இந்திய மருத்துவ சங்கத்தின்(Indian Medical Association)  தாம்பரம் கிளை சார்பாக, பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, “நம்ம ஹெல்த் மெகா எக்ஸ்போ 2026″அக்டோபர் 17 முதல் 19 வரை, மேற்கு தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுல பள்ளியில் நடைபெற இருக்கிறது.

மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், “ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளுடன் கண்காட்சி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.Dசரத்குமார் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இந்திய மருத்துவச் சங்கத்தின் அகில இந்திய கௌரவ பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் K.M. அபுல் ஹாசன் முன்னிலை வகிக்கிறார். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் B. ஸ்ரீதர்,தமிழ்நாடு மாநில கௌரவ செயலாளர் டாக்டர் எம்.திரவியம் மோகன், காமன்வெல்த் மருத்துவ சங்கத்தின் தலைவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவருமான டாக்டர் A.ஜெயலால் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் M.வீரப்பன். இ.ஆ.ப ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

அடிப்படை மருத்துவ அறிவியல் முதல் நரம்பியல், மகப்பேறு மருத்துவம் மற்றும் இதயவியல் உள்ளிட்ட சிறப்பு மற்றும் அதிநவீன மருத்துவப் பிரிவுகள் வரை 26 பிரத்யேக அரங்கங்கள் இடம்பெற உள்ளன. குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளும், உடல்நல பராமரிப்பு மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் நேரடி செயல் விளக்க நிகழ்வுகள் நாள் முழுவதும் நடைபெறும்.

6 மருத்துவக் கல்லூரிகள், ஏறக்குறைய 50 மருத்துவமனைகள் மற்றும் 300 முதல் 400 மருத்துவ நிபுணர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

ஒரு சில குறிப்பிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட இருக்கிறது.இலவச மருத்துவ ஆலோசனையும் தரப்படும்.

மனித உடல் செயல்பாடுகள், நோய் பாதிப்புகள், சிகிச்சை முறைகள், வருமுன் தடுப்பதற்கான வாய்ப்புகள் உட்பட ஆரோக்கியமாக வாழ்வதற்கான அனைத்து விதமான தகவல்களும் எளிய முறையில் வழங்கப்படும்.

டாக்டர் எல்.யசோதா, டாக்டர் டி.என். ரவிசங்கர்,டாக்டர் வி.எஸ்.ஹரிஹரன்,
டாக்டர் ஜி. புவனேஸ்வரி, டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் உட்பட பல்வேறு மருத்துவர்கள் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

மருத்துவர்கள் மக்கள் மத்தியில் ஆரோக்கிய வாழ்வு பற்றி கலந்துரையாடுவது மிகவும் பாராட்டுக்குரியது. மருத்துவ அறிவியலை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துச் சொல்வது மிகவும் வரவேற்க வேண்டிய விழிப்புணர்வு பணியாகும்.

மக்கள் இந்த கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.

-ஷைலஜா. ஹெல்த் அண்ட் பியூட்டி.