
– டாக்டர் வி.மோகன், சர்க்கரை நோய் நிபுணர்
சென்னை ராயப்பேட்டையில் இயங்கிவரும் நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர் வி.மோகன் பங்கேற்று ‘சர்க்கரை நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி’ என்பதை விளக்கினார்.
அவரது பேச்சின் சுருக்கம்:
உலக அளவில் சர்க்கரை நோயாளர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது. முன்பைவிட சர்க்கரை நோய் பாதிப்பு இளம் வயதினருக்கும் வருகிறது. சர்க்கரை நோயை மருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சையின்படி கட்டுப்படுத்திக் கொண்டால் 100வது பிறந்தநாளை தாராளமாக கொண்டாடலாம்.
எப்படி சாப்பிட வேண்டும்?
சர்க்கரை நோயாளர்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க கற்றுக் கொண்டால் எளிதாக நோயை வெல்லலாம். ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் தட்டில், அரைப்பங்கு காய்கறிகள் இருக்க வேண்டும். கால் பகுதி கொண்டைக்கடலை, பருப்பு போன்ற தானிய, கொட்டை வகைகள் இடம்பெற வேண்டும். கால் பகுதி மட்டுமே சோறு இருக்க வேண்டும். முடிந்தவரை சோறு சாப்பிடும் அளவை குறைக்க வேண்டும். குறைந்த அளவில் பழங்களை சாப்பிடலாம். மா, பலா, வாழையை என்றைக்காவது ஒருநாள் சில துண்டுகள் சாப்பிடலாம்.
‘சுகர்லெஸ் சுவீட்’ சாப்பிடலாமா?
இனிப்பு சாப்பிடக்கூடாது. இனிப்பு சுவை தருகிற செயற்கை இனிப்பு கலந்த உணவுகளை, டீ, காபியை அருந்தலாம். சர்க்கரை நோயாளிக்காக சில சுவீட்கள் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை மிகக் குறைவாக சாப்பிடலாம். அந்த ஸ்வீட்களில் இனிப்புக்காக செயற்கை இனிப்புகளை சேர்த்திருப்பார்கள். ஆனால், அதில் கலந்திருக்கும் நெய், டால்டா போன்றவை சர்க்கரை நோயாளர்களுக்கு நல்லதல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி
தினமும் 30 நிமிடம் முதல் ஒருமணிநேரம் வரை ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் ஓரிரு நாட்கள் விடுபட்டாலும் பரவாயில்லை. தூக்கமும், ஓய்வும் முக்கியம்.
தினசரி 10 ஆயிரம் அடி நடைபோட்டால் சர்க்கரையும் குறையும்; இதயமும் பலமடையும். இதை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரேநாளில் பல பகுதியாக பிரித்தும் நடைப்பயிற்சியில் ஈடுபடலாம். நடைப் பயிற்சியால் ரத்த ஓட்டம் சீராகும்; நரம்புகள் பலம் பெறும்; மனம் லேசாகும். மன உளைச்சல் குறையும்.
மருந்துகள்
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். இந்த நோய் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்ள வேண்டும்.
பக்கவிளைவுகள்
இந்த நோயால் உயிருக்கு ஆபத்து இல்லை. சர்க்கரையை சரியாக கட்டுப்படுத்தாவிட்டால் கண், கால், இதயம், சிறுநீரகம் உட்பட உடலில் முக்கியமான பாகங்களை பாதிக்கும். இந்தியாவில் உள்ள சிறுநீரக செயல் இழப்பு நோயாளிகளில் 50 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். கண் பார்வை இழப்பில் பெரும்பகுதி சர்க்கரை நோய்தான் காரணம். காலை இழப்பதற்கும் சர்க்கரை நோய் காரணமாக அமைந்து விடுகிறது.
எனவே இந்த நோய் குறித்து மிகுந்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தியானம், யோகா போன்ற மன அமைதிக்கான பயிற்சிகள் முக்கியம். நல்ல பொழுதுபோக்கும் தேவை. குறைவாக சாப்பிட்டு, நிறைவாக நடைப்பயிற்சி செய்து, போதுமான அளவில் தூங்கினால் ஆரோக்கியம் மேம்படும் என்றார்.
மருத்துவ சேவையில் உள்ள நிறுவனங்கள் இதுபோன்ற மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும். ‘நியூபெர்க்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலுவுக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.
செயற்கை இனிப்பை பயன்படுத்துவது எப்படி?
சர்க்கரை நோயாளர்கள் செயற்கை இனிப்பு சாப்பிடுவது தவறல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ‘சுகர்ஃப்ரீ’ என்று கடைகளில் விற்பனை ஆகிறது. இந்த செயற்கை இனிப்பை எப்படி சேர்ப்பது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் மிகச் சூடாக உள்ளவற்றில் செயற்கை இனிப்பை சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் அது தன் இனிப்புத் தன்மையை இழந்து விடும். சூடான காபி, டீ போன்றவற்றை அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு சேர்க்க வேண்டும். பாயாசம், கீர் போன்றவைகளை வீடடில் தயாரிக்கும்போது, சர்க்கரை நோயாளர்களுக்கு என்று தனியாக எடுத்து வைத்து விட்டு பிறகு அதில் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரையாளர்களுக்கு என்று எடுத்து வைத்த பாயாசமோ, கீரோ ஆறியவுடன் அதில் செயற்கை இனிப்பை சேர்க்கலாம்.

