ஆயுள் வளர்க்கும் ஆரோக்கியமான தாம்பத்யம்

– டாக்டர் டி.காமராஜ், பாலியல் நிபுணர்
WORLD SEXUAL HEALTH DAY – SEPTEMBER 04
நமது நாட்டில் தாம்பத்யம், செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும், வெளிப்படையாக பேச முடியாததாகவும் இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். சமீப காலமாக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் இன்னும் சென்றடைய வேண்டிய தூரம் அதிகமாகவே உள்ளது.
உலக அளவில் சர்வதேச பாலியல் நல தினம் செப்டம்பர் & 4ம் தேதி கொண்டாடடப்படுகிறது. தம்பதியரின் நலம் காண தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன்.

உடல், உள்ளம் இரண்டும் ஒன்றிணையும் அனுபவமே இனிய ஆரோக்கியமான தாம்பத்யம். இதில் இருவருமே கொடுப்பவர், கொள்பவர்தான். சில நிமிடங்கள் நீடிக்கும் உடலுறவு மட்டுமே தாம்பத்யம் அல்ல. வாழும் காலம் வரை இருவரைப் பிணைத்து வைக்கும் இன்பச் சங்கிலி அது.
செக்ஸ் இன்பமானது பெண்களுக்கு தர வேண்டியது என இந்திய ஆண்கள் நம்புகின்றனர். அது உண்மையில்லை. செக்ஸ் என்பது இருவர் செயல். ஆணைப் போலவே பெண்ணுக்கு அதில் தனிப்பட்ட விருப்பங்களும் கற்பனைகளும் இருக்கும். நிறைய பெண்கள் கணவருடன் கட்டுப்பாடான செக்ஸைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர். தன் விருப்பத்தை வெளிப்படுத்தினால் தவறானவளாக கருதப்படுவோமே என்ற அச்சத்தால் பல பெண்கள் அசையாத நிலையிலேயே செக்ஸை பெற்றுக் கொள்கின்றனர். ஆண்களும் தங்களை இன்பம் கொடுப்பவர்களாக கருதிக் கொண்டு சில நிமிடச் செயலாக உடலுறவை ஆக்கிக் கொள்கின்றனர். இது தவறு. இரண்டு உடல்கள் முழுவீச்சில் இயங்குவதே ஆரோக்கியமான செக்ஸ்.
செக்ஸ் என்பது அந்த நேரச் செயல்பாடு அல்ல. உங்கள் குணங்கள் பண்புகள், பழக்க வழக்கங்கள், அன்றாட நிகழ்வுகள் இதெல்லாம்தான் செக்ஸை முடிவு செய்கிறது. சில தம்பதியர், நாள் முழுவதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், இரவானால் செக்ஸ் வேண்டும் என்று நினைப்பார்கள். உங்கள் துணை என்பவர் செக்ஸ் பொம்மை அல்ல; நினைத்த போதெல்லாம் நீங்கள் ‘ஸ்விட்ச் ஆன்’ செய்வதற்கும் ‘ஸ்விட்ச் ஆப்’ செய்வதற்கும். உங்கள் மணவாழ்க்கை நறுமணம் பெற வேண்டுமானால், நீங்கள் எல்லா நாட்களும் அதற்கு உழைக்க வேண்டும். அதாவது ஃபோர் ப்ளே என்று சொல்லப்படும் முன் விளையாட்டில் ஈடுபட வேண்டும். திடீரென கட்டியணைப்பது, திடீரென முத்தமிடுவது, எதிர்பாராத தருணத்தில் ‘ஐ லவ் யூ’ சொல்வது, துணையின் மடியில் தலை சாய்த்து பொழுது போக்குவது என ஒவ்வொன்றையும் ரசித்து செய்ய வேண்டும்.
எப்போதும் சிரித்த முகத்துடன் குதூகலமாக விளையாட்டுத் தனத்துடன் இருப்பவர்களின் செக்ஸ் வாழ்க்கை வெற்றிகரமானதாக இருக்கும். தாம்பத்ய உறவுக்கும் திட்டமிடல் வேண்டும். இயந்திரத்தனமாக செய்ததையே செய்யும் போது உடலுறவில் சலிப்பும் நாட்டமின்மையும் உண்டாகலாம். அதை தவிர்க்க, உடலுறவை ஒரு வேலையாகக் கருதாமல் விரும்பி விளையாடும் இன்ப விளையாட்டாக மாற்றுங்கள். உடலுறவில் நீங்கள் இருவரும் செய்யும் சிறு தவறுகள், சறுக்கல்கள், இயலாமைகளை இருவரும் கிண்டலடித்து, கேலி செய்து ரசியுங்கள். கட்டிலில் இருந்து தரைக்கு உங்கள் களத்தை திருப்புங்கள். இப்படி ஒவ்வொரு கணத்தையும் ரசித்து செய்தால் உடலின்பம் மட்டுமின்றி, உங்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கமும் அதிகரிக்கும்.
இரவு படுக்கைக்கு செல்லும் முன் குளித்து, பல் துலக்கி, புதிய உடைகளை உடுத்தி, இயற்கை நறுமணப் பொருள்களைப் பூசிக் கொள்ளும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது. இந்தப் புத்துணர்ச்சி இருந்தால் உடல்கள் தானாகவே உறவில் லயிக்கும். சிகரெட், மது, புகையிலை, பாக்கு போன்றவற்றை பயன்படுத்தி துர்நாற்றத்துடன் இருந்தால், செக்சுக்கு அது மிகப்பெரிய தடை. அழகு என்பது ஒப்பனையால் வருவதல்ல.. சுத்தத்தால் வருவது. இந்த சுத்தம் மகிழ்ச்சியான தாம்பத்யத்திற்கு மிகவும் முக்கியம்.
எந்த நேரமும் வேலையே கதியென்று கிடப்போர் வீட்டுக்கு வருவதே சாப்பிடவும் தூங்கவும்தான். முடிந்தால் உடலுறவு கொள்ளவும். நேரம் காலம் இல்லாத பணிச்சூழல், மாத, ஆண்டு இலக்குகள் போன்றவற்றால் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகலாம். கண்டதை தின்னும் உணவுப் பழக்கம், இத்துடன் மதுப்பழக்கமும் சேர்ந்து கொண்டால் இவர்களின் உடல் நோய்களின் கூடாரமாகி விடுகிறது. 40 வயதுக்குள்ளேயே உடல் பருமனுடன், ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் இன்ன பிறவும் சேர்ந்து கொள்கின்றன. ஆகவே, இன்பமான தாம்பத்ய வாழ்க்கைக்கு நல்ல உடல் நலம் தேவை. அதற்கு சிறந்த வாழ்க்கைமுறை அவசியம்.
உடல் ஆரோக்கியத்தின் அளவைக் காட்டும் அற்புதமான அளவுகோல் ஆணுறுப்பு. அது சரியாக செயல்பட்டால் எல்லாமே சரியாக செயல்படும். அது சரியாக இல்லையென்றால் உடலில் பிரச்னை இருக்கிறது என்று பொருள். ஆணுறுப்பு முழுமையான விறைப்புத் தன்மையுடன் உடலுறவில் ஈடுபட மூளை, ஹார்மோன்கள், உணர்வுகள், தசைகள், நரம்புகள், ரத்தக் குழாய்கள் போன்றவை ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் முடியும். ஆனால், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் உடல்நலம் கெட்டுப்போகும்போது அல்லது உடல் பருமனாகி விடும்போதும் இந்த ஒருங்கிணைவு பாதிக்கப்பட்டு ஆணுறுப்பின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
சர்வரோக நிவாரணி
மகிழ்ச்சியற்ற தம்பதியரைவிட, தாம்பத்ய வாழ்வில் மகிழ்ச்சியோடு இருக்கும், உச்சநிலையை அனுபவிக்கும் தம்பதியர் நீண்டகாலம் வாழ்வதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோபம், கவலை, தவறான உணவுப் பழக்கம், குடி மற்றும் போதைப் பழக்கங்கள், மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் ஆயுளையும் குறைக்கின்றன. உடலுறவில் உச்சநிலையை அடையும்போது, ‘Dhydroepiandrosterone’ என்ற ஹார்மோன் சுரக்கிறது.
இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், பழுதான திசுக்களை சீர்செய்கிறது. மனச்சோர்வையும் போக்குகிறது. சீரான உடலுறவில் ஈடுபடும் பெண்களின் பெண்ணுறுப்பு வலுப்படுவதுடன், அதன் நெகிழ்வுத் தன்மையும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. தாம்பத்ய வாழ்க்கையை சீராகப் பராமரிப்பதன் மூலம் பல்வேறு நனம்மைகள் உடலுக்கு ஏற்படுவதுடன், உங்கள் ஆயுளும் கூடும் என்கிறது நவீன மருத்துவ அறிவியல். நீங்கள் இளமையாகவும் தோன்றுவீர்கள்.
தாம்பத்ய வாழ்வில் மகிழ்ச்சியற்ற தம்பதிகள், மகிழச்சியுடன் இருக்கும் தம்பதியரைவிட தீவிர மனச்சோர்வுக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருமண வாழ்க்கையின் முதல் ஐந்தாண்டுகள் சோதனையானவை. ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்ப வாழ்வை நிலைப்படுத்துவதுவரை சவால்களை எதிர்கொள்ள மகிழ்ச்சியான தாம்பத்யம் அவசியம்.
வாரம் இருமுறை செக்ஸ் வைத்துக் கொள்வது ரத்தத்தில் உள்ள இம்யூனோகுளோபுலின் A(IGA) என்னும் எதிர் பொருளை அதிகரிப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது சாதாரண ஜலதோஷம் தொடங்கி தொற்று நோய்கள் வரை நம்மை அண்டாமல் காக்கிறது.

