
உடல்நல பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்கிற நிலை ஏற்படுகிறபோது, குறிப்பிட்ட நேரத்துக்குள் சிகிச்சை வழங்கி விட்டால் மோசமான பாதிப்புகள் ஏற்படாமல் காப்பாற்றி விட முடியும்.சிகிச்சை வழங்குவதற்கான அந்த நேரம்தான் “பொன்னான நேரம்” (கோல்டன் அவர்) என்று சொல்லப்படுகிறது.
ஆம்புலன்ஸ் வசதியை எதிர்பார்க்கும் போது… போக்குவரத்து நெரிசலால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
பொன்னான நேரத்தில் சிகிச்சையை ஆரம்பிக்க இரண்டு சக்கர வாகன ஆம்புலன்ஸ் வசதியை காவேரி மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்துறை (போக்குவரத்து – தெற்கு) இணை ஆணையர் திரு.பி. பகலவன்,இ.கா.ப., தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
போக்குவரத்து விதிகளை முறையாக அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் காவேரி மருத்துவமனை குழுமத்தின் சென்னை வலையமைப்பில் உள்ள ஆழ்வார்பேட்டை, வடபழனி,ரேடியல் சாலை மற்றும் மா காவேரி ஆகிய கிளைகளை உள்ளடக்கிய 10 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அல்லது குறுகிய சாலைகள் காரணமாக பெரிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதில் தாமதம் ஏற்படலாம் என்ற சூழலைக் கருத்தில் கொண்டு, உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்குவதற்காகவே இந்த இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் கட்டமைப்பு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கானவை அல்ல.மாறாக, நோயாளிகளுக்குத் தேவையான மேல்சிகிச்சை மற்றும் அவர்களை மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் வரும் வரை, அவர்களுக்கு அத்தியவசிய முதலுதவிகளை வழங்கி உயிரைக் காப்பாற்றுவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை எடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு ‘ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்’ வாகனத்திலும் ஆட்டோமேட்டட் எக்ஸ்டர்னல் டிஃபிப்ரில்லேட்டர் (AED),ஆக்சிஜன் வசதி மற்றும் அவசரகால மருத்துவ உபகரணத் தொகுப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
உதாரணமாக, மாரடைப்பு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு, AED கருவி மூலம் அவர்களின் இதயத் துடிப்பை ஆராய்ந்து, தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக மின் அதிர்வு சிகிச்சையை அளிக்க முடியும். மருத்துவரீதியாக அவசியப்படும்போது நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்தும் வசதியும் இதில் இருக்கிறது. மேலும்,இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள அவசரகால மருத்துவ உபகரணத் தொகுப்பு, நோயாளியை உடனடியாகப் பரிசோதிக்கவும், மருத்துவ நெறிமுறைகளின்படி தகுந்த முதலுதவி சிகிச்சை அளிக்கவும் மருத்துவப் பணியாளருக்கு உதவுகிறது.
‘ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்’ என அழைக்கப்படும் இந்த மருத்துவப் பணியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால சிகிச்சை கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே செயல்படுகின்றனர்.5ஜி தொழில்நுட்ப இணைப்பு, வெப்கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ்/லைவ் டிராக்கிங் வசதிகளுடன் இருப்பதால்,சம்பவ இடத்திலிருந்தபடியே மருத்துவமனை குழுவுடன் அப்பணியாளர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியும்.நோயாளி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துவரும்போது,நிகழ்நேர ஒருங்கிணைப்பைச் சாத்தியப்படுத்தவும்,தொடர் சிகிச்சையை எவ்விதத் தாமதமுமின்றி வழங்கவும் இது பெரிதும் உதவும். அவசர சிகிச்சைக்கு 044-40006000 என்ற எண்ணில் மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம்.
இந்த அறிமுக விழாவில் காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் பேசுகையில், “மருத்துவ அவசரநிலை உருவாகும் காலத்தில், நோயாளியை விரைவாக சென்றடைவதுதான் முதல் சவால். சென்னை போன்ற நகரங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல் இந்தச் சவாலை மேலும் கடினமாக்குகிறது. இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, எங்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதோ,அங்கு அதை உடனடியாகக் கொண்டு சேர்க்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க நாங்கள் விரும்பினோம். ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் அடுத்த கட்ட சிகிச்சையை ஒருங்கிணைக்கும் அதே நேரத்தில், சம்பவ இடத்திலேயே தகுந்த சிகிச்சை தொடங்குவதை உறுதி செய்யும் விதமாகப் பயிற்சி பெற்ற மருத்துவ மீட்பாளர்களையும் அத்தியாவசிய உபகரணங்களையும் சாலைகளில் களமிறக்கவே ‘காவேரி ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது ஆம்புலன்ஸ் சேவைக்கு மாற்று அல்ல; ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், முதலுதவி பெறுவதற்காகவும் நோயாளிகள் காத்திருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்,” என்று கூறினார்.
உயிர் காக்கும் உயர்ந்த பணிகளில் ஈடுபட்டு உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துகள்.
-ஷைலஜா, Health and beauty.

