25 ஆண்டுகளாக இலவச ஹோமியோபதி சிகிச்சை…அப்ரோச் சாதனை!
சென்னை, பாடியில் 2001 அக்டோபர் ஏழாம் நாள் தொடங்கப்பட்ட ஹோமியோபதி இலவச சிகிச்சை, 25 ஆண்டுகளாக எந்த வித தொய்வுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்திருக்கிறது அப்ரோச். இந்த சாதனை மிகவும் பாராட்டுக்குரியது.
மைய அமைப்பாக காரைக்குடியில் தொடங்கப்பட்ட அப்ரோச்சின் கிளையாக 1998 ஏப்ரலில் சென்னையில் தடம் பதித்திருக்கிறது அப்ரோச் சென்னை. Association for Propagation of Classical Homeopathy- தமிழில் தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம் – என்பதன் சுருக்கப் பெயரே, அப்ரோச் (APROCH). அது வரையிலும் ஹோமியோ மருத்துவக் கல்விக்கான வகுப்புக்களை மட்டும் நடத்திய அப்ரோச் 2001- லிருந்து மக்களுக்கான இலவச மருத்துவ மையத்தை தொடங்கி நடத்தி வருகிறது.
தற்போது அப்ரோச் அறக்கட்டளையாக தன் சேவைப் பணியை தொய்வின்றித் தொடர்கிறது.
ஆரம்பத்தில் சென்னை, அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் தோழர் ஜவஹரின் வழிகாட்டுதலில் தோன்றிய இந்த அமைப்பில் திருவாளர்கள் மா.ரகுபதி, தலைவர், ச.ராமசாமி, செயலாளர், சி.சங்கரலிங்கம் பொருளாளர் ஆகியோர் தற்போதைய நிர்வாகிகளாக பொறுப்பெற்று மக்கள் பணியில் திறம்பட செயலாற்றுகிறார்கள்.

வெள்ளி விழா மலர்

25 ஆண்டு இலவச மருத்துவ சேவையை கொண்டாடும் வகையில் வெள்ளி விழா நிகழ்வை நடத்தி, சிறப்பு மலர் ஒன்றை கடந்த ஞாயிறு 11-10-2026 இல் வெளியிட்டு இருக்கிறார்கள். தோழர். பாவெல் சூரியனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்த மலர் ஹோமியோபதி மருத்துவம், அப்ரோச் வரலாறு மட்டுமல்ல எல்லோருக்கும் பயன்படத்தக்க ஒரு சிறந்த கருத்துப் பெட்டகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஹோமியோபதியின் சிறப்பை எளிய முறையில் சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மலரின் படைப்புக்கள் பேசுகின்றன. ஜெர்மனியில் பிறந்த டாக்டர். ஹானிமன், உலகிற்கு ஹோமியோபதி சிகிச்சை முறையை அறிமுகம் செய்தார். 200 ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் பரவி கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்று அது வளர்ந்து வருகிறது. ஹோமியோபதியின் சிறப்பு, நோயின் பெயரை மட்டும் பார்த்து மருந்தளிப்பதில் இல்லை. ஒவ்வொரு மனிதரின் உடலமைப்பு, மனநிலை, உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைச் சூழலை முழுமையாகப் புரிந்துகொண்டு, நோயின் அடிப்படைக் காரணத்தை அணுகுவதில்தான் அதன் தனித்துவம் உள்ளது.அதனால், ஒரே நோயால் பாதிக்கப்பட்ட இருவருக்குக் கூட வேறுபட்ட மருந்துகள் வழங்கப்படலாம். ஏனெனில், ஹோமியோபதி நோய்க்கல்ல, நோயாளருக்கே சிகிச்சை செய்கிறது.

இன்றைய உலகில் மக்கள் அதிகமாகத் தேடுவது பாதுகாப்பான, இயற்கை சார்ந்த, நீண்டகால நலனை நோக்கிய மருத்துவ அணுகுமுறைகளையே. அந்தத் தேடலுக்கு மனிதநேய அணுகுமுறையுடனும், தனிநபர் மைய சிகிச்சைக் கோட்பாட்டுடனும் பதிலளிக்கும் மருத்துவ முறையாக ஹோமியோபதி தொடர்ந்து திகழ்கிறது. மனிதனை உடல், மனம், உணர்வு என முழுமையான ஒருமைப்பாட்டுடன் அணுகும் அதன் தத்துவமே, இன்றும் அதனை தனித்துவமான மருத்துவ முறையாக நிலைநிறுத்துகிறது.
இப்படி ஹோமியோபதியின் சிறப்பை அறிமுகம் செய்யும் அதே வேளையில், அப்ரோச் அமைப்பை உருவாக்கிய நல்ல உள்ளங்களின் உழைப்பையும், பங்களிப்பையும் விரிவாக பதிவு செய்து இருக்கிறார்கள். இந்திய அளவில் ஹோமியோபதி சிகிச்சையில் புகழ்பெற்ற டாக்டர். ராஜன் சங்கரன் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் ஹோமியோபதியின் சிறப்புகளை கடந்த 35 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வரும் பழ.வெள்ளைச்சாமி அவர்கள் “மனிதனை விலங்கு நிலையிலிருந்து மீட்டு மனித நிலைக்கு கொண்டு வரும் ஒப்பற்ற மருத்துவம் ஹோமியோபதி” என்று தன் கட்டுரையில், பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். ஹோமியோபதி கோட்பாட்டில் ஆழ்ந்த ஆளுமை மிக்க டாக்டர்.பி.வி. வெங்கட்ராமன்,MD,(Hom) அவர்களின் விரிவான பேட்டி, “ஹோமியோபதி முதன்மை மருத்துவமாதல் எப்போது?என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் தன்னார்வ ஹோமியோபதியர்களின் சுருக்கமான வரலாறு, ஹோமியோபதி ஒரு பிரபஞ்ச தத்துவம், குடும்ப நலனில் மெய்நிகர் காவலர்கள், ஆட்டிசம், ஆர்கனான்: இன்றும் பொருத்தமானதா அல்லது மாற்றத்தக்கதா? பெண்கள் பிரச்சினைகளும் ஹோமியோபதி மருந்துகளும், ஹோமியோபதி மருத்துவத்தில் புதிய வழிமுறைகள்-ஒரு பார்வை!, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய மருத்துவம் சார்ந்த ‘துயில்’ நாவலின் விமர்சனம், அறிகுறிகளுக்கு அப்பால், சாக்ரடீசும் பைசனும், ஹானிமனும் பேரா. செல்சியசும், ஹோமியோபதி அற்புதங்கள்: காட்சியும் சாட்சியும்- புகழ்பெற்ற ஹோமியோபதி மருத்துவர் மேஜர் தி.சா.ராஜூ பற்றிய விரிவான அலசல் உட்பட ஏராளமான படைப்புகள் மலருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இடம்பெற்று இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
மருத்துவ அறிவியலை மட்டும் பதிவு செய்யாமல், ஹோமியோபதி மருத்துவத்தால் பயன் பெற்றவர்களின் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
ஹோமியோபதி மருத்துவத்தை மனித நேயத்தோடு இலவசமாக செய்து வரும் மருத்துவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்! மருத்துவ மலரை பயனுள்ள இலக்கிய மலராக கொண்டு வந்துள்ள ஆசிரியர் பாவெல் சூரியனுக்கும் நமது இதழ் சார்பில் பாராட்டுகள்.!! மலரின் வடிவமைப்பு நேர்த்தியாக உள்ளது. ஒரு வார இதழை படிப்பது போல் ரசனையோடு வடிவமைத்த ஜீவமணிக்கும் நமது பாராட்டுகள்!!!


மலர் பக்கங்கள் : 210
விலை : ரூ.200
தொடர்புக்கு : அப்ரோச் அறக்கட்டளை,
Flat No:542,No.74, MTH Road, Villivakkam,
Chennai-600 049,
Mail:aprochchennai@gmail.com
Mob:94433 68861, 90927 75318

