பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய சார்ட் பேப்பராக இருந்தால் நல்லது. மது அருந்த ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு… ஒரு வருடத்துக்கு என்று நீங்கள் குடித்த மொத்த வருடங்களுக்கும் செலவான தொகையை கணக்குப் போட்டு, அதை கொட்டை எழுத்தில் எழுதுங்கள். அந்தத் தொகை உங்கள் கையில் இப்போது இருந்தால், எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அந்தப் பணத்தில் சின்னதாக ஒரு வீடு அல்லது நிலம் வாங்கி இருக்கலாம். 
 
மஞ்சள் கயிற்றை மட்டுமே கழுத்தில் அணிந்து இருக்கும் உங்கள் மனைவிக்கு நகை வாங்கி கொடுத்து இருக்கலாம். நிறைய மதிப்பெண்கள் எடுத்தும் பணப் பற்றாக்குறையால் உயர் கல்வி நிறுவனத்தில் சேர்க்க முடியாமல்போன உங்கள் பிள்ளையை நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்து இருக்கலாம். இதில் எதையாவது உங்களால் செய்ய முடிந்து இருக்குமானால், அவற்றை எல்லாம் எழுதுங்கள். 
 
இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் கடன் எவ்வளவு என்பதையும் எழுதுங்கள். மதுப்பழக்கம் காரணமாக மனைவி விலகிப் போயிருக்கலாம். குழந்தைகள் பிரிந்து இருக்கலாம். பெற்றோர் விலகி இருப்பார்கள். சுற்றங்கள் சுணங்கி இருக்கும். சொத்துக்கள் கரைந்து இருக்கும். அவற்றையும் அந்தப் பேப்பரில் எழுதுங்கள்.
 
மது அருந்தியதால் பலமுறை அவமானப்பட்டு இருப்பீர்கள். நிறையப் பொய் சொல்லி இருப்பீர்கள். சிலநேரம் போதை அதிகமாகி தெருவில் விழுந்தும் இருப்பீர்கள். இவற்றை எல்லாம் அந்தப் பேப்பரில் எழுதுங்கள். மது அருந்தும் உங்களையும் மதுப்பழக்கம் இல்லாத ஆரோக்கியமான ஒருவரையும் உடல் ரீதியாக கணக்குப் போட்டுப் பாருங்கள். இயற்கையாக மரணம் நேரும் பட்சத்தில் அவரைவிட உங்களுக்கு ஆயுட்காலம் 10 முதல் 20 ஆண்டுகள் குறைவு என்பதையும் எழுதிக்கொள்ளுங்கள்.
 
 இதை உங்கள் தனி அறையில் ஒட்டிவையுங்கள். யாராவது பார்ப்பார்கள். அவமானமாக இருக்கும் என்றால், அடிக்கடி உங்கள் கண்ணுக்கு மட்டும் படும்படி எங்கேனும் ஒரு இடத்திலோ, மடித்து உங்கள் கைப்பையிலோ வையுங்கள், குடிக்கத் தோன்றும் நேரத்தில் எல்லாம் அதை எடுத்துப் பாருங்கள்.
 
குடிக்க கூடாது என்று ஒருவர் திடமாக முடிவுக்கு வர வேண்டும். அப்போதுதான் குடியிலிருந்து மீள முடியும்