– டாக்டர் பி.அருண், பிஎஸ்எம்எஸ்

கோவைக்காய் விலை மலிவாக கிடைக்கும் காய். கோவைக்காயில் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. கொடிவகையைச் சேர்ந்த கோவைக் காயின் காய், இலை, தண்டு, கிழங்கு என முழுத் தாவரமும் மருத்துவக் குணம் கொண்டது.

கோவைக்காய் நீரிழிவு பிரச்னையில் இருந்து நிவாரணம் தரக்கூடியது என்பதால், பச்சடியாகவோ கூட்டு, பொரியலாகவோ, சாம்பாராகவோ செய்து சாப்பிடலாம். சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுத்தூள், சீரகத்தூள், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கோவைக்காய் பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் குணம் பெறலாம். அல்லது, ஒரேயொரு கோவைக்காயை எடுத்து மோருடன் சேர்த்து அரைத்துச் சாப்பிடுவதன் மூலமும் மேலே சொன்ன பலன்களைப் பெறலாம்.

கோவைக் காய்சாப்பிடுவதால் கரப்பான் புண், ஜலதோஷம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். சுவையின்மை தீர கோவைக்காயை நறுக்கிக் காய வைத்து, வற்றலாக்கி வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். அல்லது, கோவைக்காயை ஊறுகாய் செய்தும் சாப்பிட்டு வரலாம்.

கோவை இலைச்சாற்றுடன் 20 மில்லி அளவு எடுத்துக்கொண்டு அதே அளவு நல்லெண்ணெய் சேர்த்து ஒரு டம்ளர் நீராகாரத்துடன் கலக்கி காலையில் மட்டும் குடிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து ஏழுநாட்கள் சாப்பிட்டு வந்தால், தீராத வெட்டைநோய்கள் குணமாகும். கோவை இலைச்சாற்றை சம அளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல்பூச்சாகப் பூச வேண்டும்.

மேலும் ஒருபிடி இலையை ஒன்றிரண்டாக நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் கலந்து பாதியாகக் காய்ச்சி, வடி கட்டிக் குடிக்க வேண்டும். இப்படி ஏழு நாட்களுக்கு காலை, மாலை வேளைகளில் செய்துவர படை, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கோவை இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்துபுண், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பூசினாலும் குணம் கிடைக்கும். கோவை இலைச் சாற்றை காலை, மாலை 50 மில்லி அளவு நான்கு நாட்கள் குடித்து வந்தால் சீத பேதி குணமாகும்.

கோவைக்காய்வேர்க்கிழங்குச்சாற்றை 10 மில்லி அளவு காலை வேளையில் மட்டும் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

கோவைப்பழத்தில் தாமிரச்சத்து நிறைய இருக்கிறது. இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் வராது. பொதுவாக சின்னக் குழந்தைகளை கோவைப்பழம் சாப்பிட பழக்கி வருவது நல்லது.