அந்தக் காலத்தில் எல்லாம் பள்ளிக்கூட வாசலில், கொடுக்காப்புளியை கடை பரப்பி விற்பார்கள். நாமும் அதை வாங்கி விரும்பி உண்போம். இப்போது புற்றீசல் போல் பெருத்துவிட்ட தனியார் பள்ளிகள் முன்பு கொடுக்காப்புளியை, காண முடிவதில்லை. சென்னையில் இதை ‘கொர்க்கலிக்கா’ என்று சொல்கிறார்கள்.

கொடுக்காப்புளி பசிபிக் கடலோரப் பகுதியில் அதிகம் விளைகிறது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது. கொடுக்காப்புளி மரமானது 10 முதல் 15 மீட்டர் தூரம் வளரும் தன்மை உடையது. கொடுக்காப்புளி மரமானது வீடு, காடு, கரை, தோட்டம், துரவு, வாய்க்கால், வரப்பு என எல்லா இடங்களிலும் நன்றாக வளரக்கூடியது.

சிவந்த கொடுக்காப்புளிகளை அணில்கள் அல்லது பறவைகள் தின்றுவிடும். ஓரளவு பழுத்த பழங்கள் மட்டும் தான் நமக்கு கிடைக்கும். கொடுக்காப்புளியை காய்களாக இருக்கும்போதே பார்த்து வைத்து அது பழுக்கும் வரை காத்திருந்து பறித்து உண்டால் நன்றாக இருக்கும். சுவையின் அடிப்படையில் கொடுக்காப்புளியின் வகை, காயாக இருந்தால் துவர்க்கும். பழமாக இருந்தால் துவர்ப்போடு இனிக்கும்.

இயற்கை மருத்துவத்தில் கொடுக்காப்புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப்படுகிறது. அது செரிமானத்தை மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் கருப்பை நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வாதநோய் மற்றும் மூட்டு வலிக்கும் மருந்தாக கொடுக்கப்படுகிறது. உடற்சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காப்புளி தரப்படுகிறது.

கொடுக்காப்புளியில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கிறது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ் உருவாகாமல் தவிர்த்து புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும். இது ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. பொட்டாசியம் மற்றும் கால்சியம் எலும்புகளையும், பற்களையும் பலப்படுத்தும். பாஸ்பரஸ் செல்களை புத்துயிர்க்கிறது. இரும்புச்சத்து உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மேலும், இதில் உள்ள விட்டமின் ஏ, விட்டமின் பி1,பி2,பி6 போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. நரம்பு மண்டலத்தை ஊக்கப்படுத்துகிறது. இது தோல், நகம் மற்றும் முடியை வலுவடையச் செய்கிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்டிரால் அளவை குறைக்கிறது. அதனால் உடல் பருமனும் குறைகிறது.‘எச்டிஎல்’ எனும் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. வைட்டமின் இ, இதில் அதிகம் இருப்பதால் என்றும் இளமையான தோற்றத்தையும் அளிக்கும்.

கொடுக்காப்புளி விதை மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது கிருமிநாசினியாகவும், காச நோயை எதிர்க்கும் ஒரு எளிய மருந்தாகவும் பயன்படுகிறது. கொடுக்காப்புளி மரத்தின் பட்டை பேதி, சீதபேதி, மலச்சிக்கல் மற்றும் காசநோய்க்கு உகந்த மருந்து. கொடுக்காப்புளி இலையின் சாறு அஜீரணக் கோளாறுகள், தொடர் கருச்சிதைவு மற்றும் கல்லீரல், பித்தப்பை பிரச்னைகள், உள் மற்றும் வெளி காயங்களை சீராக்குகிறது.

மருந்தாகப் பயன்படுத்தும் முறைகொடுக்காப்புளி விதையை எடுத்து தோலை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை அரைகிராம் எடுத்து அரை கிராம் மல்லித்தூள், அரைகிராம் சீரகப்பொடி சேர்த்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு நீங்கும்.
உப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, கருஞ்சீரகம், ஏலக்காய் மற்றும் கொடுக்காப்புளியின் சதையை எல்லாவற்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்து, 2 கிராம் அளவுக்கு தேன் சேர்க்க வேண்டும். இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கலும் போகும். மேலும் நீரிழிவு, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளையும் தீர்க்கிறது.

கொடுக்காப்புளி பித்தத்தை அதிகப்படுத்தக் கூடிய காரணத்தால் பித்தம் அதிகமாக உள்ளவர்கள் இதை உண்ணக் கூடாது.