From Left to Right : Photographer Mr.Praveenkumar, Tamil Trekker Buvaneetharan and
Health and Beauty Publisher P.Gunasekaran

கிணற்றுத் தவளையாக  குறுகிய வட்டத்திற்குள் பலரது வாழ்க்கை  முடிந்துவிடுகிறது! எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்களை பார்த்து புன்னகை புரியுங்கள், உங்களை விட அழகானவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை…! என்று தனது வாழ்க்கையை உலகம் சுற்றும் வாலிபனாக மாற்றிக்கொண்டவர்.உலகத்தில் யாரையும் பார்ப்பேன், புன்னகையோடு பேசுவேன்…என்று புறப்பட்டவர் புவனிதரன்.

தமிழ் ட்ரக்கர் யு டியூப் சேனல் மூலம் உலகம் கொண்டாடும் உற்சாக இளைஞன்.

சீனா,ஜப்பான் பயணத்திற்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தவரை  சென்னையில் சந்தித்து பேசினோம்.

அவரது போட்டியிலிருந்து…

எனது சொந்த ஊர் தஞ்சாவூர்.9 ம் வகுப்பு வரை படித்தேன். மோட்டார் பைக்கில் ஊர் சுற்றுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. நினைத்த நேரத்தில் பைக் எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவேன். ஒரு நாள் திடீரென்று பைக் காணாமல் போய்விட்டது. அதன்பிறகு என்ன செய்வது என்று தவித்துப் போனேன்.

சிறிய தொகையை வைத்துக்கொண்டு இந்தியாவை சுற்றிப்பார்க்க புறப்பட்டேன்.லாரி,பைக் என்று எதிலாவது லிஃப்ட் கேட்டு எனது பயணத்தை முடித்தேன்.

எனது பயண அனுபவங்களை தமிழ் ட்ரக்கர் யூடியுப் சேனல் மூலம் வெளியிட்டேன்.மக்கள் பேராதரவு தந்தனர்.

டிராவலர், ட்ரக்கர் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது, டிராவலர் என்பவர் சுற்றுலா இடங்களை பார்ப்பதற்காக திட்டமிட்டு பயணம் செய்வார்.உணவு விடுதிகளில் தங்குவார். குறிப்பிட்ட தேதியில் திரும்பி வந்து விடுவார். என்னை போன்ற ட்ரக்கர் என்பவர் திட்டமிட்டு பயணம் செய்வதில்லை. சுற்றுலா இங்களை மட்டும் பார்ப்பது நோக்கமில்லை.

பெரிய அளவுக்கு எந்த திட்டமிடலும் இல்லாமல் தான் வெளிநாடுகளுக்கு போகிறேன்.ஒரு நாட்டிற்கு போனவுடன் தான் அங்கு எனக்கு பொருத்தமான வழிகாட்டியை கண்டுபிடிப்பேன்.அதன்பிறகு எனது பயணத்தை தொடங்குவேன்.

முதலில் சுற்றுலாவுக்கு பேர் போன இடங்களை பார்ப்பதில்லை.அந்த நாட்டில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்ன மாதிரி தொழில் செய்கிறார்கள்? அவர்களுடைய வாழ்வாதாரம் என்ன? அங்கு உள்ள இயற்கையின் அழகு என்ன?என்பதை ஆராய்ந்து பார்க்க ஆசைப்படுவேன்.

மக்களோடு மக்களாக பழகி உரையாடுவேன். அவர்கள் வீட்டிலேயே தங்குவேன்.

உலக மக்களோடு பேசுவதற்கு மொழி ஒரு தடை இல்லை.பல நாடுகளில் ஆங்கிலம் பேசுகிறார்கள். சில நாடுகளில் வழிகாட்டிகளை பயன்படுத்திக் கொள்வேன்.தற்போது கூகுள் மொழிபெயர்ப்பு வசதி கை கொடுக்கிறது.

அன்புதான் முதல் மொழி. நான் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்து மறைய விரும்பவில்லை. இதுவரை 26 நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். அடுத்து சீனா,ஜப்பான் நாடுகளுக்கும் போகிறேன்.

மனிதர்களை பார்க்கிறேன்; நேசிக்கிறேன் ;அவர்களது ஒவ்வொரு அசைவுகளையும் உற்று கவனிக்கிறேன்.

பயணம் செய்வதால் எனது மனம் விசாலமாக மாறிவிட்டது.கோபம் துளியும் வருவதில்லை.மனத்தடை நீங்கியது.யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேசுவேன். இனிய முகத்துடன் உரையாடுவேன்.எல்லா நாட்டு மக்களும் என்னோடு பேசுகிறார்கள்;உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள்.

எனது முதல் வெளிநாட்டு பயணம் பாகிஸ்தான்.

அதன் பிறகு மலேசியா, தாய்லாந்து, இலங்கை, துபாய் ,கென்யா, தான்சானியா ,மாலத்தீவு,  ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன்.

உலகில் ஆபத்தான பயணமாக ஆப்பிரிக்காவை சொல்வார்கள்.எனக்கு அப்படி தெரியவில்லை. ஆப்பிரிக்க மக்கள் என்னை தங்கள் வீட்டு விருந்தாளியாக வரவேற்று விருந்து கொடுத்தார்கள்.உற்சாகமாக நடனமாடி என்னை மகிழ்வித்தார்கள்.

ஆப்பிரிக்க மக்கள் இயற்கையை நேசிக்கிறார்கள்.அவர்கள் சமைக்கும் உணவில் மசாலாக்கள் அதிகம் இல்லை.எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.நவீன அறிவியல் அவர்கள் பக்கம் அதிகம் நுழையவில்லை. 

எபோலா, கொரோனா போன்ற எத்தனையோ கொடிய வைரஸ் நோய்களை எதிர்த்து போராடி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.அழுக்கு சட்டையோடு அவர்களை பார்ப்போம் .ஆனால் அவர்கள் ஆரோக்கியமானவர்கள்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்ற பழமொழி எனக்குத்தான் மிகவும் பொருந்தும் . வெளிநாட்டு பயணங்களில் இதுவரை எனக்கு பெரிய அளவில் உடல் நல பாதிப்புகள் எதுவும் வந்ததில்லை. உணவு பிரச்சனையும் இல்லை .அந்த நாட்டு மக்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதே உணவை விரும்பி சாப்பிடுவேன்.ஆப்பிரிக்க நாடுகளில் பச்சைக் கறியை சாப்பிடுகிறார்கள்.கறியை வெந்நீரில் போட்டு சாப்பிடுகிறார்கள். நானும் அவற்றை எல்லாம் சாப்பிட்டு பார்த்தேன்.

வெளிநாட்டு பயணங்களுக்கு எனக்கு அதிகமாக பணம் தேவைப்படுவதில்லை. ஆடம்பர உணவு விடுதிகளில் தங்குவதும் இல்லை. என்னால் எந்த இடத்திலும் தங்க முடியும். கிடைத்ததை சாப்பிட முடியும். பயணத்தை, மக்களை காதலிப்பதால் பயணக் களைப்போ அச்சமோ எனக்கு வருவதில்லை.

என்றும் உற்சாகமாக உணர்கிறேன்.. உலகமெங்கும் உள்ள மக்களை பார்ப்பதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறேன் என்றார் தமிழ் ட்ரக்கர் புவனிதரன்.அவரது பயணம் சிறக்க வாழ்த்தி விடைபெற்றோம்.

சந்திப்பு: பிரவீன் குமார்,சேகர்.