
முனைவர் மா.ஆ. தீபா,M.Sc, M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர்,
தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி
(தன்னாட்சி), கோயம்புத்தூர்.
நம் ஆரோக்கியம் நம் கையில்.நம் ஆரோக்கியத்தின் மேம்பாடு என்பது நம்மைச் சுற்றியுள்ள சிறுசிறு மூலிகைகளின் கைகளில் தான் உள்ளது. நமக்கான சிறந்த மூலிகைகளை நாம் பயன்படுத்தும் முறைகளையும் கண்டறியும் முறைகளையும் குறித்தே இத்தொடரில் நாம் பார்த்து வருகிறோம்.இந்த மாதம் நாம் அறிந்து கொள்ள இருக்கும் மூலிகை எலுமிச்சைப் புல் (Lemon grass). இது வாசனைப் புல் எனவும் அறியப்படுகிறது. மிக எளிமையாக நம் சுற்றுப்புறங்களில் வளர்க்கக்கூடிய எலுமிச்சை புல்லானது கிழக்காசிய நாடுகளில் தோன்றி, பல்வேறு மேற்கத்திய நாடுகளுக்கும் தன் பயணத்தை தொடர்ந்திருக்கிறது. நாம் பார்த்த பல மூலிகைகளும் மத்திய தரைக்கடல் பகுதியில் தோன்றி உலகம் முழுவதும் பரவியதாகவே கண்டோம். ஆனால், எலுமிச்சைப்புல், கிழக்காசிய நாடுகளில் தோன்றியது. இந்தியா,ஸ்ரீலங்கா பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்டு தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் அன்றாட உணவு தயாரிப்புகளில் ஒன்றாகவே வலம் வருகிறது.

எலுமிச்சைப் புல்லில் இரண்டு வகைகள் உள்ளன. பெரும்பாலும். இந்தியா,ஸ்ரீ லங்கா போன்ற நாடுகளில் வளரும் சிட்ரஸ் ஃபிளெக்சோசஸ் என்ற வகையைச் சார்ந்த எலுமிச்சைப் புல் ஆனது மெல்லிய இலைகளையும், ஆறு அடி உயரம் வளரக்கூடிய தாவரமாகவும் இருக்கிறது. சிற்றோநெல்லா எனப்படும் எண்ணெய் பொருளை அதிகமாகக் கொண்டிருப்பதால், அதீத நறுமணத்தை கொண்டுள்ளது. பெரும்பாலும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பதற்கும், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்குமே இந்த எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. உணவில் சேர்த்துக்கொள்ள தகுதியற்ற புல்லாகவே இது அமைகிறது. ஆனால், சிம்போபோகன் சிட்ரேட்டஸ் எனப்படும் தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நான்கு அடி உயரம் வரை வளரக்கூடிய தடிமனான எலுமிச்சைபுற்கள் உணவு தயாரிப்புகளில் ஜீரண சக்தியை அதிகரிப்பதற்காகவும், நச்சுத்தன்மையைப் போக்குவதற்காகவும்,மெல்லிய எலுமிச்சை மணத்தை சேர்ப்பதற்காகவும் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை எலுமிச்சை புல்லானது கிழக்காசிய நாடுகளின் உணவுகளில் தவிர்க்கமுடியாத ஒரு உட்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.இன்றளவும் இந்தியா,சீனா,பிற கிழக்காசிய நாடுகளே இத்தாவரத்தை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன.
பல நன்மைகளையும் செய்யக்கூடிய எலுமிச்சை பழங்களை கூட நாம் எண்ணெய் போக்கும் தன்மைக்காக வீட்டின் தரை மற்றும் பாத்திரங்களை தூய்மைப்படுத்தும் பொருட்களில் பயன்படுத்துகிறோம்.அது போலவேதான் சந்தையில் கிடைக்கும் பல வீடு தூய்மை செய்யும் சாதனங்களிலும் எலுமிச்சைப்புல் சேர்த்தது எனவும், மிக பாதுகாப்பானது எனவும் நாம் பார்க்கிறோம். அதே சமயம் நம் உள்ளங்களில் அடர் நறுமணம் கொண்ட ஒரு புல்லை எவ்வாறு தேநீராக அருந்துவது அல்லது எவ்வாறு பிற நாடுகளில் உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி எழும். ஆனால் இவ்விரண்டும் ஒரே புல்லின் வேறு வேறு வகைகளாகும். அவற்றை பிரித்து அறியக்கூடிய வேறுபாடுகளை நாம் அறிந்து கொள்வோமாக.
சிம்போபோகன் சிட்ராட்டஸ் எனப்படும் உணவாக உட்கொள்ள ஏதுவான எலுமிச்சைப் புல்லானது, பாரம்பரியமாக நமது ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகளிலும்,சீன மருத்துவ முறைகளிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் எலுமிச்சை புல்லானது உலகம் முழுவதும் வளரக்கூடிய ஒரு பயிராகவே. உள்ளது. மிதமான
சூடு மற்றும் மழை உள்ள இடங்களில் செழிப்பாக வளரும் பயிராக உள்ளது.
எலுமிச்சைப் புல்லின் எண்ணெய், நரம்பு டானிக்காகவும், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. இருமல்,காய்ச்சல், காசநோய், தொழுநோய், நிமோனியா போன்ற பிரச்னைகளுக்கும் நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் குறிப்புகள் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தவும், குமட்டலை சரி செய்யவும், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. நரம்பு பிடிப்பு, சுளுக்கு போன்ற உபாதைகளுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். பேன் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சைபுல் எண்ணெய் சேர்த்த தயாரிப்புகளை பயன்படுத்தும்போது நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு நாளில் 3 – 6 கிராம் வரையிலான எலுமிச்சைப் புற்களை சுடுநீரில் சேர்த்து தேநீராக குடிக்கும் போது செரிமானத்தை மேம்படுத்தும். குமட்டல் உள்ளவர்களும் இந்தத் தேநீரை அருந்தலாம்.தேன் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது மேலும் பயனுள்ளதாக அமைகிறது. மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் மேம்படவும் தேநீர் உதவுவதாக அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.பல்வேறு வகையான உணவு தயாரிப்புகளிலும் பானங்களிலும் சுவையூட்டியாக இப்புல் சேர்க்கப்படுகிறது.
வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்ததாக உள்ள இப்புல்லின் சாறு உணவு மற்றும் பானங்களில் சேர்க்கப்படும்பொழுது ஊட்டச்சத்தை வழங்குவதாக உள்ளது.
வாயு தொல்லையிலிருந்து விடுபட இரண்டு அல்லது மூன்று சொட்டு எண்ணெயை சுடு நீரில் கலந்து உட்கொள்ளலாம். தலைவலியைப் போக்க 2- 3 துண்டுகள் எலுமிச்சைபுல் சேர்த்து வடிநீராக உட்கொள்ளலாம். காய்ச்சலின் காரணமாக வாயில் ஏற்படும் சுவையற்ற தன்மையை போக்க இவ்வடி நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.காலரா போன்ற தீவிர காய்ச்சல் ஏற்படும்போதும் நாவின் சுவையை மீட்க இவ்வடிநீர் அருந்தலாம்.
மாதவிடாய் கோளாறுக்கென உட்கொள்ளும் போது அதிகப்படியான ரத்தப்போக்கை உண்டாக்கும் என்பதால், இதனைச் சற்று கவனமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படியே பயன்படுத்த வேண்டும்.
அதே சமயம் சிம்போபோகன் ஃபிளெக்சோசஸ் வகை எலுமிச்சைப் புல்லில் இருந்து பெறப்படும் எண்ணெய், வேர்வையை போக்கும் டியோடரண்டுகளிலும், சோப்பு,அழகு சாதனப் பொருட்கள், நறுமண சிகிச்சை பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதுவே பூச்சி விரட்டிகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய மருத்துவ குணங்களையும் கிருமி நாசினியாக அல்லது நீக்கியாக பயன்படுத்தப்படும் எலுமிச்சைப் புல்லானது இஞ்சி புல் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தமிழர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. தமிழர்கள் பரவிய எல்லா நாடுகளிலும் இப்புல் இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது. இப்புற்கள் சிறிய புதர்களாக வளரும் தன்மை கொண்டுள்ளது. எனவே நம்முடைய வீட்டு காய்கறி தோட்டங்களிலும், அழகு செடியாகக் கூட இவற்றைத் தொட்டிகளிலும் வளர்க்கலாம்.
இந்நறுமணம் பூச்சிகளை விரட்டுவதோடு, அவசர நிவாரண தேவைகளுக்கும் நமக்கு உதவும். இப்புற்களை வாங்கி வளர்க்கும்போது மெல்லிய இலைகளைக் கொண்ட ஆறு அடி வளரக்கூடிய தாவரமா அல்லது சற்றே தடிமனான தண்டு மற்றும் இலை பகுதிகளைக் கொண்ட நான்கு அடிக்குக் கீழ் வளருமா என்பதை கேட்டு நாம் வாங்கி வளர்க்கலாம்.
மெல்லிய இலைகளைக் கொண்ட எலுமிச்சைப் புற்களை உணவு பதார்த்தங்களில் சேர்க்ககூடாது. தடிமனான தண்டுப் பகுதியும் தடிமனான இலைகளையும் கொண்ட வகையையே உணவிற்காக நாம் பயன்படுத்தலாம். சந்தையில் காய்ந்த புற்களாக துண்டங்களாக நாம் வாங்கி வரும்போதும் அதன் தடிமனைக் கொண்டு இது எந்த வகை புல் என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம். எண்ணெயாக வாங்கும் போதும் இதன் மூலப்பொருள் என்ன என்பதை படித்தறிந்து, பயன்பாடு என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். சில சமயங்களில் மிக அடர் நறுமணமுள்ள எலுமிச்சைப்புல் எண்ணெய் எடுத்துக்கொண்டால் குமட்டலை ஏற்படுத்தும். அத்தகைய பொருட்களை மேல் பூச்சாக கை, கால்களில் பூசலாம் அல்லது பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் இரசாயன கொசு விரட்டிகளினால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். விவசாய முறைகளில் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் பல மூலிகைகளுக்கு இடையில் வீடுகளில் கொசுக்களை
விரட்ட எலுமிச்சைப் புல்லின் எண்ணெய் பயன்படுகிறது. கொசு விரட்டியாக பயன்படுத்தப்படும் போது கொசுக்களால் ஏற்படும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகிறது.
சிறு மூலிகைகள் மிகப்பெரிய பயன்களை கொண்டுள்ளது என்றாலும் அவற்றை சரியான வகை தானா என கண்டறிந்து, பாதுகாப்பான வகைகளையே நாம் பயன்படுத்த வேண்டும்.எனவே, எலுமிச்சைபுல், இஞ்சிப்புல் அது வாசனைப்புல் என எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், இது நமக்கான நல்ல ஆரோக்கியத்தைத் தரும் புல் என்பதை அறிவோமாக. சரியான முறைகளில் மற்றும் அளவுகளில் பயன்படுத்தி நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

