
ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை – 2
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil, Ph.D,
உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை.
அரசு கலை கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்.
மூலிகைகளே நமது ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை. அவற்றை அறிந்து கொள்வதன் மூலம் நாம் எவ்வாறு பயன்பெறலாம் என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் ஒரு மூலிகை என விரிவாக பதிவு செய்து வருகிறோம்.
மூலிகை வலம்புரி மற்றும் இடம்புரி பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதன் தாவரவியல் பெயர் ஹேலிக்ட்ரஸ் ஐசோரா என்பதாகும். மிகுதியான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய இம்மூலிகை ஆயுர்வேதம்,சித்த வைத்தியம்,யுனானி மற்றும் நாட்டுப்புற மருத்துவத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் இம்மூலிகை உலக அளவில் பல கலாச்சாரங்களிலும் பெரும் பங்கு வகிப்பதாக உள்ளது.
இது ஒரு சிறிய வகை மரமாகும்.இந்தியா, இலங்கை,மியான்மர், நேபாளம்,தாய்லாந்து, மலேசியா,ஆஸ்திரேலியா மற்றும் பிற ஆசிய நாடுகளிலும் அதிகமாக காணப்படுகிறது . இம்மரத்தின் இலை, பட்டை,வேர் மற்றும் காய்கள் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.பழத்தின் திருகு போன்ற தோற்றத்தால் இது பொதுவாக அவர்தானி, மரொட்பலி, மரொர்பலி, எண்தாணி என பல மொழிகளிலும் அழைக்கப்படுகிறது. இது பாம்பு கடி வயிற்றுப்போக்கு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்த நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.இந்திய மருத்துவ முறைகளில் சித்த மருத்துவத்தில், வலம்புரித்தைலம் என்பது மிகவும் அறியப்பட்ட ஒன்றாகும்.
இதன் இலை,வேர் மற்றும் காய் துவர்ப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. இத்துவர்ப்பானது பசியை தூண்டும் தன்மையை கொண்டுள்ளது. செரிமான கோளாறுகளுக்கும், சுவாசக் கோளாறுகளுக்கும், கிருமி தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ளவும்,இதன் இலைகள்,பூக்கள் மற்றும் வேர்கள் நீரில் கொதிக்க வைக்கப்பட்டு அந்த வடிநீர் பயன்படுத்தப்படுகிறது.
இலை மற்றும் வேரை சூரணமாக பால் மற்றும் நீருடன் கலந்து உட்கொள்ளும்போது ஜீரண சக்தியை அதிகரிப்பதாகவும், வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த வல்லதாகவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரி செய்வதாகவும் அறியப்படுகிறது.
இம்மரத்தின் இலை மற்றும் பூவை காயவைத்து தேநீராக பயன்படுத்தினால் இருமல் கட்டுப்படும். மரத்தின் பூ மற்றும் வேர் வினிகர் அல்லது ஆல்கஹாலில் ஊறவைத்து மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பிறகு வடிகட்டி,டின்ச்சராக அதாவது புண்களை ஆற்றும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.இத் தயாரிப்பு அடர் நிற குப்பிகளில் அடைத்து வைக்கப்பட்டால் பல நாட்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் அறிகிறோம்.
பட்டை மற்றும் பூக்களை அரைத்து விழுதாக காயம் பட்ட இடங்களில் பூசிவர, காயங்கள் மிக விரைவில் குணம் அடையும்.மேலும் முடக்கு வாதம் உள்ளவர்களின் மூட்டுகளில் தடவிவர நிவாரணம் தருவதாகவும் கூறப்படுகிறது.
தென்னாப்ரிக்கா மற்றும் ஈராக்கில் இம்மரங்கள் காணப்படுவதில்லை என்றாலும், தென்னாப்ரிக்காவின் சுளு என்ற மருத்துவ முறையிலும், ஈராக்கின் குருதிஷ் என்ற மருத்துவ முறையிலும் இக்காய்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.ஜமு எனப்படும் இந்தோனேசியா மருந்தில் பயன்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாக இக்காய்கள் உள்ளன. காய்ச்சல்,சளி போன்ற நோய்களை கட்டுப்படுத்த ஜமு உட்கொள்ளப்படுகிறது.வலம்புரி காயானது, இந்தோனேசியாவில் தயாரித்து விற்கப்படும் டோலக் ஆஞ்சின் என்ற ஒரு சளி மருந்தின் முக்கிய உட்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனாலேயே இந்தியாவில் இருந்து இந்தோனேசியா மிக அதிகப்படியாக இக்காய்களை இறக்குமதி செய்கிறது.
இவ்வாறு இயற்கையாக இக்காய்கள் விளையாத பல நாடுகளிலும்,பல மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் இந்த காய்களை நாமும் பயன்படுத்தி நலம் பெறுவோம்.

