நிறுவனர் இ.வைத்தீஸ்வரன்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பூர்வீகம். அப்பா இளஞ்சேரன், தாயார், உடன்பிறப்புகள் 4 சகோதரிகள். மகன் நான் ஒருவனே. விவசாயம் தொழில். என் மூத்த சகோதரி பிசியோதெரபி படித்தார். எனக்கும் மருத்துவ படிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. ஆகவே பள்ளி இறுதி படிப்புக்குப் பிறகு, குமாரபாளையம் ஜேகேகேஎம்எம்ஆர்எஃப் மருத்துவ கல்லூரியில் இளநிலை பீடியாடிரிக்ஸ் தெரபி நாலரை ஆண்டுகளும், மேலும் முதுநிலை பீடியாடிரிக்ஸ் 2 ஆண்டுகளும் படித்து உரிமம் பெற்றேன். (உரிமம் எண் 692/2016)

அந்த நேரத்தில் நிறைய மருத்துவ நூல்களும், செய்திகளும் படிக்க நேர்ந்தது. அரிது… அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் கூன், குருடு, செவிடு என பேடு நீங்கி பிறத்தல் அரிது – என்பது அவ்வையார் வாக்கு. குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய செய்திகளும், தகவல்களும் என்னை ஈர்க்கவே, குழந்தைகள் மருத்துவ நலனுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. வழிகாட்டி சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையத்தை 2015ம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் துவக்கினேன்.

முதன்முதலில் மூன்றரை வயது ஆண் குழந்தை என் பொறுப்பில் வந்தது. ஆட்டிசம் குழந்தை. படித்த படிப்பின் அடிப்படையில் பயிற்சி அளித்து படிப்படியாக குணமடைய செய்தேன். அவனின் பெற்றோர் மகிழ்ந்தனர். பின்னர் அவர்களே வழிகாட்டி மையத்தைப் பற்றி பிறருக்கு எடுத்துக்கூறி பிரபலமடையவும் செய்தார்கள்.

2021 – ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் வழிகாட்டி சிறப்பு குழந்தைகள் பயிற்சியில் உள்ளனர். ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளில் எங்கள் வழிகாட்டி மையத்தின் சேவையை அறிந்து பிற மாநிலத்தில் இருந்து வந்தோரை தங்க வைத்து பயிற்சி அளித்தோம்.

தற்போது நிலவி வரும் கரோனா சூழலால், பயிற்சிக்கு வந்து செல்வதற்கு ஏற்ப அட்டவணை அமைத்துள்ளோம். இந்த 5 ஆண்டுகள் சேவையில் எங்களின் வழிகாட்டி மையத்தின் மூலம் 90க்கும் அதிகமான சிறப்பு குழந்தைகள் பயனடைந்து அவரவர்களின் உடற்கூறு குறைகள் நீங்கி, சராசரி மனித நிலையை பெற்றனர் என்பதில் எங்களுக்கு பெருமை. இது ஒரு வழிகாட்டி மையத்தின் சாதனை என்றாலும் மிகையாகாது.

எங்கள் சேவையை அறிந்துள்ள, சுற்றுவட்டாரத்திலுள்ள மருத்துவமனை டாக்டர்கள் – அங்கே பிறக்கும் அல்லது குறைபாடு தெரியவரும் குழந்தைகளை வழிகாட்டி மையத்திற்கு பரிந்துரைக்கிறார்கள். சேவை நோக்கத்தை பிரதானமாக கொண்டிருந்தாலும், இந்த கரோனா காலக்கட்டத்தில் குறைந்த கட்டணம் பெற்று, உயர்தர பயிற்சிகள் அளிக்கிறோம். பிற இடங்களைவிட, உங்கள் மையத்தில் கட்டணம் குறைவுதான் எனச் சொல்லியே, பெற்றோர்கள் இங்கு தங்கள் மகனையோ, மகளையோ சேர்க்கிறார்கள்.

ஏறக்குறைய 30 வகை குறைபாடுகளில் ஏதேனும் ஒன்றின் பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைக்கு இதுதான் குறைபாடு என திட்டவட்டமாக அறிவித்து வழிகாட்டி மையத்திற்கு டாக்டர்கள் அனுப்பினாலும், நாங்களும் நேரில் கண்டறிந்து உறுதி செய்த பின்னரே குழந்தைக்குரிய பயிற்சியை அளிப்பதோடு, அதனைத் தொடர்ந்து பின்பற்றி, குழந்தை உடல்உறுப்பு இயக்க நிலையில் முன்னேற்றம் காண வழிகாட்டி பயிற்றுவிப்பதால், ‘வழிகாட்டி’ என பெயரிடப்பட்டது.

மூன்றரை வயது முதல் 14 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகளை பயிற்சி பெற சேர்த்துக் கொள்கிறோம். வழிகாட்டி மையம் தனியார் அமைப்பு. விரைவில் இதற்கென ஒரு பள்ளியும் ஆரம்பிக்க முயற்சி. பெற்றோர்கள், மருத்துவசேவை ஆர்வலர்களின் ஒத்துழைப்பும், நிதி உதவியும் வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறோம்.

19/7, தெற்கு தெரு, ஸ்டேஷன் ரோடு, (ஏஜி மருத்துவமனை அருகில்)
ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை – 600 044 –

Ph: 95852 53977