குழந்தை, எதன்மீதும் கவனமில்லாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது. சுழலக்கூடிய பொருட்களின்மீது ஆர்வமாய் இருப்பது, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எவரிடமும் ஒட்டாமல், பெருங்கூட்டத்திலும் தனி ஆளாக இருப்பது முதலியவை ஆட்டிசத்தின் (Autism) அடையாளங்கள் ஆகும்.

வருந்துவதில் தவறில்லை

உங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று கேட்ட உடனேயே உங்கள் மனதை பயம் கவ்வக்கூடும்.நமது குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? நண்பர்கள் இருப்பார்களா? திருமணமாகுமா? முதலில் பேசவாவது முடியுமா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழும்பும். உங்கள் குழந்தையைப்பற்றிய கனவுகள் நொறுங்கும் நொடியில் ஏன் என்ற ஒற்றைச் சொல் கதறலாய் வெளிப்படலாம்.
குமுறுவதில் தவறேயில்லை. ஆனால் குமுறலை ஒரு கால வரையறைக்குள் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. ஆற்றலையெல்லாம் அழுகையில் வீணடிக்காமல், உங்கள் குழந்தையை வாழ்க்கைக்குத் தயார் செய்ய ஆரம்பியுங்கள்.

குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் குறை இருப்பதாக நினைக்கும் பெற்றோர், மருத்துவரின் ஆலோசனையை பெறுவதற்கு செல்ல சிறந்த இடம் நிப்மெட். இது சென்னைக்கு அருகில் முட்டுக்காடு என்னும் இடத்தில் இருக்கிறது.(சென்னை பாண்டிச்சேரி வழியில்)

மத்திய அரசின் மாற்றுத்திறனாளி விவகாரங்கள் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகத்தின் சார்பில் 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த நிப்மெட் (NIEPMD-National institute of Empowerment of Persons with Multiple Disabilities).

ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுடையோரின் மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட முதல் நிறுவனம்.குழந்தைகளின் தேவைக்கான பயிற்சிகள் இங்கே வழங்கப்படுவதோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முழுக்க முழுக்க மத்திய அரசு நிறுவனம் என்பதால்,தங்களின் குழந்தைக்கு ஏதோ ஒரு குறைபாடு இருப்பதாக சந்தேகிக்கும் பெற்றோர் இங்கே ஒரு விசிட் அடித்து மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய பயிற்சி வகுப்புகள் எல்லாமே இலவசம்! ரத்தப் பரிசோதனை,சி.டி. ஸ்கேன் மாதிரியான வேறு வகையான பரிசோதனைகள் தேவைப்பட்டால், அதற்கும் குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதுவும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள், வருமானச் சான்றிதழின் நகலைக் கொடுத்தால், பரிசோதனைகளுக்கன கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

சிகிச்சைக்கு நீண்ட தூரத்தில் இருந்து வருபவர்கள் தங்கிக் கொள்ள குறைந்த கட்டணத்தில் அறைகள் தருகிறார்கள். வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தால் இலவசமாக தரப்படுகிறது.

தகவல் தொடர்புக்கு:
நிப்மெட், கிழக்கு கடற்கரைச் சாலை,முட்டுக்காடு, கோவளம் அஞ்சல், சென்னை-603112.
தொலைபேசி எண்கள்: 044- 27472113, 044-27472046
(தங்கும் இடம் தொடர்பாக தொடர்புகொள்ள: 99403 31725)

-பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.