
எல்லா நற்செயல்களிலும் மகுடம் சூட்டுவது போல் அமைவது கல்வி கற்பிப்பதுதான். பிச்சைப் புகினும் கற்றல் நன்றே. இன்று இந்த விழிப்புணர்வு எல்லா மக்களிடமும் உள்ளதைக் காண்கிறோம். எப்பாடுபட்டாவது எவ்வளவு கடன்பட்டாவது தங்கள் குழந்தைகளை ஒரு பட்டதாரியாக்கி விட வேண்டும் என்கிற கனவு இருப்பதைப் பார்க்கிறோம். உயர் நிலைக் கல்வி என்பது ஒருசிலருக்கே உரியது என்கிற மனப்பான்மை மாறி எல்லோருக்கும் எப்போதும் கல்வி என்கிற நிலை உருவாகி உள்ளது. அரசும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கல்வி ஒருபுறம் வணிகமாகி வருவதும் நம் கண்களில் விழுந்த தூசியாக உறுத்திக் கொண்டே இருக்கிறது. மழலைக் கல்வி முதல் பள்ளி இறுதி ஆண்டு வரை படிக்க பல லட்சம் ரூபாய் செலவாகிறது. அரசு இந்த பெரும்பணியை ஏற்றுக்கொண்டு செயல்படத் தயங்குவது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இந்நிலையில் உயர் கல்வி எனும் கல்லூரி படிப்பைக்கூட சில தனியார் தங்கள் வசம் கொண்டு பல கோடிகளை சம்பாதிக்கின்றனர். உயர் கல்வியை எளிமையாக்கவே திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் உருவாயின. ஆனால், அதற்கும் சில நிபந்தனைகளை விதித்து பல்கலைக்கழக மானியக் குழு தடை கற்களை ஏற்படுத்தி, சுமுகமாக இருக்க வேண்டிய கல்விமுறையை கடினமாக்கி வருகிறது.
இந்நிலையில் ஆராய்ச்சி படிப்புகள் இன்னும் சிரமமான விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அறிவியல், புதுமை கண்டுபிடிப்பு என்பது இயல்பாகவே சிலருக்கு இருக்கக் கூடும். அதனை அணைபோட்டு தடுப்பது நாட்டின் வளர்ச்சிக்கே ஊறுவிளைவிப்பதற்கு ஒப்பாகும்.
ஒரு ஆய்வினை மேற்கொண்டு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்தவருக்கு அடிப்படைக் கல்வி கூட தேவையில்லை என்பதை செயல்படுத்த வேண்டும். வெறும் பட்டப்படிப்பும் ஐந்தாண்டு கால கல்வியும் வீணான கால விரயமே.
எனவே ஆய்வினை மேற்கொண்ட ஒருவருக்கு எவ்வாறு முனைவர் எனும் டாக்டர் பட்டத்தைப் பெறலாம். படித்துப் பயன் பெற என் நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜி.ராஜமோகன்

