
பள்ளிப்படிப்பு முடிந்தது, கல்லூரி, ஆராய்ச்சி என படித்துவிட்டு பணிக்குப் போன போதுகூட குடும்ப உறுப்பினர்களிடம் பேசியது இல்லை. பெற்றோரிடமும் அன்போடு அளவளாவியது இல்லை. எல்லாம் நண்பர்கள்தான். குடும்பத்தினருடன் பழகும் வாய்ப்புகளே இல்லாமல் போனது. வேலையிலும் பேராசிரியர்களோடு கலந்து உரையாடுவது, பின்பு பத்திரிகைகளுக்கு எழுதுவது என காலம் கரைந்து போனது. இப்போது எழுபதை நெருங்கும்போதுதான் பெற்றோரின் அருமை, அன்பு, அவர்களின் தியாகம் என உணர்ந்து கனவு காண்கிறேன். எப்படிப்பட்ட உறவுகளை இழந்து இருக்கிறோம் என்பதை எண்ணி வருந்துகிறேன்.
இப்போது வேலையிலிருந்து ஓய்வு, மனநல ஆலோசனை, கட்டுரைகளை எழுதுவது என காலத்தை செலவழித்தாலும், மனைவியோடும், மக்களோடும், அன்புடன் பேசி மகிழ வேண்டும் என நினைத்தாலும் பேத்தியோ, பேரன்களோ ஓதுங்கி ஓடி விடுகிறார்கள்.
என் கடந்த காலமே இப்போதும் நிகழ்காலத்தில் வேறு விதமாக பிரதிபலிக்கிறது. இது குடும்ப வாழ்க்கை இல்லை. என்னதான் படித்து பட்டங்கள் பெற்றிருந்தாலும் வாழ்க்கை பூரணத்துவம் பெற்றதாக இல்லை என்பதையே உணர்கிறேன்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை நலிந்து மறைந்து, தனிக்குடும்ப வாழ்க்கை முறையே இன்று பெரிதும் காணப்படுகிறது. அதிலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். கணவனையோ, மனைவியையோ இழந்தவர்களை கவனிக்க யாருமில்லை. அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். அவர்கள் வெறுமையை உணர்வதைக் காண்கிறேன்.
நான் முதுகலைப் பட்டம் பெற்று விடைபெறும் நாளன்று, எனது பேராசிரியர் கூறியது பசுமையாக நினைவில் நிற்கிறது. பட்டங்கள் பெறுவது முக்கியமில்லை. பாசமிக்க குடும்ப உறுப்பினர்களாக இருக்கவே கற்றுக் கொள்ள வேண்டும். குடும்பம் என்பது வெறும் நான்கு சுவர்களுக்குள் இல்லை. ஒவ்வொரு கல்லுக்குள்ளும் ஈரமாக பாசம் இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அன்போடு கலந்து உரையாடி ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். அன்பினை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுவே வாழ்க்கை என்றார். எத்தனை உண்மை என்பதை இப்போது உணர்கிறேன்.
குடும்ப உறவுகள் மிக முக்கியமானது. குடும்பம் ஒரு கோவிலாக இருக்க வேண்டுமே ஒழிய, ஒரு வணிக வளாகமாக இருக்கக் கூடாது.
அன்புடன்
ஜி.ராஜமோகன்

