
உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்னைகளுக்கு விரிவான ஒருங்கிணைந்த சிகிச்சை,அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக வழிமுறைகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு வழங்குவதற்காக காவேரி மருத்துவமனை – (சென்னை,ரேடியல் ரோடு),சமத்வா என்ற சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை தெலுங்கானா முன்னாள் ஆளுநரும். புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் (07.10.26)தொடங்கி வைத்தார்.
உடல் பருமன் (Obesity) என்பது ஒரு நோய்தான்.
மருத்துவ ரீதியாக இது ஒரு நாள்பட்ட நோய் (Chronic Disease) என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உடல் பருமனை வெறும் “அதிக எடை” அல்லது “அழகு சார்ந்த குறைபாடு” என்று மட்டும் பார்க்கக் கூடாது.ஏனெனில், இது உடலில் தேவையற்ற கொழுப்பு அளவுக்கு அதிகமாகச் சேர்ந்து,உடலின் உள் உறுப்புகளின் செயல்பாட்டைப் பாதிக்கும் ஒரு மருத்துவ நிலை ஆகும். உதாரணமாக, காய்ச்சல் அல்லது சர்க்கரை நோய் போல,உடல் பருமனுக்கும் பிரத்யேகமான அறிகுறிகள், உடலியல் மாற்றங்கள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. எனவே, இது ஒரு முழுமையான நோயாகவே உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார சர்வே-6 (2023-24)ன் படி,தமிழ்நாட்டில் 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 44.2% பேர் அதிக எடை அல்லது உடல் பருமனுடன் உள்ளனர்.உடல் பருமன் பிரச்னைகளுக்கு வழக்கமான எடைக் குறைப்பு திட்டங்கள் மட்டும் போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு நபரின் வளர்சிதை மாற்றம், ஊட்டச்சத்து, உடலியல் சார்ந்த நிலைகளுக்கு ஏற்ப தனியாக சிகிச்சை முறைகளை உருவாக்க வேண்டும்.தவிர தகுந்த வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம்.எனவே இவை அனைத்தையும் மக்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த முறையில் பெறுவதற்காக சமத்வா மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தின் மருத்துவக் குழுவில் பொது மருத்துவர்கள், ஹார்மோன் நிபுணர்கள் (எண்டோக்ரினாலஜிஸ்ட்ஸ்), இரைப்பைக் குடல் மருத்துவ நிபுணர்கள், கல்லீரல் மருத்துவ நிபுணர்கள், பிற துறை நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சமத்வா உடல் எடையை குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும்,உடல் பருமனால் ஏற்பட வாய்ப்புள்ள பிற நோய்களை வராமல் தடுப்பதிலும், சரியான வாழ்க்கை முறைகளை பரிந்துரைப்பதிலும் கவனம் செலுத்தும்.
டாக்டர் பியூஷ் பவானே பேசுகையில்,”உடல் பருமன் வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் நீரிழிவு நோய், கொழுப்பு கல்லீரல் நோய்,உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் போன்ற நோய்கள் தோன்ற காரணமாக அமையலாம்.இந்த அபாயங்களை விரிவாக மதிப்பீடு செய்து,ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற தகுந்த சிகிச்சைகளை சமத்வா மையம் வழங்கும்”என்றார்.
ஹார்மோன் துறை (எண்டோக்ரினாலஜி)ஆலோசகர் டாக்டர் ரமீஸ் ராஜா பி பேசுகையில், “உடல் பருமன் என்பது ஒரு சிக்கலான வளர்சிதை மாற்ற நிலையாகும்.இது உடலின் பல உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது.உடல் பருமன் மேலாண்மைக்கு பல்வேறு துறை சார்ந்த பிரத்யேகமான அணுகுமுறையே முக்கிய தீர்வு. சமத்வா மையத்தில் நோயாளிகளுக்கு விரிவான மதிப்பீட்டின் மூலம் தனிப்பட்ட அபாயங்களைக் கண்டறிந்து, பொருத்தமான சிகிச்சை அணுகுமுறையை தீர்மானித்து திறம்பட வழங்குகிறோம்” என்றார்.
தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியபோது,
“உடல் பருமன் என்பது அதிகப்படியாக சாப்பிடுவதால் மட்டும் வருவதில்லை. உடல் உழைப்பே இல்லாத, உடற்பயிற்சியே செய்யாமல் வாழ்வதால் ஏற்படுகிறது.இதை ஒரு நோயாக சொல்லலாம்.
உடல் பருமன் அதிகரித்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே,உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும். கண்ட இடத்தில் போட்டால் குப்பை…கண்டதை தின்றால் தொப்பை!
தொப்பை இல்லாமல் வாழ்ந்தால் தோற்றம் அழகாக இருக்கும். இளமையும் அதிகரிக்கும்.
வீட்டில் சிறிய தட்டில் சாப்பிடுங்கள். சோறு,இட்லி, தோசை போன்ற உணவுகளை குறைவாக சாப்பிடுங்கள். காய்கறி,பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். பழைய சோறு சாப்பிட்டால் குடலும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்”என்று குறிப்பிட்டார்.
-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி

