
டாக்டர் அ.ஃபரூக் அப்துல்லா,MD.
நாம் பலரும் நமது உறவினர்கள், நண்பர்களை அவர்களது உடல் மற்றும் அங்கங்களை வைத்து பகடி செய்வதை வாடிக்கையாகவே கடைபிடித்து வருகிறோம்.
நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஒருவரது அங்கங்கள், உடல் கூறு,தோலின் நிறம்,உடை உடுத்தும் பாங்கு,நடக்கும் விதம் போன்றவற்றை வைத்து பகடி செய்வது பாடி ஷேமிங் ஆகும்.
குண்டன்,குண்டச்சி,
குந்தாணி,ஒட்டடக்குச்சி,சோடாபுட்டி,
எலும்பன்,எலும்பி,
பரட்டத்தலை,சொட்ட,
வெள்ளச்சி,கருப்பன்,
கருவாச்சி, அமாவாசை, மண்ணாங்கட்டி,மக்கு என்று பற்பல சொற்களை சுட்டி அழைப்பது அல்லது கேலி பேசுவது என்பது தொடர்ந்து நமது குடும்பமும் சரி, சமூகமும் சரி தவறென்று சுட்டாமல் அனைவரும் செய்து வரும் பழக்கமாக இருக்கிறது.
நமக்குத் தெரிந்தவர் தெரியாதவர் யாராயினும் நமது நாவை காத்து அவர்களது மாண்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதற்காகவெல்லாம் பாடி ஷேமிங்கை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள்.அவர்களுக்கென பிரத்யேகமான வாழ்வை அவர்கள் வாழ்ந்து வருவார்கள். நிச்சயமாக ஒருவரைப் போல் மற்றொருவர் இல்லை,ஒருவர் வாழும் வாழ்க்கையைப் போல இன்னொருவர் வாழ்வதில்லை. எனவே,நம்மைப் போலவே மொத்த உலகமும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
ஒருவர் உடல் பருமனாக இருக்கிறார் என்பது தான் நமக்குத் தெரியும்.ஆனால், அதற்குப் பின்னால் அவர் ஏன் பருமனாக இருக்கிறார்,அதைக் கட்டுக்குள் வைக்க அவர் முயற்சிகள் செய்தாரா?என்பது நமக்குத் தெரியாது.
ஒருவர் ஒல்லியாக இருப்பதாலோ,குண்டாக இருப்பதாலோ, கருப்பாக இருப்பதாலோ,
சொட்டையாக இருப்பதாலோ எந்தத் தவறுமில்லை.
நமது கண்களிலும், அது கொண்ட பார்வையிலும், சிந்தனையிலுமே தவறுண்டெனக் கொள்க.நிச்சயம் ஒரு மனிதனின் சொற்கள்,செயல்கள் இன்னொரு மனிதனை பாதிக்கிறது.நல்ல சொற்கள்,செயல்கள், நல்ல விளைவுகளை இன்னொரு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது.தீய சொற்களும், செயல்களும், இன்னொரு மனிதனுக்கு துன்பத்தை விளைவிக்கிறது. எக்காலத்திலும், பிறரது உடல் சார்ந்த ஊனங்களையும் பலகீனங்களையும் பெரிதுபடுத்தி பேசுவது தவறு.
யாரும் ஒருவரது சருமத்துக்கும்,உடல் வாகுக்கும், கேசத்துக்கும், உடைக்கும் மரியாதை வழங்கத் தேவையில்லை. மாறாக அவரது கல்வி,சிந்தனை, செயல் போன்றவற்றை வைத்தே மதிப்பிடக் கற்றுக் கொடுப்போம்.

