
– டாக்டர் ஜி.ராஜமோகன்
உங்களுக்கு மகிழ்ச்சி தராத எதையும் உங்கள் மனதில் தேக்கி வைக்காதீர்கள். நாம் மகிழ்ச்சியுடன் வாழ இந்த உளவியல் பயிற்சி உதவும். நீங்கள் எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்கள்.அப்போது வழியில் ஒருவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டால், உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஓடோடி உதவி செய்வீர்கள். ஆசுவாசப்படுத்துவது , முதல் உதவி செய்வது, தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அனுப்புவதும் தாமதம் இல்லாமல் நடக்கும். உடலுக்கு வெளியே படும் காயத்தைப் பார்த்து பதட்டமும் பரபரப்பும் அடையும் நீங்கள், எப்போதாவது, உள்ளே நிகழும் காயத்தைப்பற்றி யோசித்துப் பார்த்தது உண்டா?
யாருக்கோ எவருக்கோ உடலில் காயம்பட்டாலும் உடனே அந்த வலியைக் குறைக்கவும், காயத்தை ஆற்றவும் அக்கறை எடுத்துக் கொள்ளும் நீங்கள், என்றாவது உங்கள் மனதில் படுகிற அடிகளைப் பற்றியோ அதனால் ஏற்படும் காயங்கள் பற்றியோ, உணர்வுகளால் ஏற்படும் ரணத்தைப் பற்றியோ எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
உடலில் ஏற்படும் காயங்கள் போன்று கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் மனக்காயம் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?
மனக்காயம் வேறு யாருக்கோதான் பட்டிருக்க வேண்டும் என்பதில்லை. தங்கள் மனமே காயமடைந்திருந்தாலும் பலர் அதை உடனடியாக கவனிப்பதுகூட கிடையாது. அதன் பின் விளைவு மிக மோசமாக இருக்கக்கூடும் என்பதையும் உணர்வது கிடையாது.
அதுமட்டுமல்ல, மனக்காயத்தை உண்டாக்கியது எதுவோ அதை அங்கிருந்து அதற்றுவதும் கிடையாது. அதற்கு பதிலாக அந்த எண்ணத்தை அதே நினைவை மறுபடி மறுபடி நினைத்து மேலும் மேலும் காயத்தை ரணமாக்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை!
உடல் காயத்துக்கு சிகிச்சை அளிப்பதுபோலவே மனக் காயங்களுக்கும் சிகிச்சை முக்கியம். பொதுவாக அவமானங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், தனிமை, உறவுகளின் புறக்கணிப்பு போன்றவை தான் மனக்காயத்தை ஏற்படுத்துவதில் முதன்மையாக இருக்கின்றன. இவைதான் மனதைத் தாக்கி மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்துகின்றன..
இவை எல்லாமே வீணான உணர்ச்சிவசப்படுதலால் ஏற்படும் விளைவுகளே என்பதைப் புரிந்து கொண்டாலே போதும் மனதில் இவற்றால் காயம் ஏற்படாத வகையில் நீங்கள் திடமாகவும் தன்னம்பிக்கையாகவும் இருப்பீர்கள். சுயபச்சாதாபத்திற்கு இடம் கொடுக்க மாட்டீர்கள்.
அவமானம் என்பதோ தோல்வி என்பதோ ஏமாற்றம் என்பதோ நீங்கள் ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.
வெறுப்பானவையே கசப்பானவையே மனக்கயத்தை ஏற்படுத்தும்.அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டால் அங்கே விருப்பமானவை நிறையும்.அதனால் மனம் ஆரோக்கியமாக இருக்கும்.மனம் நிம்மதியாக இருந்தால் அங்கே மகிழ்ச்சி மலரும்!

