
சைவ உணவினருக்கு நல்ல காய்கறிகள், கனிகள் சாப்பிடத் தவறினால், உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 22 கிராம் நார்ப்பொருட்கள் நமக்கு தேவை. ‘வெந்தயம்’ சைவ உணவுகளில் அதிக நார்ச்சத்து கொண்ட பொருள். குறிப்பாக, கரையும் நார்ப் பொருள்தான் இதயத்தின் கொழுப்புப் படியாத தன்மையைத் தரும். கரையாத நார்ப்பொரும். மலச்சிக்கலை நீக்குவதுடன், ரத்த சர்க்கரை அளவைக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். வெந்தயம் இந்த இரண்டு வகை நார்ப்பொருட்களையும் அதிக அளவில் கொண்டது. சாம்பார்,இட்லி, சப்பாத்தி, என அத்தனை உணவிலும் வெந்தயம் சேர்ப்பது புத்திசாலித்தனம். நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு ஆகிய முக்கிய மூன்று எதிரிகளுக்கும் வெந்தயம் ஒரு மருந்தாகும். இது ஒரு பங்சனல் ஃபுட் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.
மடி, ஆசாரம் என பூண்டு, வெங்காயத்தை ஒதுக்குவோருக்கு ஒரு வேண்டுகோள்!
உங்கள் ரத்தக்கொழுப்பை சீராக வைத்துக்கொள்ளவும், இதயம் என்றும் பழுதின்றி இயங்கவும் இந்த இரண்டும் கண்டிப்பாக உணவில் இடம்பெற வேண்டும். அதிலும் குறிப்பாக சிறு பூண்டு,சிறு வெங்காயம்தான் உங்கள் முதல் தேர்வாக இருக்க வேண்டும். பல்லாரி வெங்காயத்தைவிட சிறு வெங்காயம் 2600 மடங்கு அதிகம் நற்கூறுகள் கொண்டது என இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
மலைப்பூண்டைக் காட்டிலும் சிறு பூண்டும் அதன் சத்துக்களில் சிறந்தது. Allicin எனும் அதன் சத்து மாரடைப்பைத் தடுப்பதுடன் ஒரு சிறந்த எதிர் நுண்ணுயிரியும்கூட. என்ன… கொஞ்சம் மெனக்கிட வேண்டும். காப்பாற்றப்படுவது உங்கள் இதயம் அல்லவா?

