
பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உதட்டுப் பிளவு இருக்கலாம். கருப்பையில் குழந்தை வளரும்போது, முகத்தின் பகுதிகள் சரியாக ஒன்றிணையாமல் இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கு பரம்பரை தன்மை,மரபணு மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். கர்ப்பகால பிரச்னைகளும் ஒரு முக்கிய காரணம்.
இதற்கான சிகிச்சை என்பது சிக்கலானது,அதிக செலவு மிக்கது. சாதாரண குடும்பங்கள் இந்த குழந்தைகளை காப்பது சிரமம். ரேலா மருத்துவமனையின் கூட்டு முயற்சியில் முழுமையாக கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உதட்டுப் பிளவு தொடர்பான உலகின் மிகப்பெரிய அமைப்பான ஸ்மைல் ட்ரெய்ன் (Smile Train), சென்னையில் உள்ள ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் டாக்டர் ரேலா மருத்துவ மையத்தின் ‘உதட்டுப் பிளவு மற்றும் முகவாய் மையத்தை’, ‘விரிவான,உதட்டுப் பிளவு சிகிச்சைக்கான பரிந்துரை மையமாக’ (CCRC) இன்று அறிவித்தது. பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்போடு உயர்தரமான உதட்டுப் பிளவு சிகிச்சையை மக்கள் எளிதில் பெறுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதும், பயிற்சி,ஆராய்ச்சி மற்றும் அறிவுப் பகிர்வு மூலம் மருத்துவத் திறனை மேம்படுத்துவதும் இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்த சிறப்பு அங்கீகாரத்திற்கான பலகையை ஸ்மைல் ட்ரெய்ன் அமைப்பின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சூசன்னா ஷேஃபர் மற்றும் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஸ்ரீநிஷா ஆகியோர்(17.09.26) திறந்து வைத்தனர்.
இந்த அங்கீகாரம், பயிற்சி,ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவப் பகிர்வு ஆகியவற்றின் மூலம் உயர்தர, பன்முக பிளவு சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான மையத்தின் முயற்சிகளை வலுவாக்கும். நோயாளிகளுக்கான முழுமையான சிகிச்சையுடன் மருத்துவத்திறன் மேம்பாட்டையும் ஒருங்கிணைப்பதன் மூலம், மருத்துவமனை சேவைக்கும் கூடுதலாக, உதட்டுப்பிளவுக்கான சிகிச்சையை வலுப்படுத்துவது இம்மையத்தின் நோக்கமாகும்.
இந்நிகழ்வில் ஸ்மைல் ட்ரெய்ன் (ஆசியா) மூத்த துணைத் தலைவரும் பிராந்திய இயக்குநருமான மம்தா கரோல், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா,ரேலா மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா மற்றும் பிளவு, மண்டையோட்டு முக சீரமைப்பு மையத்தின் இயக்குநர் டாக்டர் சையத் அல்தாஃப் உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.
2001 ஆம் ஆண்டில் ஸ்மைல் ட்ரெய்ன் அமைப்புடன் இணைந்து தொடங்கப்பட்ட தொன்மையான பன்முக பிளவு சிகிச்சைத் திட்டங்களில் ஒன்றாக இது தனது சேவையை தொடங்கியது.2022 முதல்,ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் டாக்டர் ரேலா மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் இயங்கி வரும் இந்த மையம்,அதிக அனுபவம் வாய்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களுடன், பிறவி முதல் பிளவுடன் அவதிப்படும் குழந்தைகளுக்கு வளர்ச்சிப்பருவம் நிறைவடைந்த நிலையிலும் மற்றும் அதற்குப் பிறகும் பிளவு உள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சையளித்து வருகிறது.
இத்திட்டம் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை, மேல்தாடை முகம் சார்ந்த மற்றும் காது,மூக்கு, தொண்டை அறுவைசிகிச்சை, குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் மயக்கவியல்,பல் மற்றும் முகத் தாடை சீரமைப்பு,பேச்சு மற்றும் செவித்திறன், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உளவியல் போன்ற பல்வேறு துறைகளின் நிபுணத்துவங்களை ஒருங்கிணைக்கிறது.முதற்கட்ட உதடு மற்றும் அண்ணப்பிளவு சீரமைப்பு, நுனியண்ண எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு அறுவைசிகிச்சைகள்,தாடைச் சீரமைப்பு சார்ந்த அறுவைசிகிச்சை, அண்ண-தொண்டை செயலிழப்புக்கான சிகிச்சை,மற்றும் பிளவு மூக்குச் சீரமைப்பு அறுவைசிகிச்சை, போன்ற உயர்தர மருத்துவ நடைமுறைகளும் இதில் அடங்கும்.
இந்த CCRC மூலம், மருத்துவச் சேவைகள் மட்டுமின்றி, பரிந்துரை,பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் திறன்களும் மேம்படுத்தப்படும். இது பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (BIHER)இணைந்து செயல்படுவதால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிளவு சிகிச்சை நிபுணர்களுக்கான சிறந்த பரிந்துரை, ஆராய்ச்சி மற்றும் வள மையமாக இதன் பங்கு மேலும் வலுவடையும்.
இந்நிகழ்வில் ஸ்மைல் ட்ரெய்ன் அமைப்பின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சூசன்னா ஷேஃபர் பேசுகையில், “உதட்டுப் பிளவுக்கு விரிவான சிகிச்சைக்கான பரிந்துரை மையம் தொடங்கப்பட்டிருப்பது, தனிநபர்களுக்கான சிகிச்சைக்கு அப்பாற்பட்டு தொடர்கிற, நிலைப்புத்தன்மையுள்ள சிகிச்சை முறைகளை உருவாக்குவதில் எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. விரிவான மருத்துவ நிபுணத்துவத்துடன் பயிற்சி,ஆராய்ச்சி மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம்,இது போன்ற மையங்கள் உதட்டுப்பிளவு சிகிச்சைக்கான பரந்த கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும். உதட்டுப்பிளவு பாதிப்புள்ளவர்கள் தங்களது சிகிச்சை பயணம் முழுவதும் தரமான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் ஸ்மைல் ட்ரெய்ன் அமைப்பின் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது,” என்றார்.
பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில், “எங்களது உதட்டுப் பிளவு மற்றும் முகவாய் மையத்தை ஒரு பரிந்துரை மையமாக அங்கீகரித்திருப்பது,சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான உதட்டுப் பிளவு சிகிச்சையை வழங்குவதற்கான எங்களது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைப்பதன் மூலம்,முடிந்தவரை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஸ்மைல் ட்ரெய்ன் அமைப்புடனான எங்களது கூட்டாண்மை, சமூகப் பொருளாதாரப் பின்னணி எதுவாக இருப்பினும், தேவையுள்ள அனைவருக்கும் உதட்டுப் பிளவு மற்றும் முகவாய் சிகிச்சை சென்றடைவதை உறுதி செய்யும் எங்களின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது,” என்றார்.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ‘உதட்டுப் பிளவு மற்றும் முகவாய் மையத்தின்’ இயக்குனர் டாக்டர் சையத் அல்தாப் உசேன் கூறுகையில், “உதட்டுப் பிளவு உள்ள ஒவ்வொரு நபருக்கும் சிகிச்சையும், பராமரிப்பு முறையும் மாறுபடும்; பெரும்பாலும் அவர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் வெவ்வேறு கட்டங்களில் பல்வேறு மருத்துவ தலையீடுகள் மற்றும் நிபுணர்களின் உதவி தேவைப்படுகிறது. சிக்கலான உதட்டுப் பிளவு குறைபாடுகளுக்கு சிகிச்சையளிப்பதும் உட்பட நோயாளிகளின் தேவைகளை மையமாகக் கொண்டு பல்வேறு துறை நிபுணர்கள் ஒன்றிணைந்து செயல்பட உதவும் ஒரு திட்டத்தை கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். CCRC-இன் தொடக்கமானது இந்த பணிகளை மேலும் மேம்படுத்தவும், பரிந்துரை சிகிச்சையை வலுப்படுத்தவும், அத்துடன் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றில் எங்களது பங்களிப்பை விரிவுபடுத்தவும் பெரிதும் உதவும்,” என்றார்.
குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல் முக்கியமான சிகிச்சை அளிப்பது பாராட்டுக்குரியது.
-பவித்ரன்.
ஹெல்த் அண்ட் பியூட்டி

