் அவர்களது படிக்கும் திறன் குறையும். எதிர்காலம் இருண்டு போகலாம். பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல கதைகளை சொல்லி அறநெறிகளை.. தன்னம்பிக்கையை.. மானுட பண்புகளை வளர்க்க வேண்டும்.
பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் அதிக நேரம் கலந்துரையாட வேண்டும். அவர்களது பள்ளிக்கூட அனுபவங்கள்.. நண்பர்களது உதவிகள்.. விளையாட்டு. அறிவியல். மருத்துவம். சினிமா எல்லாத் துறைகளைப் பற்றியும் இயல்பாக பேசி அறிவையும் ஆளுமையையும் வளர்க்க உதவ வேண்டும்.இப்படி கலந்துரையாடும் குடும்பம் உடல் மன நல ஆரோக்கியத்தோடு குதூகலமாக வாழும்.
சந்திப்பு:பவித்ரன்

