பா.செல்வபாண்டியன்
 ஓமியோபதி வாசகர், ஆர்வலர்
 
 ஓமியோபதி மருத்துவக் குணப்பாட (MATERIA MEDICA) நூலில் ‘மனம்’ பற்றி பேசாத மருந்துகளே  இல்லை.  மருத்துவக் குணப்பாட நூல், மருந்துகாண் (REPERTORY) நூல் ஆகியவற்றில் முதலில் இடம் பெறுவது ‘மனம்’ (MIND)  எனும் தலைப்பே ஆகும்.
    ஓமியோதிபதி மருத்துவப்  பேராசான் மரு. சாமுவேல் ஹானிமன் தனது மருத்துவ நெறிமுறை   (ORGANON OF MEDICINE) நூலில்  
மணிமொழி 230 இல்,  
“உடல், மனம் சார்ந்த துயர்களில்…மிக உயர்ந்த தரமான நன்மைகளை அளிப்பதும் வெற்றிகளை ஈட்டுவதும் ஓமியோபதி மருத்துவக்கலை ஒன்றே” – என்றும் 
மணிமொழி – 210 இல், 
“உடலைப் பாதிக்கின்ற அனைத்து நோய் நிலைகளிலும் மனம், மனக்கிளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல் ஆகியன எப்போதுமே இணைந்திருக்கின்றன” – என்றும் “மனம்” பற்றி தெளிவுபடுத்துகின்றார்,
    
    இந்தியாவில் குறிப்பிட்டுச்  சொல்லக்கூடிய ஓமியோபதி மருத்துவர் ராய் பகதூர் பிஷம்பர்தாஸ், “ஓமியோபதி மருத்துவ வெற்றிக்கு வித்திடுவது மனம் பற்றிய குறிகளே” என்கிறார். மற்றொரு புகழ்பெற்ற மருத்துவர் எஸ்.பி.கோபிகர் “சரியான மருந்தை தேர்வு செய்ய மனக்குறிகளே ஒவ்வொரு முறையும்  ஆக சிறந்த வழிகாட்டியாக அமைகிறது” என்கிறார். 
 
ஓமியோபதி மருத்துவ உலகின் திறவுகோலாக அமைகின்ற ‘மனம்’ பற்றிய பல்லாயிரக்கணக்கான  குறிகளை, குறிப்புகளை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு தெரிவு செய்து முத்தாரமாக தொகுத்து மரு. கி. அம்பலவாணன்  அவர்கள் இந்நூலின் வழி அளித்துள்ளார்கள்.
 
மருத்துவ மாணவர்களுக்கும், சொல்லிக் கொடுக்கும்  ஆசிரியர்களுக்கும் கடினமாக  இருந்துவரும் “மருத்துவ நெறிமுறை” (ORGANON OF MEDICINE)  நூலை எளிய தமிழில், எவரும்  புரிந்துகொள்ளும் வகையில் 2017 ஆம் ஆண்டில் மொழிப்பெயர்த்து தந்தவர்  மரு.கி.அம்பலவாணன் ஆவார். மணிமொழிகளுக்கான மொழிப்பெயர்ப்பு மட்டுமின்றி தமிழ் மண்ணுக்கு ஏற்ற விளக்கக் குறிப்புகளையும் தந்துள்ளார். அத்தகையவரின் கைவண்ணத்தில் ‘மனம்’ பற்றிய இந்த மருந்துக்காண் ஏடு  வெளிவந்துள்ளது.  
 
பாரதி பெண்ணுரிமை பற்றி சொல்லும்போது ஓரே பொருளை  தரக்கூடிய மூன்று சொற்களின் வழி அழுத்தம் திருத்தமாக  “சரி, நிகர், சமானம்” என வலியுறுத்தி சொல்வதை பலரும் குறிப்பிடுவார்கள் அதே போன்று இந்த நூலின் பல இடங்களில் புரிதலில்  குழப்பம் ஏற்படாமல்  இருக்க நல்ல தமிழ்ச்சொற்கள், வழக்குச் சொற்கள், சில அயற்சொற்கள் என ஆசிரியர் பல இடங்களில் பயன்படுத்துகின்றார்  
 
எடுத்துக்காட்டாக.,
Cruelty         –     கொடூரம், மிருகத்தன்மை, மனிதநேயமற்ற கல்நெஞ்சு
Delirium       –    பிதற்றல், மூளைக்குழப்பம், பதற்றம், பரபரப்பு, சித்த பிரம்மை,தற்காலிக மனப்பிறழ்வு, மனப்பிறழ்ச்சி, தோன்றி மறையும் நிலையற்ற மனநிலை,ஜன்னி
Discords    –    பிணக்கு,முரண்பாடு, பூசல், உடன்பாடின்மை
Fastidious    –    எளிதில் மனநிறைவு அடையாத, குற்றம்  காண்கின்ற,நயம் எதிர்பார்க்கின்ற, அனைத்தும் முறையாக இருக்க வேண்டும் 
என எண்ணுகிற,,,,
 
இவ்வாறாக அனைத்துத்தரப்பு வாசகருக்கும், ஆர்வலர்களுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் ‘மனக்குறிகளை’ கொண்டு சேர்ப்பதே தலையாய நோக்கமாகக் கருதியுள்ளதை அறிய இயலும்.
 
இந்த மனம் பற்றிய மருந்துகாண் நூலின் வழி எண்ணிலடங்காத மனிதச் செயற்பாடுகளையும், உணர்வுகளையும், அச்சங்களையும், மகிழ்ச்சிகளையும், உறவு சார்ந்த-பணியிடம் சார்ந்த இன்னல்களையும், இன்ப-துன்பங்களையும் என அவரவர் பொருத்தி பார்த்து மருந்தினை அறிந்து கொள்ளலாம்.
 
“உன் கண்ணில் நீர்வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ !”
 
என்ற மனப்பாங்கினையும், “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற மனிதநேயத்தையும் சுட்டும் மருந்துகள் எவை என அறியலாம்.    
 
‘பள்ளிக்கூடங்களில்  என் சடையை பிடித்து இழுக்கிறாள்’  என பிள்ளைகள் முறையீடு செய்யும். ‘பின்னலை பின் நின்று இழுப்பான்’ என கண்ணன் மீது புகார்கள் எழும். இந்நூலில்                PULL DESIRE இல் இத்தகைய  சடையை இழுப்பவர்களைப்  பற்றி காணலாம்.
 
 இலக்கணத்தில் செய்வினை, செயற்பாட்டு வினை உண்டு. அறிவியலில் முன்னேற்றம் அடைந்தும் ‘செய்வினை’ செய்துவிட்டார்கள் என நம்பக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய சந்தேக குணங்களை உலகம் முழுவதும் காணமுடிகிறது என்பதை இந்நூல் வழியும் காணலாம்.
 
Answer – என்ற தலைப்பில்,
Mono Syllable – ஒற்றை  சொல்லையே ஒரே பதிலையே மீண்டும் மீண்டும் கூறுதல்
Questions, answers, in –  கேள்வி  கேட்பது மாதிரியே பதில் தருவார்
என்பதை படிக்கும் போது, நகைச்சுவை நடிகர் வடிவேலு, ஒரு பஞ்சாயத்து காட்சியில் “திரும்ப.., திரும்ப பேசுற நீ” என பஞ்சாயத்தாரை புலம்பவைக்கும் நகைச்சுவை காட்சி  மனதில் வந்து நிற்கும்.
 
எரிச்சலாக  பேசுபவர்களை ‘சரியான மூலம் பிடித்தவன் போல’ என பகடி செய்வார்கள். எரிந்து விழுதல் என்ற தலைப்பில், மூல வியாதி துயருடன் (hamorrhoids, With) எரிந்து எரிந்து விழுதல் என மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர்.  IRRITATE என்பதை எரிந்து விழுதல் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ‘எரிந்து எரிந்து’ என அடுக்கி துயரின்  தன்மையை படம் பிடிக்கின்றார்.
 
Sensitive என்பதை மிகைமன உணர்வு, எளிதில் உணர்ச்சிவசப்படுகின்றவர் என்கிறார். வாசனையால், குளிரால், உணவால், காய்ச்சலால், வெளிச்சத்தால், மாதவிலக்கால்,  இசையால், வியர்வையால், வலியால் என மிகை உணர்வுகளை எளிய  சொற்களில் வரிசைப்படுத்துகின்றார்.
 
வழக்குச் சொற்களாக – வசியம் பண்ணுதல் , பிசினாறித்தனம், வசவு, மெத்தனம், ஏகாந்தம், வாட்டம், அசட்டை என பல சொற்களை மொழிப்பெயர்ப்பில் கையாளுகின்றார்.  சுடு சொல், அகநிலைப் பண்பு, நல்லுணர்வு, கெடு நோக்கம் ,  மனப்பிறழ்வு, இறுமாப்பு, கழிவிரக்கம் , இறுதிவிருப்ப ஆவணம்(உயில்), பற்றுறுதி என அழகிய  சொற்களை பயன்கொள்கிறார்.
 
Fear எனும் பொதுத்தலைப்பில் – Contagious, Epidemic – கொள்ளை, தொற்றுநோய்- பயம் , மிகுந்த அச்சம்  என்பதற்கு  ஆர்சனிக்கம், கல்க்கேரி – கார்ப்  என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரனா தீநுண்மி  தொற்றுக்குத்  தடுப்பு மருந்தாக இந்திய அரசினால் ஏற்கப்பட்டுள்ள ‘ஆர்சனிக்கம் ஆல்பம்’  தொற்றுநோய் பற்றிய அச்சத்திற்கும் மருந்தாக அமைவது தான் ஓமியோபதி மருத்துவத்தின் சிறப்பு ஆகும். மேலும், Suffocation of – மூச்சுத் திணறல் குறிந்த  நிலைகளுக்கும் பயங்களுக்கும் ஓமியோபதி உற்ற துணைவனாக நிற்பதை இந்த நூலில் அறியலாம்.
 
பாவேந்தர் பாரதிதாசன் “பாரடா உன் மானிடப் பரப்பை; எங்கும்  பாரடா இப்புவி மக்களை” என்பார். அவர் மீதும் ஓமியோபதி மருத்துவத்தின் மீதும் பற்றுக்கொண்ட   மருத்துவர்  கி. அம்பலவாணன் அவர்கள், அதே போன்று ஓமியோபதி மருத்துவம் பற்றி, ‘மனம்’ பற்றி அனைவரும்  பாருங்கள், அறிந்துகொள்ளுங்கள் என்கிறார். தான் கற்றதை, பெற்றதை சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என்ற உறுதியுடன், அயராத உழைப்புடன் தொகுத்தளித்திருக்கும் ’மனம்’ பற்றிய இந்த மருத்துகாண் ஏடு ஒவ்வொருவருக்கும் பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
   
பா.செல்வபாண்டியன்
 ஓமியோபதி வாசகர், ஆர்வலர்
———————————————–
Phone : 0422-2424698
Mobile : 9443422843
Coimbatore.