
-ஷைலஜா குணசேகரன்
மருந்துகளை எந்தக் காரணம் கொண்டும் தவறாகப் பயன் படுத்தக் கூடாது. ஏனெனில், குறிப்பிட்ட உடல் உபாதை அல்லது நோயைக் குணப்படுத்தவே மருந்துகள் பயன் படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் மருந்து மாத்திரை களைச் சாப்பிடுவது, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்து வதுடன், சில நேரங்களில் உயிருக்குக் கூட ஆபத்தாகப் போய்விடும்.
எல்லா மருந்துக்கும் பக்கவிளைவு ஏற்படுத்தும் குணம் உண்டு என்பதையும், எப்படி நோய்களை மருந்து மாத்திரை குணப்படுத்துகிறதோ, அதே அளவுக்கு பக்கவிளைவு களையும் ஏற்படுத்தும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், 80 சதவீத நோய்கள் தானாகவே குணமடையும் தன்மை கொண்டவை என்பதையும். அவற்றுக்கு மருந்து மாத்திரை தேவையில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதனால் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னதாக, அதன் விலை, தேவை போன்ற வற்றைக் கருத்தில் கொண்டு, தேவையிருந்தால் மட்டும் பயன்படுத்துங்கள்.
குறிப்பாக, புதிய மருந்துகள் என்று மருத்துவர் கொடுக்கும் மருந்துகளைக் கவனமாகவே பயன்படுத்துங்கள். அதிலும். முந்தைய மருந்தை விட, மருத்துவர் தற்போது கொடுக்கும் மருந்தின் விலை அதிகமாக இருந்தால், கூடுதல் கவனம் தேவை.
ஏராளமான மருந்து, மாத்திரைகள் பற்றி மருத்துவர் அறித் திருந்தாலும், நோயாளிக்குக் குறைவான மருந்துகளை வழங்கும் மருத்துவர்தான் சிறப்பான மருத்துவர். மாத்திரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்காமல், உடல் தானாகவே குணம் பெற ஏதுவாக மருத்துவர் செயலாற்றுவதே நல்லது.
மருந்துகள் தொடர்பாக கீழ்க்கண்ட அம்சங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
கட்டாயம் மருந்து எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்ற நிலையில், குறைவாக எடுத்துக் கொண்டு, விரை விலேயே அதை விட்டுவிட வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகளை, அவை மருந்துக்கடைகளில் நேரடியாக வாங்குபவையாக இருந்தாலும் சரி, அவற்றை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
எடுத்துக் கொள்ளும் மருந்தின் செயல், பக்கவிளைவு, மாற்று மருந்து போன்ற விவரங்களை மருத்துவ இதழ்கள், இணையத்தளம் போன்றவற்றின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி மருந்து கொடுக்க வேண்டாம்.
மருந்து தயாரிப்பாளர்களின் ஆடம்பர விளம்பரங்களை அப்படியே நம்ப வேண்டாம். ஈயை விரட்ட பீரங்கி வேண்டாம்.
தானாகக் குணம் கிடைக்கும் நோய்களுக்கு, தேவையில்லாமல் மருந்து சாப்பிட வேண்டாம்.
வாய்வழியாக மருந்துகளை உட்கொள்ளும் பழக்கம் நல்லது. நம்மில் பலர் மருந்து மாத்திரையை விட, ஊசி தான் விரைவாகச் செயலாற்றும் என்று நம்புகின்றனர். அதில் உண்மையில்லை. இரண்டும் ஒரே செயலாற்றல் கொண்டவைதான்.
நீண்டகாலத்துக்குச் சாப்பிட வேண்டிய மருந்து என்றால், அவற்றை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வதால். விலை குறைய வாய்ப்பு உள்ளது.
விலை குறைவான மருந்துகளைப் பரிந்துரைக்குமாறு மருத்துவரிடம் கேளுங்கள். குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற நோய்களுக்கு ஏராளமானமருந்துகள், பல்வேறு விலைகளில் உள்ளன. அவற்றில் விலை குறைவான மருந்துகளை கேட்டுப் பெறுங்கள்.
ஏற்கனவே எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை, மருத்துவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் எடுத்துச் செல்லுங்கள்.
ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துடன், ஒவ் வொரு முறையும் புதிய புதிய மருந்துகளை மருத்துவர் எழுதிக் கொடுக்கிறார் என்றால், அதில் கவனம் தேவை. நம்மில் பெரும்பாலான நோயாளிகள், எந்த மருத்துவர் நிறைய மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறாரோ. அவர்தான் சிறந்த மருத்துவர் என்று கருதுகிறோம்.
ஒரே நேரத்தில் நிறைய மருந்துகளைச் சாப்பிட வேண் டாம். அவ்வாறு சாப்பிட நேரிட்டாலும், குறுகிய காலத் துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீண்டகாலம் இழுத்துச் செல்ல வேண்டாம்.
மருந்தில்லா சிகிச்சை ஏதும் இருந்தால் அதைத் தருமாறு மருத்துவரை கேட்கலாம்.
தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவராக இருந்தால், அவை பற்றிய விளக்கக் குறிப்பை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். அவசர காலத்தில் அது மிக்க பயனளிக்கும்.
மருத்துவமனையில் இருந்தாலும், நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மருந்து மாத்திரைகளைத் தொடர வேண்டும். (உங்களால் முடியாத நிலை ஏற்பட்டால், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியை நாடலாம்.) செவிலியர் கொடுக்கும் மருந்து எப்போதும் சரியாகவே இருக்கும் என்று நம்ப வேண்டாம். ஏனெனில், அவர்களும் மனிதர்கள்தானே! மருத்துவர் அளிக்கும் மருந்துகள் எதற்காக என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒவ்வொரு முறை மருந்து மாத்திரை கொடுக்க செவிலியர் வரும்போதும், அவரிடம் அந்த மருந்தின் பெயர் என்ன?எதற்காக? என்று கேளுங்கள்.
மருந்து மாத்திரைகளை முடிந்த வரை விரைவில் விட்டு விலகி வாழ பழக வேண்டும்.

