மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துவது என்பது வெறும் சடங்கு அல்ல;  அது ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் மாபெரும் உளவியல் சக்தி.
ஒரு மாணவன் பாராட்டப்படும்போது,”என்னாலும் சாதிக்க முடியும்” என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கை அவனுள் உருவாகிறது.

மாற்று மருத்துவ உலகில் மாபெரும் சாதனைகளை படைத்து வரும் டாக்டர் சி.ஏ.ரவி, டாக்டர் உஷா ரவி தம்பதியர், மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக விழா எடுத்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.

கடலூர் சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி மற்றும் பேராசிரியை டாக்டர் உஷாரவி, இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கெம்பம்மாள் ஆறுவன் மற்றும் அஞ்சலி நாராயணன் அறக்கட்டளை, கடந்த 15 வருடங்களாக பளஞ்சிக சமூக மக்களின் குழந்தைகள்,10 ம் வகுப்பு,+2வில் 75 சதவீதம் பெற்று வெற்றி பெற்றவர்களை பெற்றோர்களுடன் வரவழைத்து கெளரவப்படுத்தி வருகின்றது!

2025- 2026 ஆம் கல்வியாண்டில் 10,12 ம் வகுப்புகளில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதித்த மாணவ மாணவிகளை கடந்த 16.08.2026 அன்று 16ஆம் ஆண்டு பாராட்டு விழாவாக நடத்தியது!

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரு. பாபுகுமார் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்!

நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வில் சாதனை படைத்தவர்களை டாக்டர் ரவி வாழ்த்தி பாராட்டினார்.

குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து அக்குழந்தைகள் பெற்றோர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பின், பெற்றோர்களைக் கொண்டே அக்குழந்தைகளுக்கு சால்வை அணிவித்து,அதன் பின் டாக்டர் ரவி அவர்கள் மெடல் அணிவித்து, சான்றிதழை வழங்கினார். நினைவுப்பரிசினை திரு பாபுகுமார் அவர்களால் வழங்க வைத்ததுடன், அக்குழந்தைகளுக்கு டாக்டர் ரவி அவர்கள் வெள்ளி நாணயமும் வழங்கினார்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

நிகழ்ச்சியில் சிறுவர்கள் பேசியபோது எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். தங்கள் குழந்தைகளைப் பற்றி பெரியவர்களும் பேசினார்கள்.

அந்த அரங்கம் முழுவதும் அன்பால்… அறிவால்… ஆனந்தத்தால் நிரம்பி வழிந்தது.

இளம் தலைமுறை சோதனைகளை கடந்து சாதனை செய்ய இது போன்ற பாராட்டுகள் நிச்சயமாக உதவும்.

டாக்டர் ரவி, பேராசிரியர் உஷா ரவி ஆகியோரின் கல்விப் பணிகளை நமது இதழ் சார்பில் பாராட்டி வாழ்த்துகிறோம்.

-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.