
அன்பும், கருணையும் ஒருவருக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஈட்டித் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அவசரமான போட்டியிட்டுப் போரிடும் உலகில் அன்பும் கருணையும் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகின்றன. பெறுவோர் மட்டுமின்றி தருவோருக்கும் அவை மகிழ்ச்சியை அள்ளித் தருகின்றன.
தெரிந்தவரோ, தெரியாதவரோ யாராக இருப்பினும் அவரிடம் காட்டும் அன்பு, கருணை நமக்கு ஆனந்தமே. அது தவிர எதிர்பாராத விதத்தில், நேரத்தில் நமக்கு அவர்களில் ஒரு சிலர் உதவியும் புரியலாம். உறவுகளையும் வலுப்படுத்தும் திறன் வாய்ந்தவை அன்பும் கருணையும்.
மேலும் ஒருவரது மனச்சோர்வையும் அவை போக்குகின்றன. நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்துகின்றன. சிறப்பான மனநலத்தைப் பேண உதவுகின்றன. ஒருவரது அன்பிற்கும் அவரது உடல் நலம், மனநலம் மகிழ்ச்சி ஆகியவற்றிற்கும் நல்ல பொருத்தம் உண்டு.
ரத்த தானம் செய்பவர்கள், உடல் உறுப்புதானம் செய்பவர்கள் அத்தகைய உயரிய கொடைச் செயல்களை இயல்பாகவே செய்ய முன்வருகிறார்கள். சிறப்பான, பிறருக்கு மிகுந்த பயனளிக்கும் செயலைச் செய்கிறோம் என்ற எண்ணமே அவர்களை மகிழ்ச்சிக்குரியவர்களாக்குகிறது.
பரிவு அல்லது தண்டனை மூலம் ஒருவரை அன்பும் கருணையும் காட்டுமாறு வற்புறுத்த இயலாது. அன்பும் கருணையும் தானாக வருபவை. பிறர் நம்மிடம் காட்டும் அன்பும், கருணையும், நாம் மற்றவரிடம் காட்டத் தூண்டுகோலாக இருக்கும்.
நாம் செய்யும் பணியில் மகிழ்ச்சி பெற வேண்டுமானால் அதை பயனுள்ளதாக நாம் கருத வேண்டும் என்பது மட்டுமின்றி அதற்கு தேவையான ஆற்றலும் நமது ஆற்றலும் பொருந்தி வரவேண்டும். மேலும், முரண்பட்ட நோக்கங்களும், இலக்குகளும் மகிழ்ச்சியை அளிக்கா. குழப்பத்தையே விளைவிக்கும். மகிழ்ச்சியுடைய மனிதர்களிடையே உடல் நலம், ஆக்கத்திறன், செயலாற்றல், உதவும் பண்பு ஆகியவை இடம் பெறக்காணலாம்.

