டாக்டர் சி.ஏ.ரவி.
பேராசிரியர் டாக்டர் உஷாராவி.
சுசான்லி அக்குபங்சர், ஆயுர்வேதிக் கிளினிக்.

வாழ்க்கையின் எந்தவொரு இலக்கை எட்டுவதற்கும் குறுக்குவழிகள் கிடையாது.ஆனால், முறையான திட்டமிடல் மற்றும் விவேகமான உத்திகள் மூலம் நேரத்தையும் உழைப்பையும் வீணாக்காமல் வெற்றியை அடைய முடியும். இக்கோட்பாடு நமது உடல்நலப் பராமரிப்பிற்கும் முற்றிலும் பொருந்தும்.

இன்றைய நவீன சூழலில், ஆரோக்கியமாக வாழ்வது என்றாலே கடுமையான உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வது அல்லது கடினமான உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது மட்டுமே என்ற தவறான புரிதல் நிலவுகிறது.

உண்மையில்,நமது மரபு சார்ந்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றி, அன்றாடப் பழக்கவழக்கங்களில் செய்யும் மிகச் சிறிய, ஆக்கப்பூர்வமான மாற்றங்களே நீண்ட ஆயுளுக்கும் பிணியற்ற வாழ்விற்கும் அடித்தளமாக அமைகின்றன.

நச்சு நீக்கும் காலை வெந்நீர்

விடிந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு குவளை வெதுவெதுப்பான நீர் அருந்துவதை ஆயுர்வேதம் ‘உஷாத்பானம்’ என்று குறிப்பிடுகிறது. இது இரவு முழுவதும் சிறுகுடலிலும் பெருங்குடலிலும் தங்கியிருக்கும் நச்சுப் படிவுகளை இது இயற்கையாகவும் இலகுவாகவும் வெளியேற்றுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, அன்றைய நாள் பணிகளுக்குத செரிமான மண்டலத்தை தயார்படுத்துகிறது.

அதிகாலை அல்லது அந்தி மாலையில் 20 முதல் 30 நிமிடங்கள் இளம் சூரிய ஒளியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஒரு சிறந்த இயற்கை மருத்துவம்.
சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் வைட்டமின் ‘டி’ எலும்புகளின் அடர்த்தியைப் பாதுகாத்து வாத நோய்கள் அண்டாமல் தடுக்கிறது.

எளிய நடைப்பயிற்சியானது மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது; இதய நாளங்களின் தகைவைக் குறைத்து இதய நலம் பேணுகிறது.

மூப்பு தடுக்கும் முப்பெரும் மூலிகைகள்

நமது சித்தர் பெருமக்கள் அருளிய ஒப்பற்ற வாழ்வியல் பொன்மொழி:

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் உண்டால் கிழவனும் குமரன் ஆவான்!
காலை இஞ்சி, பித்தத்தைச் சமன் செய்து,பசியைத் தூண்டுகிறது. மதிய வேளையில் சுக்கு,வாயுத் தொல்லைகளை நீக்கி,வாதத்தைக் கட்டுப்படுத்துகிறது.

மாலையில் கடுக்காய்,உடலில் தேங்கும் கபத்தை நீக்கி,குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. திரிதோஷ நிவாரணியாக இவைகள் செயல்படுகின்றன.

இவற்றை அன்றாட உணவிலோ அல்லது கஷாயம், குடிநீராகவோ மிதமான அளவில் சேர்த்துக்கொள்வது உடலை மூப்படையாமல் பாதுகாக்கும்.

தாகம் எடுத்த பிறகே தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லாமல், நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை உறுதி செய்ய வேண்டும். போதுமான நீர் அருந்துவது ரத்த ஓட்டத்தை எளிதாக்குவதுடன், சிறுநீரகங்களின் வடிகட்டும் பணியைச் சுமையின்றிச் செய்ய துணைபுரிகிறது.

பசித்தபின் புசி

கடிகாரத்தைப் பார்த்து வழக்கத்திற்காக உண்பதை விட, பசித்த பிறகு உண்பதே முறையானது. இதை குறிப்பிட்டே, மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு… என்கிறார் திருவள்ளுவர்.

ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ உணவு நெறிப்படி,
வயிற்றின் இரண்டு பங்குகள்(பாதி) திட உணவாலும்,ஒரு பங்கு (கால் பகுதி) திரவ உணவாலும் (நீர்/மோர்/குடிநீர்) நிரப்பப்பட வேண்டும். மீதமுள்ள ஒரு பங்கு (கால் பகுதி) வாயுவின் சுழற்சிக்கும் செரிமானக் காற்றிற்கும் காலியாக விடப்பட வேண்டும்.

இரவு உணவை உறங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு முன்பே முடித்துவிடுவது இன்றியமையாதது. உண்ட உடனே உறங்கச் செல்லும்போது செரிமானச் சாறுகள் உணவுக்குழாய்க்குப் பின்னோக்கி வந்து அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற குறைபாடுகளை உருவாக்கும். சீக்கிரமே உண்ணும் வழக்கம் ஆழ்ந்த தூக்கத்திற்கும் உள்ளுறுப்புகளின் சீரான ஓய்விற்கும் வழிவகுக்கும்.

நமது பாரம்பரிய உணவு முறை ஆறு சுவைகளை உள்ளடக்கியது. நாவிற்குப் பிடித்த இனிப்பு,புளிப்பு, உவர்ப்பு ஆகியவற்றை மட்டுமே நாம் அதிகம் சேர்க்கிறோம்.
கசப்பு (பாகற்காய், சுண்டைக்காய்) – கல்லீரலைத் தூண்டி,ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
துவர்ப்பு (வாழைப்பூ, நெல்லிக்காய்) – உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும், திசுக்களை வலுப்படுத்தும். காரம் – செரிமானத்தைத் தூண்டும்.இவை ஆறும் சீராக அமையும் போது வாதம், பித்தம்,கபம் என்ற முக்குற்றங்களும் சமநிலையில் நின்று நோயற்ற வாழ்வைத் தரும்.

எச்சரிக்கை

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையும், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெய்ப் பலகாரங்களும் கல்லீரலுக்கும் இதய நாளங்களுக்கும் அதிக அழுத்தத்தை உண்டாக்குகின்றன.இவற்றை இயன்றவரை தவிர்ப்பது, நமக்காக இடைவிடாது உழைக்கும் உள் உறுப்புகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

7 மணி நேர ஆழ்ந்த உறக்கம்

படுக்கைக்குச் செல்லும் முன் ஸ்மார்ட்போன், மடிக்கணினி போன்ற மின்னணுத் திரைகளைத் தவிர்ப்பது அவசியம். திரைகளிலிருந்து வெளிவரும் நீல ஒளி மெலடோனின் ஹார்மோன் சுரப்பைப் பாதித்து தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. இரவு 7 மணி நேர ஆழ்ந்த உறக்கமே உடலின் திசுப் பழுதுபார்ப்புக்கும், மூளையின் புத்துணர்ச்சிக்கும், நரம்பு மண்டலச் சீரமைப்பிற்கும் ஒரே இயற்கை மருந்தாகும்.

பிராணாயாமமும் மன அமைதியும்

உடற்பயிற்சி உடலுக்கு என்றால், மூச்சுப் பயிற்சியும் தியானமும் உள்ளத்திற்கு. தினமும் 10 நிமிடங்கள் நிதானமான மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) மேற்கொள்வது உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து,மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் ஹார்மோனைக் குறைக்கிறது. அமைதியான மனமே நோயற்ற உடலின் மூலவேர்.

ஆரோக்கியம் என்பது ஏதோ ஒரு நாள் திடீரென எட்டப்படும் மாய இலக்கு அல்ல,அது தினசரி நாம் கடைப்பிடிக்கும் ஒழுக்கமான பழக்கங்களின் தொடர்ச்சியாகும்.
மேலே குறிப்பிட்ட எளிய பழக்கங்களை ஒவ்வொன்றாக நமது அன்றாட வாழ்வில் இணைத்துக் கொண்டாலே நல்வாழ்வு நிச்சயம் சாத்தியமாகும்.

நமக்காகவும், நம்மை நம்பியிருக்கும் குடும்பத்திற்காகவும் இந்த எளிய ஆரோக்கியப் பயணத்தை இன்றே தொடங்குவோம்!

தகவல் தொடர்புக்கு:

தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்,
எண்: 11, பாரதிதாசன் தெரு, (பிள்ளையார் கோயில் எதிரில்,)
மஞ்சக்குப்பம், கடலூர் – 607 001.
செல் 93676 22256.