
மழைக்காலம் தொடங்கிவிட்டது. கண்களில் தொற்று பாதிப்பு ஏற்படலாம். இதுகுறித்து சென்னை டி.டி.கே சாலையில் உள்ள மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் குழந்தை கண் மருத்துவ நிபுணர், மாறுகண் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீகாந்த் ராமசுப்பிரமணியன் கூறுகையில்…
சென்னையில், ஈரப்பதம் மிகுந்த வெளிப்புற பகுதிகளிலும், குளிர்சாதன வசதி கொண்ட அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வாகனங்களுக்கும் இடையே அடிக்கடி மாறி மாறிச் செல்வது,கண் வறட்சி மற்றும் ஒவ்வாமை அறிகுறிகளைத் தீவிரப்படுத்துகிறது. இதன் விளைவாக ‘மெட்ராஸ் ஐ போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். வைரஸ் தொற்றைப் போல் அல்லாமல், ஒவ்வாமையால் ஏற்படும் கண் அழற்சி பிறருக்குப் பரவாது.
ஆனால் இது தீவிரமான அரிப்புடன் இரண்டு கண்களையும் பாதிக்கக்கூடும். இந்த அறிகுறிகளின் ஒற்றுமை காரணமாக, பலர் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல் அவர்களாக மருந்து உட்கொள்ளும் தவறான முடிவை எடுக்கின்றனர். வீட்டில் மீதமுள்ள சொட்டு மருந்துகள் அல்லது மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாத ‘ஸ்டீராய்டு’ கண் சொட்டு மருந்துகளைப் பயன் படுத்துவதை மக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கண் சிவந்துப் போதல் நீடித்தாலோ, பார்வையைப் பாதித்தாலோ அல்லது பருவமழைக் காலத்தில் அடிக்கடி மீண்டும் ஏற்பட்டாலோ உடனடியாக கண் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்,” என்றார்.
பருவமழைக்காலம் கண் தொற்று அபாயத்தை அதிகரிப்பது ஏன்?
மழைநீர் மட்டுமே நேரடியாக கண் தொற்றை ஏற்படுத்துவது இல்லை.காற்றில் உள்ள தூசிகள், நச்சுக்கள், நுண்ணுயிரிகள் மற்றும் கழிவுநீர்க் கசிவுகள் மழைநீரில் கலப்பதாலும், ஈரமான நனைந்த பொது இடங்களில் பயன்படுத்திய நம் கைகளால் கண்களைத் தொடுவதாலும் தேய்ப்பதாலும்தான் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீர்ச் சாலைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலான பொது இடங்கள் ஆகியவை கைகள் மூலம் கண்களுக்குத் தொற்று பரவும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. வைரஸ் மற்றும் பாக்டீரியா கண் அழற்சியானது நேரடித் தொடர்பு, அசுத்தமான கைகள் மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களின் மூலம் மிக வேகமாகப் பரவக்கூடியவை.
கண்கள் சிவந்து போதல், நீர் வடிதல், கண்களில் உறுத்தல்,கண் பீளை அல்லது திரவம் வடிதல், கண் இமைகள் வீங்குதல் மற்றும் காலையில் எழும்போது கண் இமை முடிகள் ஒட்டிக்கொள்ளுதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும் இந்த அறிகுறிகளை மட்டுமே வைத்து இது வைரஸா, பாக்டீரியாவா அல்லது ஒவ்வாமையா என்பதை மக்கள் தாங்களாகவே கண்டறிவது கடினம்.எனவே மருத்துவரை ஆலோசிக்காமல் அவர்களாகவே சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதே இதற்கு மிகச் சிறந்த தீர்வாகும்
*கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்; கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
*துண்டுகள், அழகுசாதனப் பொருட்கள், தலையணைகள் அல்லது கண் சொட்டு மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
*மழை அல்லது சாலையோர நீர் கண்களில் பட்டால், முகத்தைச் சுத்தமான நீரால் மென்மையாகக் கழுவி,புதிய சுத்தமான துண்டால் துடைக்க வேண்டும்.
*வீட்டில் அல்லது அலுவலகத்தில் யாருக்காவது மெட்ராஸ் ஐ, பிங்க் ஐ ஏற்பட்டால், போன்கள், கீபோர்டுகள், கதவுக் கைப்பிடிகள் போன்ற அடிக்கடி தொடும் இடங்களைத் தவறாமல் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
*கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். லென்ஸ்களை ஒருபோதும் குழாய் நீரிலோ அல்லது மழைநீரிலோ கழுவவோ, வைக்கவோ கூடாது.சிவப்பாக தோற்றமளித்தாலோ,வலி அல்லது நீர் வடிதல் ஏற்பட்டால் லென்ஸ் அணிவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
*குளிர்ந்த ஒத்தடம் கொடுப்பதும், தண்ணீர் போன்ற லூப்ரிகன்ட் சொட்டு மருந்துகளும் சில நேரங்களில் கண் உறுத்தலைக் குறைக்கலாம்; ஆனால் மருத்துவ ஆலோசனையின்றி ஆன்டிபயாடிக் கண் மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.

