அக்குபஞ்சர் சிகிச்சையாளர்கள் சங்கம் சார்பில் மாநில பிரதிநிதித்துவ பேரவை கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை ‘ஆஷா நிவாஸ்’ மையத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஹீலர் இயற்கை குமார் தலைமை தாங்க மாநில இணைச்செயலாளர் ஹீலர் லோகநாதன் கொடியேற்றினார். மாநில பொதுச்செயலாளர் ஹீலர் ரமேஷ்பிரபு துவக்கவுரை நிகழ்த்தினார். மாநிலத்துணை பொதுச்செயலாளர் ஹீலர் மாணிக்கம், இணைசெயலாளர் ராஜநரசிம்மன், பொருளாளர் சம்சுதீன், சென்னை மண்டல செயலாளர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். உளவியல் பேராசிரியரும், ஹெல்த் அண்ட் பியூட்டி இதழின் ஆசிரியருமான டாக்டர் ஜி.ராஜமோகன் வாழ்த்துரை வழங்கினார்.

‘‘வலி நிவாரணம் தருவதில் அக்குபஞ்சர் சிகிச்சை நல்ல மருத்துவம். இந்த சிகிச்சை முறையை கற்றுத் தேர்ந்தவர்கள் மக்கள் பணி செய்ய எமது மனமார்ந்த வாழ்த்துகள். எனக்குத் தெரிந்த புற்றுநோயாளியின் மரண வலியை நீக்கியது அக்குபஞ்சர். உலக சுகாதார அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த சிகிச்சை முறையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்’’ என்று குறிப்பிட்டார் டாக்டர் ஜி.ராஜமோகன். கவிரயசர் கண்ணதாசன் மகன் ஹீலர் கண்மணி சுப்பு, ‘மனித உடலும் நீர்நிலை திரவங்களும்’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

மாற்று மருத்துவர்கள் தங்களது அனுபவங்களை பதிவு செய்வதோடு மருத்துவர்களோடு அவ்வப்போது கலந்துரையாடி மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். நமது இதழ் சார்பில் இதுபோன்ற முயற்சிகளை பாராட்டி வாழ்த்துகிறோம்.

-சேகர்