
இதய வால்வு கசிவு நோயால் பாதிக்கப்பட்ட அறுபத்தி மூன்று வயது முதியவருக்கு
டாவர் எனப்படும் குறைந்த அளவு ஊடுருவல் சிகிச்சை முறையில் அதிநவீன ஹேங்கர் (HANCHOR) செயற்கை வால்வை பொருத்தி சிகிச்சை அளித்துள்ளது ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை.
நோயாளியின் ஏஆர்டிக் வால்வு இதழில் ஏற்பட்ட துளையே அவரது வால்வு கசிவிற்கு காரணம்.அவருக்கு ஏற்கனவே மிட்ரல் வால்வு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பின்னணி கொண்ட ஒரு நோயாளிக்கு டாவர் சிகிச்சையில் ஹேங்கர் வால்வு பொருத்தப்பட்டுள்ளது அரிதான ஒன்றாகும்.
இதயத்திலிருந்து உடலுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் முக்கிய தமனியான ஏஆர்ட்டாவிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது ஏஆர்டிக் வால்வின் பணியாகும்.இந்த வால்வு சரியாக மூடாதபோது, இரத்தம் மீண்டும் இதயத்திற்குள் பின்னோக்கிப் பாயும்.இதுவே ஏஆர்டிக் வால்வு கசிவு எனப்படும். இந்த முதியவருக்கு கசிவு மிகக் கடுமையாக இருந்தது.
இந்த நோயாளிகளுக்கு பொருத்தப்படும் வால்வைத் தாங்குவதற்குப் போதிய கால்சியப் படிவுகள் இல்லாமல் இருந்தது.இதனால் புதிய வால்வைச் சரியான இடத்தில் நிலைநிறுத்தி உறுதியாகப் பொருத்தும் வாய்ப்பு குறைவாக இருந்தது.
இதனால் மருத்துவக்குழு ஹேங்கர் என்னும் வால்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தது.இது போதிய கால்சியப் படிவுகள் இல்லாத ஏஆர்டிக் வால்வில் உறுதியாகப் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.இது பலூன் மூலம் விரிவடையும் கட்டமைப்புடன், ‘நைட்டினாய்ல்’ எனும் நெகிழ்வுத்தன்மை கொண்ட உலோகக் கலவையால் ஆன சிறப்பு நங்கூரம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த நங்கூர அமைப்பு,வால்வு இதழ்களுடன் பிணைந்து புதிய வால்வை நிலைநிறுத்த உதவுகிறது.
டாவர் சிகிச்சையின் போது,இந்த மாற்று வால்வு கதீட்டர் குழாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு நோயாளியின் ஏஆர்டிக் வால்வுக்குள் பொருத்தப்பட்டது. இந்த ஊடுருவல் குறைந்த சிகிச்சை முறையின் மூலம் மருத்துவர்கள் வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சை இல்லாமல் குறைபாடுள்ள வால்வை மாற்றினர்.
மூத்த இதய நிபுணர் டாக்டர் ராஜாராம் அனந்தராமன் கூறுகையில்… “நோயாளிக்கு ஏற்கனவே செயற்கை மிட்ரல் வால்வு பொருத்தப்பட்டிருந்ததால் அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்வது சவாலான காரியமாக இருந்தது.மேலும் அவரது பாதிக்கப்பட்ட வால்வில் கால்சியப் படிவுகள் குறைவாக இருந்தது. ஆனாலும், ஹேங்கர் வால்வு தொழில்நுட்பம் கை கொடுத்தது. அதன் சிறப்பு நங்கூர அமைப்பு வால்வை சரியான இடத்தில் நிலைநிறுத்த உதவியது. சிகிச்சைக்குப் பிறகு வால்வில் எந்தவொரு கசிவும் காணப்படவில்லை. சிக்கலான இதய அமைப்புக் குறைபாடுகளைக் கையாள தனிப்பட்ட சிகிச்சைத் திட்டமிடலும்,நவீன வால்வு தொழில்நுட்பமும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சிகிச்சை நிரூபித்துள்ளது”
என்றார்.
இதய நோயாளிகள் இந்த செய்தியை பார்த்து நம்பிக்கை பெறுவார்கள்.
மருத்துவ அறிவியல் வளர்ச்சி மகிழ்ச்சி தருகிறது.
நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.
-பவித்ரன், ஹெல்த் அண்ட் பியூட்டி.

