
– டாக்டர் இ.மரிய ஜோஷ்வா,M.B.B.S,.
இந்திய மெடிக்கல் அசோசியேஷன்(Indian Medical Association) வெளியிட்டுள்ள ஆய்வில், மக்களின் சராசரி ஆயுட்காலம் 69-72.ஆனால்,மருத்துவர்களின் சராசரி ஆயுட்காலம் 55-59.பொதுமக்களின் சராசரி ஆயுட்காலத்தைவிட மருத்துவர்களின் சராசரி ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் குறைவாக இருப்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
உயிர் காக்கும் மருத்துவர்களின் உயிர் காப்பது யார்? நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம். அவர்களுக்கு யார் ஆலோசனை சொல்வது? அவர்களை காப்பது எப்படி?
இந்த உலகத்தில் உள்ள அத்தனை தகவல்களும் ஒரு மருத்துவருக்கு ஈடாகாது.நமது ஆயுட்காலம் அதிகரிக்கவும், நோய் நொடிகள் இல்லாமல் வாழவும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உதவுகிறார்கள்.
மருத்துவர்கள் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் மட்டும் போதாது.மருத்துவ அறிவியலை,புதிய கண்டுபிடிப்புகளை, சிகிச்சை முறைகளை, மனித வாழ்வியலை, உளவியலை வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.திறமையும், அர்ப்பணிப்பும், ஆர்வமும் இருந்தால் தான் மனித உயிர்களை காப்பாற்ற முடியும்.
உயிர்களை காப்பாற்றி வாழ வைக்கும் மருத்துவர்களை தெய்வமாக கொண்டாட வேண்டும் என்பதில்லை; அவர்களை சக மனிதர்களாக, கவுரவமாக நடத்தினால் கூட போதும்.
மருத்துவருக்கு மூன்று வடிவங்கள் உண்டு. முதலில் அவரை தேவதை என்று புகழ்வார்கள்.பின்னர் கடவுள் என்பார்கள். சிகிச்சை முடிந்து நலம் பெற்றவுடன் அவர் பணம் கேட்பார். அப்போது அவர் கொடூர அரக்கனாக காட்சியளிப்பார்.
மருத்துவர்களை பணத்தாசை பிடித்தவர்களாக, கொள்ளையடிப்பவர்களாக பலரும் பல மாதிரி பேசுவார்கள்.ஒரு சிலர் எங்கேயாவது அப்படி இருக்கலாம்.ஆனால், எல்லோரும் அப்படி இல்லை.நம் நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை.குறைவாக இருப்பவர்களை இழக்கலாமா?
அரசு அமைப்புகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வேலைப்பளு அதிகம். தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவில் ஒரு நாளைக்கு ஒரு மருத்துவர் 200க்கும் மேற்பட்ட நோயாளிகளை பார்க்க வேண்டி இருக்கிறது. அதன்பிறகு அவசரப் பிரிவு நோயாளிகள், வார்டுக்கு சென்று பார்ப்பது,பிறகு வகுப்பு எடுப்பது என அடுத்தடுத்து சிறிதும் ஓய்வு இல்லாமல் பணியாற்றும் மருத்துவர்கள் இங்கு அதிகம்.
படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு 24 மணி நேரம்,48 மணி நேரம் வேலைகள் தரப்படுகிறது.70மணி நேரம் கூட வேலை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
தூக்கம் எவ்வளவு முக்கியம் என்று மக்களுக்கு சொல்லிக் கொடுப்போம்.ஆனால், நாங்கள் போதுமான அளவுக்கு தூங்குவதுமில்லை, சரியாக சாப்பிடுவதும் இல்லை.உடலுக்கு ஓய்வு தருவதும் இல்லை.உடற்பயிற்சி செய்ய நேரமும் இல்லை.இதனால் வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.
இதனால் குடும்பத்தைக் கூட சரியாக கவனிக்க முடியாமல்,மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் மருத்துவர்களும் உண்டு.
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை.முதல் தலைமுறை மருத்துவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே விட்டவர்களும் உண்டு.
பொதுமக்களை விட மருத்துவரின் சராசரி வயது குறைவு என்பதை மறுக்க முடியாது. ஆனால் இதை மாற்ற முடியும்.
மருத்துவர்களின் முதல் எதிரி மன அழுத்தம். வேலைப்பளு அதிகரிப்பது,மோசமான பணிச் சூழல், நோயாளிகளின் உறவினர்களின் தாக்குதல்,பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்முறை என ஏராளமான சிக்கல்கள் மருத்துவர்களுக்கு இருக்கிகின்றன.
முதலில் மருத்துவர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக வரையறை செய்ய வேண்டும்.வாரம் ஒரு நாளாவது ஓய்வு தருவதும் அவசியம்.
நோயாளிகளை கவனிப்பது கூட பரவாயில்லை. நோயாளிகளின் உறவினர்களை சமாளிப்பது சாமானியமானது அல்ல. மருத்துவ அறிவியலை புரிந்து கொள்ளாமல், சரியான சிகிச்சை அளிக்க வில்லை என மருத்துவர்களை தாக்குவார்கள். வன்முறையில் இறங்குவார்கள்.பெண் மருத்துவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வார்கள்.அடக்குமுறை,ஆபாச பேச்சுகள் அத்தனையையும் தினசரி எதிர்கொள்ள வேண்டும்.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமைவதில்லை. சில இடங்களில் கழிவறை இருக்காது; சாப்பிட நேரம் இருக்காது;குடிக்க தண்ணீரும் இருக்காது.
தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவோருக்கு ஏற்படும் மன அழுத்தம் வித்தியாசமானது. தேவையில்லாத பரிசோதனைகளை எழுதுவது,பணத்திற்காக ஆபரேஷன் செய்வது, டார்கெட் நிர்ணயித்து அந்த அளவை எட்டுவதற்காக மனசாட்சியை அடகு வைத்துவிட்டு பணியாற்றுவது என அவர்களது பிரச்னைகள் மன விரக்தியில் தள்ளும்.மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுவதை எண்ணி மனம் புழுங்கி மன அழுத்தம் ஏற்பட்டு நிம்மதி இழந்து தவிப்பவர்கள் ஏராளம்.
மருத்துவத்துறையில் முக்கியமான பிரச்னை தொற்று பரவல்.தினசரி நோயாளிகளை பரிசோதிக்கும்போது, தொற்று நோய்கள் மருத்துவர்களை தாக்கும் அபாயம் அதிகம். குறிப்பாக டி.பி. நோயில் சிலவகை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.அவை சிகிச்சை அளிக்கும் மருத்துவரையும் தாக்கும்.
பிரசவ அறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மிகுந்த களைப்புக்கும் சோர்வுக்கும் ஆளாவார்கள்.ஓரு வாய் சோறு சாப்பிடக்கூட நேரம் இருக்காது. அங்கே வெடித்து சிதறும் ரத்தம் எந்தத் தொற்று நோயையும் உருவாக்கும். ஆனாலும் மனம் கலங்காமல் பிரசவத்திற்கு உதவிக் கொண்டே இருப்பார்கள்.
பிரசவ காலத்தில் தாய்மார்கள் கதறி
துடிப்பார்கள்,எட்டி உதைப்பார்கள்… அதையெல்லாம் தாங்கிக்கொண்டு பிரசவம் பார்த்து பிஞ்சு குழந்தைகள் நலமுடன் பிறக்க, ஆரோக்கியமாக வளர்க்க மருத்துவர்கள் பாடுபடுவார்கள்.
கொரோனா காலத்தில் தொற்று பரவலால் ஏறத்தாழ 3,000 மருத்துவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களுக்கான நியாயமான இழப்பீடுகள் இன்று வரை தரப்படவில்லை.
அரசு மருத்துவமனைகள் கொரோனா காலத்திலும் தொடர்ந்து இயங்கியதை எல்லோரும் அறிவார்கள்.உலகமே கொரோனா நோய்த் தொற்றுக்கு பயந்து முடங்கிய போதும், அஞ்சிய போதும் மருத்துவர்கள் வீட்டில் முடங்கிப் போகவில்லை. தங்களது உயிரை பெரிதாக எண்ணாமல் தைரியமாக மக்களுக்கு சிகிச்சை அளிக்க முன் வந்தார்கள்.ஆனால், அவர்களது ஆயுட்காலம் குறைவாக இருப்பது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
மருத்துவர்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்தவர்களாக இருந்தால்தான் அவர்கள் மக்களுக்கு உதவ முடியும்.நமது நாட்டில் மருத்துவர் எண்ணிக்கை மிகவும் குறைவு.இருக்கின்ற மருத்துவர்களை இழக்கலாமா...நியாயமா…தர்மமா?
மக்களை காப்பது மருத்துவரின் கடமை, மருத்துவர்களை காப்பதே மக்களின் கடமை. மத்திய மாநில அரசுகள் மருத்துவர்களுக்கு தாராளமாக உதவ முன்வர வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க மருத்துவர்கள் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.அதற்கு சமுதாயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் வாருங்கள்!

