
தென்னை என்றதும் நமக்கு உடனடியாகத் தோன்றுவது தேங்காய்ப் பயன்பாடு தான். தேங்காயையும் சட்னி,குழம்பு என்பதற்கு மேலாக தேங்காய் எண்ணைப் பயன்பாடு வரை அறிந்து வைத்துள்ளோம். ஆனால்,தேங்காய்ப் பால் எத்தனை அற்புதமான பானம் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
தேங்காயை துருவிப் போட்டு மிக்ஸியில் இட்டு நீர் சேர்த்து அரைத்துப் பால் அளவிற்கு அடர்த்தியாக வடித்து எடுத்தால் தேங்காய்ப் பால் தயார். பலருக்குத் தேங்காய்ப் பால் ஒவ்வாமை இருக்கலாம். காரணம் அவர்களது செரிமானத் திறன் குன்றி வயிற்றில் அமிலக் கூறுகள் மிகுந்து விட்டது என்று பொருள். அங்கே பிரச்னை தேங்காய்ப் பாலில் இல்லை.உடலின் செரிமானத் திறனில் தான் என்று புரிந்து கொண்டு செரிமானத்தை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தேங்காய்ப் பால் ஒவ்வாமை இல்லாதவர்கள் அடிக்கடி இதனை எடுத்துக் கொள்ளலாம். வயிற்றைச் சுத்தமாக்கும்.மலச் சிக்கல் பிரச்னையை நீக்கும்.எலும்பினை வலுப்படுத்தி மஞ்சையை தூய்மையாக உருவாக்குவதன் மூலம் புதிய ரத்தம் மிக வேகமாகவும், தரமானதாகவும் உற்பத்தி செய்யும்.
தேங்காய்ப் பாலுடன் கருப்பட்டி சேர்த்து அருந்தலாம். தேங்காய்ப்பாலுடன் இனிப்புத் தன்மை உள்ள பழங்களைச் சேர்த்து அரைத்து மில்க் சேக்காக ஒருவேளைச் சிற்றுண்டியாகவே எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக பப்பாளி அல்லது சப்போட்டா மில்க் சேக் தேங்காயப்பால் கொண்டு தயாரித்து அருந்தினால் காலைச் சிற்றுண்டிக்கு மிகவும் போதுமானதாக இருக்கும்.அத்தோடு வாயுத் தொல்லை வயிற்றுப் பருமன், அடிக்கடி ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற குறைபாடுகள் இத்தகைய தேங்காய்ப்பால் மில்க் சேக் அருந்தி வர மிக வேகமாகக் குணமடைவதை உணர முடியும். தேங்காய்ப் பாலையும் சிற்றுண்டியையும் ஒரே நேரத்தில் எடுப்பதைத் தவிர்த்து தேங்காய்ப் பாலை மட்டும் எடுத்தால் தான் முழுப் பலனைப் பெற முடியும்.
கேரட், பீட்ரூட் போன்றவற்றோடு தேங்காய் சேர்த்து அரைத்துக் குடித்தால் ரத்த சிவப்பணுக்களின் அளவு விரைவிலேயே அதிகரிக்கும். தேங்காய்ப் பால் எடுக்கும் போது சமைத்த உணவை முடிந்தளவு தவிர்த்து விடுவதே நல்லது.
-பவித்ரன்
ஹெல்த் அண்ட் பியூட்டி(Health and beauty)

