001– திருநெல்வேலி டாக்டர் எஸ்.பிரேமசந்திரன் பேட்டி

மருத்துவர்களை கடவுளாக கொண்டாடியது ஒரு காலம். குடும்ப மருத்துவர்களாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தெரிந்திருக்கும். அன்பான பேச்சிலேயே பாதி நோய் பறந்து போய்விடும். மருத்துவம் வணிகமாகி, மருத்துவமனைகள் கார்பரேட் நிறுவனங்களாக மாறி விட்டன. உடம்புக்கு என்ன? என்று நோயாளியிடம் கேட்டு அறிவதற்கு பதிலாக, பல ஆயிரம் செலவழிக்க வைத்து எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகளை வைத்தே அறிந்து கொள்கிறார்கள். ஆனாலும், எங்கோ ஒரு மூலையில் அத்திப் பூத்தாற்போல, அரிதிலும் அரிதாக சில மனிதநேய மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்தான் திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் மக்கள் மருத்துவராக வலம் வரும் டாக்டர் எஸ்.பிரேமசந்திரன். மக்களோடு மக்களாக கலந்து பழகும் இவர், சிறந்த மருத்துவர் மட்டுமல்ல.. சிறந்த பாடகரும் கூட. தன் நேரத்தில், இசையோடு இயைந்து வாழ்கிறார். சர்க்கரை நோய் நிபுணராக சிகிச்சை அளித்து வரும் அவரை சந்தித்துப் பேசினோம்.. அதிலிருந்து..

சர்க்கரை நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்களைக் கூட விடுவதில்லையோ?

இது நவீன வாழ்க்கை முறையினால் வந்த பிரச்னை. விருப்பம்போல் சாப்பிடுவதும், உடல் உழைப்பு குறைவதும், எடை அதிகரிப்பதும், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓடுவது, சுற்றுச்சூழல் பாதிப்பு என இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

கணையத்தில் இன்சுலின் சுரக்கிறது. இதுதான் ரத்தத்தில் உள்ள குளுக்கோசைக் கட்டுப்படுத்தி உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. நாம் சாப்பிட்டதும் உணவிலுள்ள ‘கார்போ’ எனும் மாவுச்சத்து குளுக்கோசாக மாளி ரத்தத்தில் கலக்கிறது. உடனே இன்சுலின் சுரந்து ரத்த ஓட்டத்தில் கலந்து, ஒவ்வொரு செல்லுக்கும் செல்கிறது. செல்களில் இன்சுலின் ஏற்பான் எனும் பூட்டு இருக்கிறது. அந்தப் பூட்டைத் திறக்கும் சாவிதான், இன்சுலின். ஒருவருக்கு போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் சரியாக செயல்படவில்லை என்றாலோ ரத்த சர்க்கரை கூடுகிறது. அப்போது உடலில் வளர்சிதை மாற்றம் தடுமாறுகிறது. அந்த நிலையைத்தான் ‘சர்க்கரை நோய்’ என்கிறோம். பல்வேறு காரணங்களால் ‘இன்சுலின் எதிர்ப்புணர்வு’ ஏற்படுகிறது.

உடல் உழைப்பு குறைந்துவிட்டது, உடற்பயிற்சி இல்லை, உட்கார்ந்தே வேலை செய்வது அதிகமாகிவிட்டது. சோம்பல் நம்மை சொந்தம் கொண்டாடுகிறது. விளைவு.. உடலுக்குள் நுழையும் சர்க்கரை செலவாக வழியில்லாமல் ரத்தத்தில் தங்கி விடுகிறது. அதிகப்படியாக கணையம் வேலை செய்ய வேண்டி வருவதால் சர்க்கரை நோய் வந்து விடுகிறது.

சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்பது கொடுமையாக இருக்கிறதே.. வேறு வழியே இல்லையா?

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்தால் கண்கள், கால்கள், ரத்தக்குழாய்கள், சிறுநீரகம், இதயம், மூளை, நரம்பு போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். அப்போது பார்வை இழப்பு, கால் இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, நரம்பு பாதிப்பு, பக்கவாதம், கால் எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே சர்க்கரை நோய்க்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.

மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்படாதா? மாதா மாதம் நிறைய செலவு செய்ய வேண்டியிருப்பதாக பலரும் புலம்புகிறார்களே..?

முதுமையில் பல்வேறு நோய் பாதிப்புகள் வந்துவிட்டால் பல மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெற்றால், அவர் கூட்டு மருந்துகள் குறித்து உங்களுக்கு சிபாரிசு செய்வார். பக்கவிளைவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். மத்திய அரசின் மருந்தகங்களில் ‘ஜெனரிக்’ மருந்துகளை குறைந்த விலையில் செலவை பெரிய அளவுக்கு குறைக்க முடியும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பெரிய அரசு ஆஸ்பத்திரிகள் வரை சர்க்கரை நோய்க்க்கான மாத்திரைகளை இலவசமாகவே வழங்குகிறார்கள். அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஓட்டல் மற்றும் டீக்கடைகளில், ‘‘சர்க்கரை கம்மியா ஒரு காபி.. சர்க்கரை இல்லாமல் ஒரு டீ..’’ என்று கேட்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால் பலன் உண்டா?

நாம் சாப்பிடும் இட்லி, தோசை, பூரி, அரிசி சாதம், இனிப்பு பண்டம் என்று எல்லாமும் குளுக்கோசாகத்தான் மாறுகிறது. வேளாவேளைக்கு எவ்வளவு? எப்படி? எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்துதான் சர்க்கரையின் அளவு கூடுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளை கணக்கிட்டு, அவரவர் தேவைக்கு ஏற்ப உணவை திட்டமிட்டு எடுத்துக் கொண்டால் நல்லது.  உதாரணமாக காலையில் மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை சாப்பிடலாம். சிறிய இட்லியாக இருந்தால் நான்குகூட சாப்பிடலாம். ஒரு ‘கட்ரா’ இட்லியை ஃபுல் கட்டு கட்டிவிட்டு, சர்க்கரை குறைவாக அல்லது சர்க்கரை இல்லாமல் காபி குடிப்பதால் எந்த பலனும் இல்லை. அளவாக.. கூடுதல் கலோரி சேராத உணவாக எடுத்துக் கொண்டு, நார்மல் சர்க்கரை போட்ட டீ, காபியே குடிக்கலாம். சர்க்கரை இல்லாத காபி, டீ கஷாயமாகத்தான் இருக்கும்.

விருந்துக்கு போகும்போது.. எதை சாப்பிடுவது, எதை ஒதுக்குவது?

சர்க்கரையாளர்கள் விருந்துக்கு தாராளமாகப் போகலாம். ஆனால், சாப்பிடும்போது இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டும். வலது கையை சாப்பிடவும், இடது கையை வேண்டாம் என்று சொல்லவும் பயன்படுத்த வேண்டும். அறுசுவை உணவு, வகை, வகையான ஸ்வீட், பாயாசம், ஐஸ் க்ரீம் என்று சகட்டு மேனிக்கு சாப்பிடக் கூடாது. ஒருநாள்தானே.. சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு சர்க்கரை மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கவும் கூடாது. பருப்ப சாதம் கொஞ்சம், மோர் சாதம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பாயாசம் குடிக்கலாம். பருப்பு, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர் என்று எந்தக் குழம்பையும் விட்டு வைக்காமல் சாப்பிட்டுவிட்டு, பாதாம் கீர், பாயாசம் குடித்தால் சங்கடம்தான் வரும். எப்படி அளவான குடும்பம் நிறைவைத் தருமோ அதுபோல கலோரி அதிகமில்லாத அளவான உணவும் ஆரோக்கியத்திற்கு கேடு தராது.
விருந்தில் மட்டுமல்ல.. ஓட்டலில் சாப்பிடச் சென்றாலும் அளவாகத்தான் சாப்பிட வேண்டும். ஒரு பரோட்டாவில் 250 கலோரி இருக்கும். மூன்று, நான்கு பரோட்டா, மட்டன் கிரேவி, சிக்கன் வறுவல், ஆம்லேட் என்றெல்லாம் வரிசைப்படுத்தி சாப்பிட்டால் சர்க்கரை அதிகமாக உயர்ந்து உங்களுக்கு சங்கடத்தைதான் தரும். எடையும் கூடும்.

பழங்கள் சாப்பிடுவதற்கு தடை உண்டா? இதில் என்ன மாதிரியான அளவுகோல் இருக்கிறது?

சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் 200 கிராம் பழங்கள் சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடும்போது பழங்களை எடுத்துக் கொள்ளாமல், இடை உணவாக சாப்பிடலாம். ஊறவைத்து முளை கட்டிய தானியங்கள், சுண்டல், பழங்கள் அவசியம் சாப்பிட வேண்டும். உணவில் சாதம், கார்போஹைட்ரேட் உள்ள இட்லி, தோசை என எதுவாக இருந்தாலும் அவற்றை குறைவாக எடுத்துக் கொண்டு, காய்கறிகள், கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு வைட்டமின்கள், மினரல் சத்துக்கள் மிக அவசியம். இவை காய்கறி மற்றும் பழங்களில் மட்டுமே அதிகளவில் நிறைந்துள்ளன. தக்காளி, வெள்ளரி, கேரட் சேர்த்து ‘சாலட்’ ஆக தயாரித்து சாப்பிடுவதும் நல்லது. இதுபோன்று சாப்பிட்டால் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியமே இருக்காது. மலச்சிக்கல், வயிற்று தொந்தரவுகள் குறையும்.
தாழ் சர்க்கரை பாதிப்பு குறித்து சொல்லுங்கள்..

உணவை சரியாக எடுத்துக் கொள்ளாத நேரத்திலோ, வயிற்றுப்போக்கு இருக்கும்போதோ, உடல் உழைப்பு அதிகமாகிவிட்டாலோ, வழக்கமான மாத்திரை எடுத்துக் கொண்டால் தாழ் சர்க்கரை வரலாம். கை,கால் நடுக்கம், கையெழுத்து போட முடியாத நிலைவரும். அதுபோன்ற நேரத்தில் கொஞ்சம் இனிப்பு சாப்பிட வேண்டும். குளுக்கோஸ் சாப்பிடலாம். மூளை செயல்பட முடியாமல் போகும் ஆபத்தும் இருப்பதால், குளுக்கோ மீட்டர் வாங்கி வைத்துக் கொண்டு, அவ்வப்போது சர்க்கரை ஏற்றத்தாழ்வை கவனித்து, அதற்கு ஏற்றாற்போல் மருந்தையும் உணவையும் உட்கொண்டு, உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.

காலையே இழக்க வேண்டிய நிர்பந்தம் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறதே..?

நரம்பு மண்டலத்தின் கடைசிப் பகுதி கால்தான். ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். காலில் லேசாக புண், காயம் ஏற்பட்டால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்துவிட்டால் ஆறாத புண் ஏற்பட்டு அபாய நிலைக்குத் தள்ளப்படலாம். சர்க்கரை கட்டுப்பாடு முக்கியம். சின்ன புண்ணோ, காயமோ ஏற்பட்டால் தாமதமில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொண்டால் காலை இழக்க வேண்டிய நிலையை தவிர்க்கலாம்.
இன்சுலின் சார்ந்தவராக மாறும்போது, மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகிறார்களே..

‘இன்சுலின்’ என்பது மாபெரும் மருத்துவ கண்டுபிடிப்பு. சர்க்கரையின் அளவுக்கு ஏற்ப நாமே மருத்துவரின் ஆலோசனைப்படி இன்சுலின் போட்டுக் கொள்ள முடியும். சர்க்கரையின் மோசமான பாதிப்புகளில் இருந்து காப்பது இன்சுலின்தான். என்னிடம் வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு, கட்டாயம் இன்சுலின் தேவை எனும்பட்சத்தில், அவர்களே இன்சுலினை எடுத்துக் கொள்ள பயிற்சி அளிப்பேன். காலை உணவுக்கு முன்பு 130ம், சாப்பாட்டிற்கு பிறகு 180க்கும் குளுக்கோஸ் இருக்கிற மாதிரி நிர்வகித்துக் கொண்டால் நலமாக வாழலாம். இன்சுலின், நலமாக வாழ உதவுகிறது.

மருத்துவ காப்பீடு திட்டம் பற்றி?

தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டத்தக்க, சிறந்த திட்டம். தேவைப்படுபவர்கள் தனியார் இன்சூரன்ஸ் திட்டத்திலும், முழு விவரங்களையும் ஊன்றி கவனித்து படித்துப் பார்த்து சேரலாம். திடீரென்று வரக்கூடிய மருத்துவ செலவீனங்களை இன்சூரன்ஸ் மூலம் எதிர்கொள்ளலாம். பெரிய அளவிலான சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது, உடனடியாக பணக்காரர்களாலேயே பணம் புரட்ட முடியாது எனும்போது, கீழ் நடுத்தர, இடை நடுத்தர, உயர் நடுத்தர மக்களைப் பற்றிக் கூறவே வேண்டாம். நகையை, சொத்தை அடகு வைப்பது அல்லது விற்பது, வட்டிக்கு வாங்குவது போன்ற நிர்பந்தங்கள் இல்லாமல் அவசர மருத்துவ செலவுகளை சமாளிக்க அனைவரும் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் திடமான கருத்து.

தகவல் தொடர்புக்கு:
டாக்டர் எஸ்.பிரேமசந்திரன்
1ஏ, ஹமீம்புரம், மேலப்பாளையம்,
திருநெல்வேலி.
கைப்பேசி:9444452496
&சந்திப்பு: சுபாஷ், குணா