-டாக்டர்.வி.விக்ரம்குமார்,எம்.டி.

சித்த மருத்துவம்.

மம் தோற்றத்தில் சிறிய பிறை வடிவ விதைகள்; உருவத்தில் சிறியது… நமது உடலை காப்பதில் பெரியது. நமது அஞ்சறைப் பெட்டியை கமகமக்க செய்யும் மற்றொரு நல புதையல் ஆகும்.

உமிழ் நீரை பெருக்கி, செரிமான சிறப்புகளை அதிகரித்து, பசியை முறைப்படுத்தி,உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

*சளியை வெளியேற்ற, சிறிது ஓமத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து தேன் சேர்த்துப் பருகலாம்.

*ஒரு டீஸ்பூன் ஓமத்தைப் பொடியாக்கி, துணியில் கட்டி அவ்வப்போது முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு விலகும்.

*தொண்டைப்புண், குரல்கம்மல் போன்ற காரணங்களுக்காக வாயைக் கொப்பளிக்கும்போது, உப்புடன் சிறிது ஓமம் சேர்த்துக்கொண்டால் விரைவில் பலன்கள் கிடைக்கும். இந்த ‘ஓம மவுத் வாஷை’ப் பயன்படுத்த வாய்நாற்றம் மறைந்து வாய் மணக்கும்.

*வயிறு மந்தமாக இருக்கும்போது, ஓமத்துடன் தோல் சீவிய சுக்கு சம அளவு சேர்த்து இரண்டும் சேர்ந்த அளவுக்குக் கடுக்காய்ப் பொடி சேர்க்க வேண்டும். அதை மூன்று விரல் அளவு மோரில் கலந்து குடித்தால் படிப்படியாக உப்புசம் குறைவதை உணரலாம்.

*உணவு எதுக்களிப்பதால் உண்டாகும் நெஞ்செரிச்சலைக் குறைக்க, மோருடன் ஓமம், பெருங்காயம், இஞ்சித் துண்டுகள் சேர்த்துப் பருகலாம். •

*சிறிது ஓமத்தை வெற்றிலைக்குள் வைத்து மென்று காப்பிட வாய்வுக் கோளாறுகள் மறையும். 

*பசி உணர்வை அதிகரிக்க, அரை டீஸ்பூன் ஓமத்தை நீர்விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, சிட்டிகை அளவு இந்துப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

*குழந்தைகளின் வயிற்று வலியைக் குறைக்க ஓமத்தை எண்ணெயில் வதக்கி, வயிற்றின்மீது பற்று போடலாம்.

*வாய்வுப்பிரச்னை இருக்கும்போது, ஓமத்தை வெற்றிலையில் வைத்துக் கசக்கி, அடிவயிற்றுப் பகுதியில் பற்று போடலாம். 

*ஓமத்திலிருக்கும் ‘தைமால்’, சளிப்படலத்தால் சுருங்கியிருக்கும் நுரையீரல் பாதையை விரிவடையச் செய்து சுவாசத்தை எளிமையாக்கும்.

*ஓமம் மற்றும் சுக்கு சம அளவு எடுத்துக்கொண்டு, அவை மூழ்குமளவு எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, வெயிலில் உலரச் செய்ய வேண்டும். பிறகு இஞ்சிச் சாறு ஊற்றி மீண்டும் உலரச்செய்து, பொடியாக்கிக்கொள்ளவும். இதில் 1-2 கிராம் அளவு எடுத்து, மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க அஜீரணத் தொந்தரவுகள் தலைதூக்காது. 

* தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக் குளித்தால் சளி,இருமல் அதிகரித்துவிடும் என்று பயம்கொண்டவர்கள் பொடித்த ஓமம், மிளகை உச்சந்தலையில் தேய்த்த பிறகு எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளலாம்.

*மீன் உணவுகளைச் சமைக்கும்போது உண்டாகும் நாற்றத்தைப் போக்கும் திறன், ஒத்தஓமத்துக்கு மட்டுமே உண்டு என்ற நம்பிக்கை ஒருகாலத்தில் வட இந்தியாவில் இருந்திருக்கிறது. ஓமத்தைப் பொடியாக்கி வெண்ணெயில் நன்றாகக் கலந்து காய்களின் மீது தடவிச் சமைத்தால் அவற்றின் சுவை அதிகரிக்கும்.

*சமையல் கூட்டணியில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் மற்றும் ஓமம் இணைபிரியாத நண்பர்கள். ஓமத்தைச் சமையலில் அதிகளவில் சேர்த்தாலும், நன்றாகக் கரைந்து தனது மருத்துவக் குணத்தை மட்டுமே வெளிப்படுத்தும்.

*மணக்கும் சமையலின் மூலம் பிறர் மனம் கவர, ஓமம் எனும் மணம்மிக்க பொருளின் உதவியை நாடலாம். சமைத்து முடித்த உணவுகளின்மீது ஓமத்தைத் தூவிப் பரிமாறுவதும் ஒரு சமையல் நுணுக்கமே.

  • மங்கிய காபி நிறத்தில் வாசனையுடன் இருக்கும் ஓமம்தான் தரமானது. ஓமத்தை வாங்கும்போது, வேறு ஏதேனும் திப்பிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்காணிப்பதும் அவசியம்.
  • ஓமம்… செரிமான உறுப்புகளின் பாதுகாவலனாக விளங்குகிறது.உடல் நலம் பேண ஓமத்தை பயன்படுத்தி பயன் அடையலாம்.எல்லோர் வீட்டிலும் தவறாமல் ஓமம் இருக்க வேண்டும்.