
– டாக்டர் பாண்டித்துரை
உடலுறுப்புகளில் உள்ள உயிரணுக்கள் கட்டுப்பாடற்ற முறையில் வளரத் தொடங்குவதே எந்த வகைப் புற்றுநோய்க்குமான அறிகுறியாகும். பெண் உடலிலுள்ள சினைப்பை மற்றும் இனப்பெருக்கச் சுரப்பிகளில் சினைப்பை புற்றுநோய் தோன்றும். சினைப்பைகள் இடுப்பு பகுதி உறுப்புகள் என்பதால், முற்றும் வரை இந்நோய் பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை. இந்தியாவில் பெண்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களுள் சினைப்பை புற்றுநோய் 4வது இடம் வகிக்கிறது.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், வயிறு வீக்கம், தொடர் அமிலப் பிரச்னைகள், குறைந்த அளவு உணவு உட்கொண்ட நிலையிலும் வயிறு நிறைந்த இயல்பற்ற நிலை, வழக்கத்துக்கு மாறான பெண்குறி ஒழுக்கு மற்றும் ரத்தக்கசிவை இந்நோய்க்கான அடையாளமாக கூறலாம்.

கண்டறிவது எப்படி?
இடுப்பு பகுதி பரிசோதனை மூலம் பெண்களை தாக்கும் சில புற்றுநோய்களை அறியலாம். சினைப்பைகள் மற்றும் கருப்பையின் அளவு, வடிவமைப்பு ஆகியவற்றை மருத்துவர் பரிசோதித்து அறிந்து கொள்வார்.
வயிறு மற்றும் இடுப்பு பகுதி அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் ஒலி அலைகளைப் பயன்படுத்தி சினைப்பையில் உள்ள கட்டியை கண்டறியலாம். இருப்பினும் ஒவ்வொரு கட்டியும் புற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், சிடி/எம்ஆர்ஐ பரிசோதனை மூலமும் இதை அறியலாம்.
சிஏ & 125 ரத்தப் பரிசோதனையின் மூலமும் இதை அறியலாம். இந்த சோதனை ரத்தத்தில் புரதத்தின் அளவைக் கணக்கிடும் பரிசோதனை ஆகும். சினைப்பை புற்றுநோயுள்ள பெண்களுக்கு சிஏ&125 அளவுகள் 500க்கும் அதிகமாக 1000&2000 வரை இருக்கும்.
திசுப் பரிசோதனையில் இதை அறியலாம். சினைப்பை புற்றுநோய் பாதிப்பு இருப்பதை திசு பரிசோதனை மூலம் மட்டுமே மருத்துவர் உறுதிப்படுத்த முடியும்.
பெண்களுக்கான சினைப்பை புற்றுநோய்க்கு மரபியலே காரணமெனில் எதையும் மாற்ற இயலாது. சினைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை ஆகும்.
நோய் மேலாண்மை
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது சினைப்பை புற்றுநோய் வராமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பலன்களைத் தரும். 30க்கு அதிகமான பிஎம்ஐ இருப்பவர்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய கட்டத்திலேயே இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம்.
35 வயதுக்கு மேல் கருவுற்ற மற்றும் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். கருத்தரித்தலை தவிர்க்கும் பெண்கள் கருத்தடைக்கு வாய் வழி மாத்திரைகளை எடுத்துக் கொள்வது சினைப்பை புற்றுநோய் பாதிப்பை குறைக்கும்.
பெண் குறியைச் சுற்றி டால்கம் பவுடர் பயன்படுத்துவது சினைப்பை புற்றுநோய் பாதிப்பை அதிகப்படுத்தும என்பதால் பல மருத்துவ நிபுணர்கள் அதை தவிர்க்கும்படி ஆலோசனை கூறுகின்றனர்.
புற்றுநோய் உயிர்க்கொல்லி மற்றும் கவலை அளிக்கும் நிலை என்றாலும் மற்ற புற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது சினைப்பை புற்றுநோயை உரிய சிகிச்சை மூலம் மேலாண்மை செய்யலாம் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்நோய் இருப்பதை தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் இதிலிருந்து விடுபட்டு வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை கண்டறிய ஆரம்பத்திலேயே பரிசோதனைகள் செய்து கொள்வது கட்டாயமாகும்.

